‘இந்தியாவில் பணியிடங்களில் பாலின பாகுபாடு காரணமாக பெண்கள் பாதிப்பு’ - அறிக்கை!
இந்தியாவில் ஐந்தில் நான்கு பெண்கள், அதாவது 85 சதவீதத்தினருக்குப் பாலின பாகுபாடு காரணமாக பதவி உயர்வு, சம்பள உயர்வு, வேலை வாய்ப்பு போன்றவை மறுக்கப்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றன.
பாலினம் சார்ந்த பாகுபாடுகள் களையப்படுவதற்கான முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும்கூட ஆசிய பசபிக் நாடுகள் முழுவதும் வேலைக்குச் செல்லும் பெண்கள் பாலினம் சார்ந்த பாகுபாடுகளை சந்திப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆசிய பசபிக் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிகளவிலான பெண்கள் பணியிடங்களில் பதவி உயர்வு பெறுவதற்கு பாலினம் சார்ந்த பாகுபாடுகள் தடையாக இருப்பதாக லிங்க்ட்இன் ஆப்பர்சுனிட்டி இண்டெக்ஸ் 2021 சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் ஐந்தில் நான்கு பெண்கள், அதாவது 85 சதவீதத்தினருக்குப் பாலின பாகுபாடு காரணமாக பதவி உயர்வு, சம்பள உயர்வு, வேலை வாய்ப்பு போன்றவை மறுக்கப்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 66 சதவீதம் பேர் தங்கள் பெற்றோர்களின் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் பாலின சமத்துவம் மேம்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர். இருப்பினும் வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் தாய்மார்களில் பத்தில் ஏழு பேருக்கும் அதிகமானோர் தங்களது பணி வாழ்க்கையில் வளர்ச்சியடைவதற்கு குடும்பப் பொறுப்புகள் தடையாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இந்தத் தகவலும் அறிக்கை மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் தாய்மார்களில் மூன்றில் இரண்டு பேர் தங்களது குடும்பப் பொறுப்புகள் காரணமாக பணியிடத்தில் பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளனர்.
லிங்க்ட்இன் 2021-ம் ஆண்டு ஜனவரி 26-31 தேதிகளில் ஒரு ஆய்வு நடத்த தனியார் சந்தை ஆய்வு நிறுவனமான GfK நிறுவனத்தை நியமித்தது.
18-65 வயதுடையவர்களிடையே ஆன்லைன் மூலம் கணக்கெடுப்பு நடந்தது. ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், மலேசியா, ஃபிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் என ஆசிய பசபிக் பகுதிகள் முழுவதும் 10,000-க்கும் மேற்பட்டோர் பதிலளித்தனர்.
இந்த கணக்கெடுப்பில் இந்தியாவில் இருந்து 2,285 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் 1,223 பேர் ஆண்கள், 1,053 பேர் பெண்கள்.
”பெருந்தொற்று சமயத்தில் பணியிடத்தில் பாலின சமத்துவமின்மை, கூடுதல் வீட்டுப் பொறுப்புகள் போன்றவை பெண்களை கடும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது,” என்கிறார் லிங்க்ட்இன், Talent and Learning Solutions, இயக்குநர் ருச்சி ஆனந்த்.
பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வெவ்வேறு பின்னணி கொண்டவர்களை உள்ளடக்கிய சூழலை உருவாக்கவேண்டும். அதற்கேற்றவாறு கொள்கைகளை மாற்றியமைக்கவேண்டும் என்கிறார் ஆனந்த்.
அவர் மேலும் கூறும்போது,
“குறைவான பணி நேரம், நெகிழ்வான பணி நேரம், பணியிலிருந்து சிறு இடைவெளி, திறனை மேம்படுத்திக்கொள்ளவும் கற்கவும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்வது திறமையான பெண் ஊழியர்களை நியமிக்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் உதவும்,” என்கிறார்.
ஐந்தில் நான்கு இந்தியர்கள் பெருந்தொற்று காரணமாக எதிர்மறையான தாக்கத்தை சந்தித்தாகத் தெரிவித்துள்ளனர். பத்தில் ஒன்பது பேர் பணி நிறுத்தம், சம்பளக் குறைப்பு, பணி நேரக் குறைப்பு என கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பொருளாதாரச் சூழல் மேம்படும் என எதிர்பார்ப்பதாக 65 சதவீத இந்திய தொழில்முறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போதைய சூழலில் கற்றலும் திறன் மேம்பாடும் இன்றியமைததாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 57 சதவீத இந்தியர்கள் செயற்கை நுண்ணறிவு, க்ளௌட் கம்ப்யூட்டிங், பிசினஸ் அனாலிடிக்ஸ் போன்ற புதிய வன் திறன்களையும் படைப்பாற்றல் சிந்தனை, மென் திறன், சிக்கல் தீர்க்கும் திறன், நேர மேலாண்மை போன்ற மென் திறன்களையும் கற்றறிவதில் ஆர்வம் காட்டுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.