இந்தியாவின் முதல் மோட்டார் சக்கர நாற்காலி: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் ஐஐடி மெட்ராஸ்!
வெளிநாட்டு சந்தையில் கிடைப்பதைவிட விலை குறைவு!
ஐஐடி மெட்ராஸ் இந்தியாவின் முதல் உள்நாட்டு மோட்டார் சக்கர நாற்காலி வாகனத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் விற்கப்படும் மொத்த 3 லட்சம் சக்கர நாற்காலிகளில் 2.5 லட்சம் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஒப்பிடக்கூடிய அம்சங்களைக் கொண்ட தயாரிப்புகள் உலக சந்தையில் மட்டுமே கிடைக்கின்றன. அவற்றின் விலையும் மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகம். இந்த நிலையில், தான் மோட்டார் சக்கர நாற்காலி வாகனத்தை ஐஐடி மெட்ராஸ் உருவாக்கியுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் உருவாக்கும் இந்த சக்கர நாற்காலி வாகனத்தை சாலைகளில் மட்டுமல்ல, சீரற்ற நிலப்பரப்புகளிலும் பயன்படுத்த முடியும். ’நியோபோல்ட்' ‘NeoBolt’, என்று அழைக்கப்படும் இது, அதிகபட்சமாக 25 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 கிமீ வரை பயணிக்கலாம். 25 கிமீ இயங்கும் திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி இணைக்கப்பட்டு இருக்கிறது. கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது இது சக்கர நாற்காலி பயனர்களுக்கு வசதியான, பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவில் போக்குவரத்துக்கு வழி வகுக்கிறது.
இந்த வாகன உருவாக்கத்திற்காக, ஐஐடி-எம் ஆராய்ச்சியாளர்கள் வாகனம் ஓட்ட முடியாத அளவுக்குக் கை கால்களில் குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் மருத்துவமனைகள் உடன் ஒத்துழைப்பைப் பெற்று அவர்களின் அனுபவங்களை பெற்று அதற்கேற்ப வாகன வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்தது.
’நியோபோல்ட்' வாகனம், ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை, பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டு, ‘NeoMotion.’ என்ற தொழில் முனைவு நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. நியோமோஷன் நிறுவனம் பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் மற்றும் ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவரும் அந்நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்வாஸ்திக் சௌரவ் டாஷ் ஆகியோரால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே அப்படியே எழுந்து நிற்கவும் வகை செய்யும் ’அரைஸ்’ என்ற இயந்திரத்தைத் தயாரித்த குழுவிற்கும் பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் தான் தலைமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவிலேயே முழுமையாகத் தயாரிக்கப்பட்ட இத்தகைய முதல் இயந்திரம் என்பதும் கூடுதல் சிறப்பு.
ஐஐடி மெட்ராஸின் TTK Center for Rehabilitation Research and Device Development (R2D2), என்ற அமைப்பின் தலைமைப் பேராசிரியராகவும் இருக்கும் சுஜாதா ஸ்ரீநிவாசன் இந்த வாகன உருவாக்கத்தின் நோக்கங்கள் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். அதில்,
“சிறந்த செயல்பாட்டுடன் குறைந்த விலையில் இத்தகைய இயந்திரங்கள் மூலம், இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் நிலைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ஒரு பள்ளியிலோ, அலுவலகத்திலோ கடையிலோ, திரையரங்கத்திலோ சக்கர நாற்காலியுடன் வருபவரைப் பார்ப்பது மிக அரிது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை நான்கு சுவர்களுக்குள்ளேயே மட்டுப்படுத்திக் கொள்ளும் நிலை தான் நிலவுகிறது. இதனால் இவர்களின் சமூக, பொருளாதாரப் பங்களிப்பு தடைபடுகிறது.
”NeoMotion என்னும் புதிய தொழில் முனைவு நிறுவனம், ஐஐடி மெட்ராஸின் R2D2-வில் உருவானது. உலகத் தரம் வாய்ந்த சக்கர நாற்காலி இயந்திரங்களை சொந்தப் பயன்பாட்டுக்காகவும் உலகத்துக்காகவும் இந்தியாவில் தயாரிக்கும் பணியை இந்நிறுவனம் செய்து வருகிறது. தனிப்பட்ட முறையில் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டு வணிக ரீதியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நியோஃப்ளை என்ற இயந்திரத்தையும் இந்நிறுவனம் அளித்துள்ளது. தனிப்பட்ட பயனரின் தேவைகளுக்கேற்ப, 18 விதமாக மாற்றியமைக் கப்படக்கூடிய சிறப்பு வாய்ந்த இயந்திரம் இது.”
பயனரின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்படும் இந்தியாவின் முதல் சக்கர நாற்காலி இந்த NeoFly. இது பயனருக்கு வசதியான, உடலுக்கு இதமான இருக்கையுடனும் நல்ல வேகத் திறனுடனும் எளிதாகக் கையாளும் வசதியுடனும் வடிவமைக் கப்பட்டுள்ளது.
”மோட்டாரில் இயங்கும் நியோ போல்ட் (NeoBolt) என்ற இணைப்பு, இந்த நியோஃபளையைப் பாதுகாப்பான, சாலையில் செல்லத்தகுதியான வாகனமாக மாற்றுகிறது, இது நாம் பொதுவாக எதிர்கொள்ளும் எந்த வகையான நிலப்பரப்பிலும் எளிதாகச் செல்ல முடியும். நடைபாதை இல்லாத தெருக்களில் ஓடவும் அல்லது செங்குத்தான சாய்வில் ஏறவும் இது திறன் பெற்றுள்ளது. அதிர்வுகளைத் தாங்கும் சஸ்பென்ஷன்கள் இந்த எளிமையை வழங்குகின்றன," என்று பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.
நியோமோஷன் நிறுவனத்தின் இணை நிறுவனரும் அதன் முதன்மைச் செயல் அலுவலருமான ஸ்வாஸ்திக் சௌரவ் டாஷ் தற்போதைய நிலவரம் குறித்துக் கூறுகையில்,
”இந்தியாவின் 28 மாநிலங்களில் 600-க்கும் அதிகமான பயனர்களால் நியோஃப்ளை மற்றும் நியோ போல்ட் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது குறித்த நேர்மறையான கருத்துகள் பகிரப்பட்டுள்ளன. இந்தியா முழுவதிலும் பெரு நகரங்களில் 15 டீலர்கள் மற்றும் 4 மறுவாழ்வு மையங்களில் இதன் மாதிரிகள் கிடைக்கின்றன. எங்களது தனித்துவமான நியோஃபிட் அமைப்பின் மூலம், தேவைக் கேற்ற வடிவமைப்பு முழுவதும் தொலைதூரத்திலிருந்தே செய்யப்பட்டு, பயனருக்குப் பொருத்தமான NeoFly அவரின் இல்லம் தேடி வருகிறது.”
உதிரி பாகங்கள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவையை உத்தரவாதத்துடன் நாங்கள் வழங்குகிறோம், இதனால் எங்கள் பயனர்கள் தொந்தரவின்றி எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம். எங்கள் உடனடி கவனம் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் நியோஃப்ளை மற்றும் நியோபோல்ட்டை இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்கு கிடைக்கச் செய்வதாகும்.
தனிப்பட்ட தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலி நியோஃப்ளையிம் விலை ரூ.39,900 மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட இணைப்பான நியோபோல்ட்டின் விலை ரூ.55,000. நாங்கள் எளிதான EMI வசதியையும் வழங்குகிறோம். பயனர்கள் தங்கள் ஆர்டர்களை எங்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு, வெறும் ஆயிரம் ரூபாய்கு முன்பதிவு செய்யலாம்,” என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் மூன்று லட்சம் சக்கர நாற்காலிகள் விற்கப்படுவதாகவும் இவற்றில் இரண்டரை லட்சம் நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் விற்கப்படும் சக்கர நாற்காலி களில் 95% அனைவருக்குமான ஒரே அளவில் தான் உள்ளன. இதனால், போக்குவரத்தில் சிரமம், ஆரோக்கியத்தில் பாதிப்பு, தன்னம்பிக்கைக் குறைப்பாடு ஆகியவை ஏற்படுகின்றன. இவற்றைக் களையும் வகையில் நியோஃப்ளை மற்றும் நியோபோல்ட் உருவாக்கப்பட்டுள்ளன.
சரியான அமரும் முறை, வலுவான வெளிச் சட்டம் மற்றும் வசதியான தள்ளு சக்கரம் ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு தள்ளுக்கும் மூன்று முதல் ஐந்து மடங்கு அதிக தூரத்தைக் கடக்க முடியும். அதே அளவு அமரும் இடத்திற்கு 30% சிறிய கால் வைக்கும் இடம், நெருக்கமான இடங்களிலும் எளிதான அணுகலுக்கு வகை செய்கிறது.
பயனரின் உடற்கட்டுக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருப்பதால், நாற்காலியை விட பயனருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நியோஃப்ளையுடனும் நியோ குஷன் என்னும் ஒரு குஷனும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இது தோலுக்கு இதமாகவும், ஸ்திரமாக அமரவும் எளிதாக இடம்பெயரவும் உதவுகிறது.
நியோஃப்ளையை ஒரு பாதுகாப்பான சாலை போக்குவரத்துக்குத் தயார் படுத்தும் வகையில், அமைக்கப்பட்ட மோட்டாரில் இயங்கும் ஒரு இணைப்பு நியோபோல்ட். மற்ற வாகனங்களுக்கு இடம் பெயர வேண்டிய தேவை இல்லாமல், நொடிகளில் பயனரே பிறரின் உதவியின்றி, இதை இணைத்துக்கொள்ளும் வசதியை இது வழங்குகிறது.
NeoFly-யின் முக்கிய அம்சங்கள்:
* பஞ்சர் எதிர்ப்பு டயர்கள், உட்புற மற்றும் வெளிப்புற வசதிகள்.
* வசதியான புஷ்ரிம்
* திடமான வெளிச்சட்ட வடிவமைப்பு
* மாற்றிக்கொள்ளக்கூடிய பேக்ரெஸ்ட் உயரம் & கோணம்
* மாற்றிக்கொள்ளக்கூடிய ஃபுட்ரெஸ்ட் உயரம் & கோணம்
* இருக்கை அகலம் மற்றும் இருக்கை ஆழத்திற்கு ஐந்து விருப்ப அளவுகள்
* பாதுகாப்பான ஆன்டி டிப்பர்கள்
NeoBolt-இன் முக்கிய அம்சங்கள்:
* விரைவான மற்றும் எளிதான இணைப்பு வடிவமைப்பு (காப்புரிமை பெற்றது)
* பாதுகாப்பான ஆன்டி டிப்பர்கள் (காப்புரிமை பெற்றவை)
* லித்தியம்-அயன் பேட்டரி, சார்ஜ் ஒன்றுக்கு 25 கிமீ, 4 மணிநேர ரீசார்ஜ்
* டிஜிட்டல் டாஷ்போர்டு
* முகப்பு விளக்கு, சைட் இன்டிகேட்டர்கள், ஒலிப்பான், கண்ணாடி
* பின்னோக்கிய செயல்பாடு
* டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன்
* வலுவாக உருவாக்கப்பட்ட சாஸி