இந்தியாவின் முதல் விர்ச்சுவல் இன்ஃப்ளூயன்சர்: இன்ஸ்டாவில் 100k ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் ‘கைரா’
இந்தியாவின் முதல் விர்ச்சுவல் இன்ஃப்ளூயன்சர் 'கைரா' இப்போது இன்ஸ்டாகிராமில் வெகுவாக கவனம் ஈர்த்து வருகிறது.
இந்தியாவின் முதல் விர்ச்சுவல் இன்ஃப்ளூயன்சர் 'கைரா' இப்போது இன்ஸ்டாகிராமில் வெகுவாக கவனம் ஈர்த்து வருகிறது.
சோசியல் மீடியாவில் இன்ஃப்ளூயன்சர் அதாவது, மக்களிடையே செல்வாக்கு செலுத்துபவர்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. சமூக ஊடகங்களைப் பொறுத்தவரை, இன்ஃப்ளூயன்சர்கள் தங்கள் முத்திரையைப் பதிப்பது சாதாரணமான காரியம் அல்ல. ஆடைகள் மற்றும் அணிகலன்களை விளம்பரப்படுத்துவது முதல் நாகரீகமான தோற்றத்தை எவ்வாறு மீண்டும் உருவாக்குவது என்பதற்கான உதவிக்குறிப்புகளை வழங்குவது வரை, பலவகையான இன்ஃப்ளூயன்சர்கள் இணையத்தில் வலம் வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே லட்சக்கணக்கானோர் இன்ஃப்ளயன்சர்களாக கலக்கி வரும் நிலையில்,
இந்தியாவின் முதல் முறையாக 100k ஃபாலோயர்களைக் கொண்டு விர்ச்சுவல் இன்ஃப்ளூயன்சராக கைரா என்ற 21 வயது இளம் பெண் தோற்றம் கலக்கி வருகிறது.
இந்தியாவில் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சிங்கை செய்து வரும் ஒரு நிறுவனமாக ’டாப் சோஷியல் இந்தியா’ விளங்கி வருகிறது. இந்த நிறுவனம். சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே பாலமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் வணிகப் பிரிவு தலைவராக இயங்கி வருகிறார் ஹிமான்ஷு கோயல். இவர்தான் கைராவுக்கு விர்ச்சுவல் உலகில் உயிர் கொடுத்துள்ளார்.
டாப் சோஷியல் இந்தியாவின் வணிகத் தலைவர் ஹிமான்ஷு கோயல் கூறுகையில்,
"கைரா ஒரு எளிய CGI கேரக்டர் அல்லது செல்வாக்கு செலுத்துபவர் என்பதைத் தாண்டி செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் இணையத்தில் ஒரு சுயாதீன மெட்டா-இன்ஃப்ளூயன்சர் ஆவார். Ai தொழில்நுட்பத்தின் கூட்டாளர்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம், இது ஆன்லைனில் சமூக ஊடகப் போக்குகளைப் படிக்கவும், உள்ளடக்கத்தை தன்னியக்கமாக உருவாக்கவும் உதவும். மெய்நிகர் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் உள்ளடக்கத்தின் எதிர்காலம் அங்குதான் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
கைராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனிதர்களைப் போலவே போட்டோஷுட், ரீல்ஸ், யோகா மற்றும் உடற்பயிற்சி செய்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவிடப்படுகிறது. மார்டன் உடைகளை அணிந்து கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பது, பாடலுக்கு நடனமாடுவது என பல பொழுது போக்கு விஷயங்களையும் கைரா செய்து வருகிறது.
உலகிலேயே முதல் விர்ச்சுவல் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான லில் மிகுலா போல் 3 மில்லியன் ஃபாலோயர்கள் அல்லது தென் கொரியாவைச் சேர்ந்த ரோஸியைப் போல் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விர்ச்சுவல் இன்ஃப்ளூயன்சர்களைப் போல், இந்தியாவிற்காக இங்கேயே வடிவமைக்கப்பட்ட மெய்நிகர் இன்ஃப்ளூயன்சராக ’கைரா’ செல்வாக்கு செலுத்தி வருகிறார்.
உலக அளவில் விர்ச்சுவல் இன்ஃப்ளூயன்ஸர்களின் சமூகத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ள கைரா, கடந்த மார்ச் மாதம் ஒரு மெட்டாவர்ஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் மாடலாக பங்கேற்றுள்ளார். அங்கு பெரிய உலகளாவிய ஃபேஷன் பிராண்டுகளான எஸ்டீ லாடர், டாமி ஹில்ஃபிகர் மற்றும் டோல்ஸ் & கபனா ஆகியோரின் பிராண்ட் மாடலாக கைரா செயல்பட்டுள்ளார்.
"நாங்கள் கைராவை அறிமுகப்படுத்தியபோது, (இந்தியாவின் முதல் விர்ச்சுவல் இன்ஃப்ளூயன்சர்) ஃபேஷன் என்பது நாங்கள் கவனம் செலுத்திய முதல் வகைகளில் ஒன்றாகும். Metaverse இடத்தில் இந்திய ஃபேஷன் பிராண்டுகள் எவ்வாறு பங்கேற்கும் என்பதைப் பார்க்க நாங்கள் காத்திருக்க முடியாமல் தவித்தோம்” என்கிறார் டாப் சோஷியல் இந்தியாவின் வணிகத் தலைவர் ஹிமான்ஷு கோயல்.
கடந்த 3 மாதங்களில் மட்டும் கைரா தனது இன்ஸ்டாகிராமில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.