Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'அழைப்பிதழ் டூ சாப்பாடு' பிளாஸ்டிக் இல்லா திருமணம்!

அன்றாட வாழ்க்கையிலேயே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க முடியாமல் தவிக்கும் பலருக்கு மத்தியில் சென்னையைச் சேர்ந்த கண்ணன் தனது மகளின் திருமணத்தை ஜீரோ பிளாஸ்டிக் வேஸ்ட் திருமணமாக செய்து காண்பித்துள்ளார். 

'அழைப்பிதழ் டூ சாப்பாடு' பிளாஸ்டிக் இல்லா திருமணம்!

Wednesday June 27, 2018 , 6 min Read

பிளாஸ்டிக் மாசை ஒழிப்போம் இந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி கொண்டாடப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினத்தின் முக்கிய நோக்கம் இது தான். வெறும் வாய் வார்த்தையாக நிச்சயம் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என்று சொல்பவர்களுக்கு மத்தியில் மனமிருந்தால் மார்க்கமுண்டு. நாம் நினைத்தால் நிச்சயம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது சென்னையைச் சேர்ந்த வி.சி. கண்ணனின் குடும்பம்.

பந்தியில் இடம்பிடித்த ஸ்டீல் டம்ளர் மற்றும் சக்கை கப் படஉதவி : வி.சி.கண்ணன்
பந்தியில் இடம்பிடித்த ஸ்டீல் டம்ளர் மற்றும் சக்கை கப் படஉதவி : வி.சி.கண்ணன்

சாதாரணமாக வீட்டிலேயே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்க முடியாமல் பலர் திண்டாடும் நிலையில் ஒரு திருமணத்தை பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளின்றி செய்து முடித்திருக்கிறது கண்ணனின் குடும்பம்.

சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இந்த குடும்பத்திற்கு தங்கள் வீட்டு திருமணத்தை பிளாஸ்டிக் இல்லா திருமணமாக நடத்துவது ஒன்றும் அத்தனை சிரமமானதாக இல்லை. 

நுகர்வுப் பழக்கத்தில் பழமைவாதத்தை கொண்டுள்ள எங்கள் குடும்பத்தினருக்கு பிளாஸ்டிக் இல்லா திருமணத்தை நடத்துவது ஒன்றும் அத்தனை கடினமானதாக இல்லை என்கிறார் கண்ணன். 

பொதுவாகவே எங்கள் குடும்பத்தில் குழந்தைகள் முதல் பெரியர்வகள் வரை இயற்கையை போற்றுபவர்கள். ஏனெனில் மறுசூழற்சி செய்யும் பொருட்களை பயன்படுத்துவது, எதையும் வீணடிக்கக் கூடாது என்று சொல்லிச் சொல்லியே அனைவரும் வளர்க்கப்பட்டுள்ளனர். எங்கள் கலாச்சாரத்திலேயே இயற்கைக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடாது என்பது ஊறிப்போனது என்பதால் என்னுடைய இந்த முடிவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்கிறார் கண்ணன்.

அழைப்பிதழ்கள் முதல் பட்டாசு வரை எந்த பண்டிகை கால கொண்டாட்டங்களாக இருந்தாலும் சுற்றுச்சூழலுக்கு முடிந்த அளவு மாசு ஏற்படுத்தாமல் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் கண்ணன். இதே போன்று தான் தனது மகளின் திருமணத்தை செய்ய முடிவு செய்தார். ஆனால் மாசு என்பதைத் தாண்டி ஒரு படி மேலே போய் ’ஜீரோ வேஸ்ட் திருமணம்’ நிகழ்ச்சியாக இதனை நடத்தி முடிக்க திட்டமிட்டார் கண்ணன்.

இயற்கை மீது மிகுந்த அக்கறை கொண்ட மணப்பெண் சம்யுக்தாவும் தனது திருமணம் குடும்பத்தாரின் நம்பிக்கை மற்றும் மதிப்புகளை பிரதிபலிப்பவையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

முற்றிலும் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தியே திருமணத்தை நடத்த திட்டமிட்டோம், அதற்காக அழைப்பிதழ் முதல் பரிசுகள் தருவது வரை அனைத்திலும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முதலில் பட்டியலிட்டோம். சமையல்காரர்களையும் எங்களின் இந்த நிபந்தனைக்குள் கொண்டு வருவது சற்று கடினமாகவே இருந்தது என்கிறார் கண்ணன்.

விவசாய பொருளாதார நிபுணரான சம்யுக்தா தன்னுடைய திருமணத்திற்கு ‘குறிஞ்சி’யை மையக்கருவாக வைத்திருந்தார். குறிஞ்சி என்றால் மலையும் மலை சார்ந்த இடமும், இருவரிடையேயான காதலை குறிப்பதால் இந்த குறிஞ்சியை மையமாக வைத்து திருமணத்தை நடத்த விருப்பம் தெரிவித்தார். இதற்காக குறிஞ்சி மலைத் தோற்றத்தை விவரிக்கும் விதத்திலான வரைபடத்தை திருமண அழைப்பிதழில் இணைப்பதற்காக அவரே வடிவமைத்தார். 

 படஉதவி : வி.சி.கண்ணன்
 படஉதவி : வி.சி.கண்ணன்


நாங்கள் அளிக்கும் இந்த வரைபடத்தை உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அதனால் பெயின்ட்டிங்கிற்கு நடுவே ஒரு லேசான காகிதத்தில் திருமண நிகழ்ச்சி குறித்த விவரங்களை அச்சிட்டு இணைத்திருந்தோம். அந்த காகிதத்தை நீக்கி விட்டு பெயின்டிங்கை பிரேம் செய்து மாட்டிக் கொள்ளலாம் என்பதே இதன் நோக்கம். 

“குறைந்த அளவிலான சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத அழைப்பிதழ்களை அச்சிட்டோம், எஞ்சியவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அழைப்பு விடுத்தோம்,” என்கிறார் கண்ணன்.

இதே போன்று திருமண மண்டபத்தில் செய்வதற்கான அலங்காரங்களும் பூக்கள், செடிகளைக் கொண்டு குறிஞ்சி நிலப்பகுதியை நினைவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. வரவேற்பு நாளில் செய்யப்பட்டிருந்த அலங்காரம் உண்மையிலேயே வியக்கும் வகையில் இருந்தது. 

பனை ஓலையில் செய்யப்பட்ட கை விசிறியை பின்னணியில் வைத்து அட்டகாசமான அலங்காரம் செய்யப்பட்டிருந்தது, வரவேற்பு முடிந்த பின்னர் விருந்தினர்களுக்கு அவை பரிசாக அளிக்கப்பட்டது.
விசிறியை பின்புறமாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் மணமேடை படஉதவி : வி.சி.கண்ணன்
விசிறியை பின்புறமாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் மணமேடை படஉதவி : வி.சி.கண்ணன்


திருமணங்களில் பிளாஸ்டிக்கை அதிகம் பயன்படுத்துவோர்கள் என்றால் அது கேட்டரிங் செய்பவர்கள் தான். பெரும்பாலான திருமணங்களில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரே பந்தியில் வைக்கப்படுகிறது. பாதி குடிநீர் மட்டுமே அருந்தி இருந்தாலும் அந்த பாட்டிலை அப்படியே தூக்கி வீசிவிடுவர். இதே போன்று கண்ணன் குறைக்க நினைத்த மற்றொரு விஷயம் உணவை வீணடித்தல்.

நாம் பாரம்பரியமாக கடைபிடித்து வந்த விஷயங்கள் எல்லாம் இப்போதுமாறி விட்டது, அதனை ஏன் மீண்டும் கொண்டு வரக் கூடாது என்று அதற்கும் துள்ளியமான திட்டமிடலைச் செய்தார் கண்ணன். 

“நம்முடைய மனநிலை தான் எல்லாவற்றிற்கும் காரணம். ஸ்டீல் டம்ளர்களை பயன்படுத்துவது தான் நம்முடைய கலாச்சாரம், அதை ஏன் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரக் கூடாது என்று கண்ணனுக்கு கேள்வி எழுந்துள்ளது. இதோடு நின்றுவிடாமல் சவுகர்யத்திற்காக பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை பந்தியில் வைக்க வேண்டாம் என்று சமையல்காரர்களை ஒப்புகொள்ளவைத்துள்ளார்.“

ஸ்டீல் டம்ளர்களை பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் செலவுதான், ஸ்டீல் டம்ளர்களை வாங்குவதை வித வாட்டர் பாட்டில்களின் விலையும் குறைவு, எனினும் பிளாஸ்டிக் கழிவை குறைத்தோம் என்ற பெரிய ஆறுதல் கிடைக்கும், என்கிறார் கண்ணன்.

தண்ணீர் மற்றும் காபிக்கு டம்ளர்கள், இனிப்புகளை பரிமாற கரும்புச் சக்கையால் செய்யப்பட்ட கப்கள் என பிளாஸ்டிக் அதிகம் பயன்படுத்தப்படும் பந்தியில் பிளாஸ்டிக் அறவே இல்லை. வாழை இலையில் சாப்பாடு பரிமாறி உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளித்ததோடு, சாப்பிட்டு தூக்கி வீசும் இலைகள் ஆடு, மாடுகளுக்கு உணவாகுமே என்றும் இதனைச் செய்துள்ளனர்.

வரவேற்பறை, மணப்பந்தல் அலங்காரம் என்று எதில் வேண்டுமானால் கழிவுகள் இல்லாமல் திட்டமிடுவது எளிது, ஆனால் உணவு வீணாகாமலும், சமையல் பொருட்கள் வீணாகாமலும் இருப்பதற்கு தனிக் கவனமும், பலரின் ஈடுபாடும் அவசியம்.

பயன்படுத்தப்பட்ட பொருட்களின் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை ஆனால் அதற்கேற்ப கட்டமைப்புகள் நம்மிடம் இருக்கிறதா என்பதே மிகப்பெரிய கேள்வி. பயன்படுத்தப்பட்ட பொருட்களின் கழிவுகளை அப்புறப்படுத்தும் வேலையை திருமண மண்டபத்தினரோ அல்லது கேட்டரிங் சர்வீஸ் செய்பவர்களோ பார்த்துக்கொள்வார்கள் என விட்டுவிட முடியாது என்பதில் கண்ணன் உறுதியாக இருந்தார். ஜீரோ வேஸ்ட் திருமணத்தின் கடைசி மைல்கல் இது என்பதால் தனிக்கவனம் செலுத்தினார்.

நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த கிருபா ராமச்சந்திரன் கண்ணன் குடும்பத்தினரின் ஜீரோ வேஸ்ட் முயற்சிக்கு துணை நின்று அந்த சவால்களை பகிர்ந்து கொண்டார்.

“நாங்கள் இந்த முயற்சியில் ஒரு பகுதியாக இருப்பதற்கு பெருமகிழ்ச்சியடைந்தோம். எனினும் அனைத்து கழிவுகளையும் ஒரே நேரத்தில் முறையாக அப்புறப்படுத்துவது மிகப்பெரிய சவாலாகவே இருந்தது, ஏனெனில் நம்மிடம் அதற்கேற்ப கட்டமைப்புகள் இல்லை, இதற்காக நாம் இன்னும் சில வசதிகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், அதற்கு வெகுகாலமாகும்.”

திருமண மண்டபத்தை சுற்றி கழிவுகளை அப்புறப்படுத்த என்னென்ன கட்டமைப்பு வசதிகள் இருக்கிறது என்பதை முதலில் வரைபடமாக போட்டுக் கொள்வதில் தொடங்கியது இதற்கான திட்டமிடல். உணவு கழிவுகளை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சென்னை மாநகராட்சியின் பயோகேஸ் யூனிட்டிற்கும், எம்ஆர்சி நகரில் இருந்த உர யூனிட்டிற்கும் அனுப்பி வைத்தோம். பூக்களின் கழிவுகளை ஆழ்வார்பேட்டையில் இருந்த உர யூனிட்டிற்கு அனுப்பினோம். வாழை மரத் தண்டுகளை க்ரஷரில் கொடுத்து கூழாக்கும் வசதி பயோ கேஸ் யூனிட்டில் இல்லை. இதே போன்று பயோ கேஸ் யூனிட்டின் கொள்ளளவும் குறைவு, அதிக அளவிலான கழிவுகளை கையாளும் வசதி இல்லை. இந்த யூனிட்கள் அனைத்தும் நாள் ஒன்றிற்கு ஒரு முறை மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. உர யூனிட்டில் பாதி அடர்வில் உள்ள திரவங்களை ஏற்பதில்லை காய்கறி மற்றும் பழங்களின் தோல்கள் மட்டுமே இங்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

தற்போதுள்ள கட்டமைப்புகள் அனைத்து அதிக அளவிலான கழிவுகளையும் ஏற்கும் அளவில் இல்லை, ஒரு சில பொருட்களை கையாள்வதற்கான வசதிகள் அங்கு இல்லை, எனவே சிலவற்றை அப்புறப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்ததாகக் கூறுகிறார் கிருபா. பிளாஸ்டிக் இல்லா திருமணத்திற்கு உதவியதன் மூலம் அதிக அளவிலான கழிவுகளை அகற்ற ஒரு வசதி தேவை என்பதை நான் உணர்ந்துகொண்டேன். கேக்(CAG) மூலம் அதிக அளவிலான கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார் கிருபா.

கழிவுகளை ப்ராசெசிங் மையங்களுக்கு எடுத்துச்செல்ல மாநராட்சியின் வாகனங்களை பயன்படுத்திக் கொண்டுள்ளார் கண்ணன். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் போது திருமண ஒப்பந்ததாரர்களும், கேட்டரிங் செய்பவர்களும் கழிவு மேலாண்மையை மனதில் வைத்து சரியான திட்டமிடல் செய்ய வேண்டும். 

இதே போன்று திருமணம் நடத்துபர்களும் இப்படியெல்லாம் செய்தால் அதிக பணம் செலவிட வேண்டும் என்று அஞ்ச வேண்டாம். சிறிய திட்டமிடல் இருந்தாலே போதும் மனநிறைவோடு சுபநிகழ்ச்சியை நடத்தி முடிக்கலாம் என்கிறார் கண்ணன். 

வழக்கமாக திருமணத்திற்கு ஆகும் செலவை விட அதிகம் செலவாகிவிடாது, ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் நம்முடைய பழக்கமும், மனநிலையும் மாற வேண்டும் மக்கள் உளப்பூர்வமாக இதனை ஏற்று செய்தாலே போதும் என்கிறார் கண்ணன்.

நாங்கள் நடத்திய இந்த பிளாஸ்டிக் இல்லா திருமணத்தை பார்த்து விருந்தினர்கள் நிச்சயம் இது போல செய்ய முடியும் என்பதை உணர்ந்திருக்கின்றனர். அதுவே எங்களுக்கு மிகப்பெரிய திருப்தியை தந்துள்ளது என்கிறார் கண்ணன்.

சம்யுக்தாவின் திருமணத்தை எப்படி பிளாஸ்டிக்கே இல்லாமல் நடத்தி முடித்தார்கள் என்பதற்கு அவர்கள் தயார் செய்த செக்லிஸ்ட் இதோ:

திருமண ஷாப்பிங் : திருமணத்திற்காக செய்யும் ஷாப்பிங்கில் ஏகப்பட்ட பிளாஸ்டிக் கழிவு சேர்ந்துவிடும். ஆடைகளை பேக் செய்வது முதல் அலங்காரப் பொருட்கள் வாங்குவது வரை என ஏகப்பட்ட பிளாஸ்டிக் பைகள் குவிந்துவிடும். திருமண ஷாப்பிங்கில் பிளாஸ்டிக் பைகளை குறைக்க எளிய வழி ஆடைகளை பேப்பரில் சுற்றியோ அல்லது துணிப்பையிலோ வாங்கலாம். உங்களது சூட்கேஸ் அல்லது பையை எடுத்துச் சென்றாலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கலாம் என்பதோடு உங்களுக்கும் ஒரே பையில் அனைத்து எடுத்துச் செல்ல எளிதாகவும் இருக்கும்.

அழைப்பிதழ் : பிளாஸ்டிக் மற்றும் மறு சூழற்சி செய்ய முடியாத பொருட்களை வைத்து அழைப்பிதழ் மேல்அட்டைகளை டிசைன் செய்வதால் அதனை மக்கவைக்கச் செய்யமுடியாமல் வீண் கழிவாக சேர்ந்துவிடுகிறது. இதனை தவிர்க்க நமக்கு இருக்கும் மாற்று வழி டிஜிட்டல் மீடியம். ஈமெயில், வாட்ஸ் அப் மூலம் விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கலாம். மணமக்கள் சோஷியல் மீடியாக்கள் மூலம் விருந்தினர்களுக்கு தகவல்களை அனுப்பி அவர்களை வரவேற்பதற்கான திட்டமிடல்களையும் செய்யலாம். தவிர்க்க முடியாதவர்களுக்கு அழைப்பிதழ்களை காகிதங்களில் அச்சடித்து அளிக்கலாம் இதன் மூலம் பிளாஸ்டிக்கை தவிர்க்கலாம்.

வெற்றிலை பின்னணியில் சணல்கயிற்றால் மணமக்களின் பெயர் எழுதப்பட்ட பலகை படஉதவி : வி.சி. கண்ணன்
வெற்றிலை பின்னணியில் சணல்கயிற்றால் மணமக்களின் பெயர் எழுதப்பட்ட பலகை படஉதவி : வி.சி. கண்ணன்

அலங்காரம் : மணமேடை மற்றும் திருமண மண்டப அலங்காரத்திலும் மிகுந்தஅக்கறை செலுத்த வேண்டும், சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் பெருமளவில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்துவிடும். பெரும்பாலான திருமணங்களில் மணமக்கள் பெயர்களை பிளெக்ஸ் போர்டு அல்லது தெர்மகோலில் அலங்கரித்து வைத்திருப்பார்கள். ஆனால் சம்யுக்தாவின் திருமணத்தில் இதுவும் தவிர்க்கப்பட்டது, பிளெக்ஸ் பேனருக்கு பதிலாக இயற்கை முறையில் மணமக்கள் பெயர் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெற்றிலையை பின்அலங்காரமாக வைத்து அதில் சணலால் மணமக்களின் பெயரை எழுதி இருந்தனர்.

திருமண மண்டபத்திலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் இல்லவே இல்லை. செயற்கை பூக்கள், அலங்காரப் பொருட்கள் இல்லாமல், புத்துணர்ச்சியான பூக்கள் மற்றும் இயற்கையான பொருட்களைக் கொண்டு அனைவரையும் கவரும் வகையிலும், விழாக்கால தோற்றமளிக்கும் விதத்திலும் மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மணமேடையில் விமானம் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக மேடைக்கு பின்புறம் பனை ஓலை மற்றும் செடிகள் வைக்கப்பட்ட பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தது பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மேலும் உதவியாக இருந்தது.

திருமணத்தில் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்ட பூந்தொட்டிகள் படஉதவி : வி.சி.கண்ணன்
திருமணத்தில் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்ட பூந்தொட்டிகள் படஉதவி : வி.சி.கண்ணன்


உணவு : மக்கும் விதத்திலான கட்லரி மற்றும் ஸ்டீல் டம்ளர், வாழை இலை உள்ளிட்டவை பந்தி விஷயத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மரத்தினால் ஆன ஸ்பூன்கள், போர்க், சக்கைகளால் செய்யப்பட்ட கப்கள் மற்றும் பாக்கு மரத்தட்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம்.

பரிசுகள் : விருந்தினர்கள் தங்களது வாழ்த்துகளை மணமக்களுக்கு பரிசுகள் மூலம் தெரியப்படுத்துவார்கள். ஆனால் இதிலும் பிளாஸ்டிக் கழிவை தவிர்க்க வேண்டும் என்றால் பரிசுப் பொருட்களை காகிதத்திலோ அல்லது மக்கும் பொருட்களைக் கொண்டோ பேக் செய்ய வேண்டும். பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்ட எந்த பரிசுப் பொருளையும் கொண்டு வர வேண்டாம் என்று மணமக்கள் விருந்தினர்களுக்கு கோரிக்கை வைக்கலாம், பொக்கே கூட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளலாம். விருந்தினர்களுக்கு திரும்ப அளிக்கும் தாம்பூலத்தில் பசுமையை ஊக்குவிக்கும் விதமாக விதை அல்லது செடிகளை துணிப்பை அல்லது காகிதப் பைகளில் கொடுக்கலாம்.

பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரை முதலில் சென்னை சிட்டிசன் மேட்டர்ஸ் என்ற தளத்தில் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரை. தமிழில் : கஜலட்சுமி