ஆன்லைன் மூலம் கர்நாடக இசையை வளர்க்கும் ’கலைமாமணி’ வித்யா சுப்பிரமணியன்!
ஸ்கைப் வீடியோ கால் மூலம் உலகெங்கிலும் உள்ள 700க்கும் அதிகமான மாணவர்களுக்கு கர்நாடசங்கீதம், இசைக்கருவி பயிற்சி வகுப்புகள் என பாரம்பரிய இசையை வளர்த்து வருகிறார் வித்யா.
தொழில்நுட்பத்தை எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம் ஆனால் தொழில்நுட்பம் மூலம் நம் கலாச்சாரம் வளர்கிறது, பெரும் பகுதியை அடைகிறது, வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது என்றால் அதுவே சீரான வளர்ச்சியாகும். அந்த வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் கர்நாடக சங்கீதத்தை எட்டுத்திக்கும் எடுத்துச் செல்கிறார் அண்மையில் ’கலைமாமணி’ பட்டம் பெற்றுள்ள வித்யா சுப்பிரமணியன். அவருடனான உரையாடலில் இருந்து...
வித்யா சுப்பிரமணியன்; ஆன்லைன் மூலம் ஒன்று இரண்டு மாணவர்களுக்கு கர்நாடக சங்கீதம் கற்றுத் தரத் துவங்கி இன்று பல நாடுகளில் வசிக்கும் 700க்கும் அதிகமான மாணவர்களுக்கு 40 குருக்களை வைத்து சங்கீதம் கற்றுத் தந்து ஆன்லைன் சங்கீத அகாடமி நடத்தி வருகிறார்.
இசையில் தன் தொழிலை அமைத்துக் கொள்வதற்கு முன் கலிபோர்னியாவில் பெரும் நிறுவனத்தில் பணிபுரிந்து அதற்குபின் தொழில் முனைவில் இறங்கி இன்று கலைமாமணி விருது பெற்றிருக்கும் இவரின் எழுச்சியூட்டும் பயணத்தை பார்ப்போம்.
இசைப் பயணத்திற்கு முன்...
இசை மட்டுமின்றி படிப்பிலும் மிகவும் ஆர்வமுள்ளவர் வித்யா. மிகவும் கடினம் எனக் கருதப்படும் சிஏ தேர்வில் இந்தியாவில் 2ஆம் இடம் பிடித்து கலிபோர்னியாவில் நல்ல சம்பளத்தில் பணிக்கு அமர்ந்தார் இவர். கணவருடன் அங்கு இருந்த அவர் சில வருடம் அங்கு பணிபுரிந்த பிறகு குழந்தைக்காக பணியிலிருந்து இடைவெளி எடுத்தார்.
“என் குழந்தைக்காக பணியிலிருந்து விலகினாலும், தொழில் ரீதியாக நான் என்ன செய்யப்போகிறேன் என்ற சிந்தனை இருந்தது. நான் எனது 3 வயதில் இருந்தே கர்நாடக சங்கீதம் கற்று வந்ததால் சங்கீதம் மீதும் பேரார்வம் இருந்தது...” என்கிறார் வித்யா
வீட்டில் இருந்த போது அமெரிக்காவில் வசிக்கும் சில மாணவர்களுக்கும் சங்கீதம் கற்று தரும் வாய்ப்பு வித்யாவிற்குக் கிடைத்தது.
“அங்கு நம் கர்நாடக சங்கீதம் சொல்லிதர குருக்கள் இல்லை அதனால் இணையதளத்தை பயன்படுத்தலாம் என யோசித்தேன். 2004ல் அமெரிக்காவில் தொலைபேசியில் கூட பல வகுப்புகள் எடுக்கப்பட்டது.”
15 வருடங்களுக்கு முன் தொழில்நுட்பம் இன்றைய அளவிற்கு இல்லை என்றாலும் தன்னால் முடிந்த வரை இந்த ஆன்லைன் வகுப்பை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்து அமெரிக்காவில் பல இடங்களில் இருக்கும் மாணவர்களுக்கு ஸ்கைப் வீடியோ கால் மூலம் வகுப்புகளை எடுக்கத் துவங்கினார். அதன்பின் இதுவே இவரது தொழில் என்று முடிவுசெய்துள்ளார் வித்யா.
ஆன்லைன் இசைப் பயணம்
“தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இசையை வழங்க வேண்டும் என்று மட்டும் தான் யோசித்தேன். ஒரு ஸ்டார்ட் அப் போன்று அல்லது ஒரு அமைப்பாக்க வேண்டும் என்பது எனது நோக்கமாக தொடக்கத்தில் இல்லை,” என்கிறார்.
இயற்கையாகவே தனது மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததாக தெரிவிக்கிறார். சிறுவர்கள் மட்டுமின்றி பல வயதினர் இசை கற்றுக்கொள்ள தயாராக இருந்தனர். பல மாணவர்கள் பல நாடுகளில் இருந்து ஆன்லைன் சங்கீத வகுப்பிற்கு சேர விரும்பினர். ஆனால் வித்யா ஒருவரால் மட்டும் கற்றுத் தர முடியாது என உணர்ந்திருக்கிறார்.
“ஒவ்வொரு மாணவரின் வளர்ச்சியும் வேறுபடும் அதனால் கூட்டு வகுப்பு எடுக்க எனக்கு விருப்பமில்லை. ஒரு நேரத்தில் ஒரு மாணவருக்கு மட்டுமே முழு கவனத்தை கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.”
இதனால் சில ஆசிரியர்களை தன்னுடன் இணைக்க முடிவு செய்தார் வித்யா. ஆனால் இதற்காகவும் நேர்காணல் எதையும் நடத்தவில்லை இவர், பதிலாக இசைத் துறையில் தனக்கிருந்த இணைப்புகள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கத் தயாராக இருக்கும் ஆசிரியர்களை ஒன்று திரட்டி மாணவர்களை நியமித்தார். மாணவர்கள் போலவே ஆசிரியர்களும் வெவ்வேறு இடங்களில் இருந்து ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கின்றனர்.
வித்யாசுப்ரமணியன் அகாடமி எனும் பெயரில் கர்நாடக இசையில் துவங்கி இன்று ஆன்லைன் மூலம், கர்நாடக இசைக் கருவிகள் அதாவது புளூட், வீணா, வயலின், பெர்குசியன்-மிருதங்கம், பரதநாட்டியம், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஸ்லோகம், தமிழ் பாட்டுகள் ஆகியவற்றை கற்றுத் தருகிறார்.
5 முதல் 75 வயதினர் வரை இவரது இசைப்பள்ளியில் மாணவர்களாக உள்ளனர். பல மொழிகளை சேர்ந்தவர்கள், ஆடிசம் போன்ற சிக்கல் இருக்கும் சிறப்புக் குழந்தைகள் என பலர் இங்கு கற்று வருகின்றனர்.
கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் வருவாய்:
“கிளாசிக்கல் கலை பொறுத்தவரை மாணவர்கள் எளிதாக அதில் இணைந்துவிட மாட்டார்கள். மாணவர்களுக்கு இக்கலை மீது ஈடுபாடை ஏற்படுத்த வேண்டும். அதனால் 6 மாதம் பயிற்சி இது தான் வழிமுறை போன்ற கோட்பாடுகளையும் வைக்கவில்லை,” என்கிறார்.
மாணவர்களுக்கு இது பிடிக்குமா என்ற சந்தேகம் இருக்கும், தேர்வுக்காக இடைவெளி தேவைப்படும் இதனால் குறிப்பிட்ட கால அளவோ, கட்டணமோ நிர்ணயிக்கவில்லை என குறிப்பிடுகிறார். இதனால் வருவாய் இலக்கு எதுவும் குறிக்கோளாக இவர் வைக்கவில்லை.
“என் கணவர் சம்பாதிப்பதால் வருவாயை விட இசைக்கு முன்னுரிமை கொடுத்தேன், அதனால் மாணவர்களை ஓர் குருவிடம் நியமித்தால் குருவே அம்மாணவரிடமிருந்து கட்டணத்தை பெரும் முறையை கொண்டு வந்தேன்."
கிடைக்கும் கட்டணத்தில் இருந்து ஆசிரியர்கள் பெரும்பானமையான கட்டணத்தை வைத்துக்கொண்டு சிறு தொகையை இவருக்கு அளிக்கின்றனர். இதுவே தன் இசைப்பள்ளி வளர்ச்சி அடைய காரணாமாக அமைந்தது என முடிக்கிறார் வித்யா.
வலைதள முகவரி: Vidya Subramanian Academy