'இஸ்ரோ தலைவர் ஆன கன்னியாகுமரி கிராமத்துப் பையன் ' - விவசாயி மகன் நாராயணனின் உத்வேகக் கதை!
9ம் வகுப்பு வரை மின்சாரம் இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்ததிலிருந்து, இஸ்ரோவின் தலைவராக பதவியேற்றுள்ளது வரை டாக்டர் வி. நாரயணனின் உத்வேக பயணம்...
9ம் வகுப்பு வரை மின்சாரம் இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்ததிலிருந்து, இஸ்ரோவின் தலைவராக பதவியேற்றுள்ளது வரை டாக்டர் வி. நாரயணனின் உத்வேக பயணம்...
படிக்க மின்சாரமில்லை; பள்ளியுமில்லை;
கன்னியாகுமரி மாவட்டம் மேலக்காட்டுவிளையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த நாராயணனின் ஆரம்பகால வாழ்க்கை மிகவும் எளிமையானது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை அவரது வீட்டில் மின்சாரமே இல்லை. மண்ணெண்ணெய் விளக்கேற்றி அதன் வெளிச்சத்தில் படித்தவர். அவரது கிராமத்தில் பள்ளியும் இல்லை. அதனால் அருகில் உள்ள கீழக்காட்டுவிளையில் ஆரம்பப் பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். பின், 8ம் வகுப்பு வரை தினமும் ஒரு மைல் துாரம் பயணித்து பள்ளிக்கு சென்றுள்ளார். மீதமுள்ள பள்ளிப் படிப்பை மாவட்டத் தலைநகரமான நாகர்கோவிலில் முடித்துள்ளார்.
பள்ளிப்படிப்பை முடித்த அவர், மெக்கானிக்கல் இன்ஜீனியரிங்கில் டிப்ளமோ பயின்றார். பின், AMIE-இல் சேர்ந்து கிரையோஜெனிக் பொறியியலில் MTech முடித்தார். கரக்பூர் IIT-யில் விண்வெளி பொறியியலில் PhD பட்டம் பெற்றார். ஐஐடி கரக்பூரில், 2001ம் ஆண்டில் விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். எம்.டெக் பட்டப்படிப்பை ஃபர்ஸ்ட் கிளாஸில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதுவே கிரையோஜெனிக்ஸ் துறையில் அவரது கூர்மையான புத்திசாலித்தனத்திற்கு சான்றாகும்.
"எளிமையான குடும்பப் பின்னணியை சேர்ந்தவன். குடும்ப கஷ்டம் காரணமாக கிராமத்தில் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட நிலையில், என் பெற்றோர் எனக்குக் கல்வியைத் தொடர வாய்ப்பளித்தது எனக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதம். பள்ளியில் முதல் இடத்தைப் பிடித்தேன்."
பின்னர், என் தந்தை ஒருவரிடம் நான் அடுத்து என்ன படிக்க வேண்டும் என்று கேட்டார். பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்தால் எனக்கு வேலை கிடைக்கும் என்று அவர்கள் சொன்னார்கள். இந்தப் படிப்பில் சேர்ந்த பிறகு தான், பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். இருப்பினும், தொடர்ந்து படித்து மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தேன். காம்பஸில் வேலையும் கிடைத்தது.
ஆனால், வேலையில் சேருவதா அல்லது படிப்பைத் தொடருவதா என்பதை முடிவு செய்ய வேண்டியிருந்தது. என் தந்தை நான் படிப்பைத் தொடர வேண்டும் என்று விரும்பினாலும், நிதிப் பிரச்சினை இருந்ததால், வேலையை ஏற்றுக்கொண்டேன்.
வேலை செய்து கொண்டே அரசு வேலையை தேடும் முயற்சியில் இறங்கினேன். இஸ்ரோவில் இணைவதற்கு முன், TI சைக்கிள்ஸ், மெட்ராஸ் ரப்பர் தொழிற்சாலை, இறுதியாக பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் ஆகியவற்றில் பணியாற்றினேன். இஸ்ரோவில் சேர்ந்தவுடன், இன்ஜீனியரிங்கை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். கடவுளின் அருளால், ஐஐடி கரக்பூரில் எனது முனைவர் பட்டத்தை முடித்து, கிரையோஜெனிக் திட்டத்துடன் எனது பயணத்தைத் தொடங்க முடிந்தது," என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.
நாராயணனின் இஸ்ரோ பயணம், 1984ம் ஆண்டில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) திட உந்துவிசையில் பணியாற்றுவதற்காக சேர்ந்தபோது தொடங்கியது. அங்கு அவரளித்த பங்களிப்புகளால், கேரளாவில் உள்ள திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தில் (LPSC) கிரையோஜெனிக் உந்துவிசையில் அவரது பிற்காலப் பணிகளுக்கு அடித்தளமாக அமைந்தன.
இஸ்ரோவின் வெற்றியில் நாராயணனின் உந்துவிசை அமைப்புகளில் நிபுணத்துவம் மிக முக்கியமானது. கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இந்த தொழில்நுட்பத்தை இந்தியா ஆரம்பத்தில் ரஷ்யாவிடமிருந்து பெற முயன்றது. ஆனால், இறுதியில் புவிசார் அரசியல் சவால்கள் காரணமாக சுயாதீனமாக உருவாக்கியது.
சவால்களை சாதனைகளாக்கிய நாராயணன்!
திட்ட இயக்குநராக, இந்தியாவின் மிகப்பெரிய பேலோடுகளை விண்வெளிக்கு கொண்டு செல்லும் LVM3 ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளை உருவாக்கிய குழுவிற்கு நாராயணன் தலைமை தாங்கினார். அவரது பணி, இந்தியா கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்கிய உலகின் ஆறாவது நாடாக மாற உதவியது. விக்ரம் லேண்டர் தரையிறங்கியதில் பின்னடைவைச் சந்தித்த சந்திரயான்-2 திட்டத்திற்கான உந்துவிசை அமைப்புகளையும் நாராயணனின் குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
பின்னர், தோல்வி பகுப்பாய்வுக் குழுவின் தலைவராக நாராயணன் நியமிக்கப்பட்டார். அங்கு அவர் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்தல் நடவடிக்கைகளை பரிந்துரைத்தார். இந்த மேம்பாடுகள் 2023ம் ஆண்டில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்க உதவி, சந்திரனில் தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை ஏற்படுத்தி கொடுத்தது.
2018ம் ஆண்டு சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவ டாக்டர் ஆஃப் சயின்ஸ் பட்டம் பெற்றார். டாக்டர் நாராயணன் ராக்கெட் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான ASI விருதையும், இந்திய விண்வெளி சங்கத்திடமிருந்து (ASI) தங்கப் பதக்கத்தையும் பெற்றார். சிறந்த சாதனையாளர் விருது, செயல்திறன் சிறப்பு விருது மற்றும் குழு சிறப்பு விருது உட்பட பல இஸ்ரோ விருதுகளை அவர் வென்றுள்ளார். இந்நிலையிலே, இந்திய விண்வெளி துறையில் அவர் ஆற்றிய மகத்தான பணிகளின் அங்கீகாரமாய், இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பொறுப்பில், நாராயணன் பல மகத்தான பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார். அவரது தலைமையின் கீழ், இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் மிஷன் மற்றும் வரவிருக்கும் சந்திரயான்-4 மிஷன் உள்ளிட்ட அதன் முக்கியமான விண்வெளிப் பணிகளை இஸ்ரோ தொடரவிருக்கிறது. எல்பிஎஸ்சியில் உள்ள நாராயணனின் குழு, இந்தியாவின் எதிர்கால விண்வெளி நிலையத்திற்கான கனரக வாகனம் மற்றும் சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் மிஷன் உள்ளிட்ட புதிய தலைமுறை ஏவுதள வாகனங்களை உருவாக்குவதிலும் பணியாற்றி வருகிறது.
இந்தியாவின் விண்வெளி லட்சியங்களில் தனியார் தொழில்துறையின் வளர்ந்து வரும் பங்கு பற்றி நாராயணன் நன்கு அறிந்திருக்கிறார்.
"இஸ்ரோவால் அதன் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்ய முடியாது. தனியார் துறைக்கும், ஸ்டார்ட்அப்களுக்கும் நாங்கள் வாய்ப்புகளை வழங்கி வருகிறோம். தனியார் துறையின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் இந்தக் கொள்கை மாற்றம், உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் பெரும் பங்கைக் கைப்பற்றும் இந்தியாவின் பரந்த இலக்குக்கும் உதவும்," என்று தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.