’என் அம்மாவின் மறுமண முடிவிற்கு மதிப்பளியுங்கள்’- கேரள இளைஞரின் உருக்கமான பதிவு!
முதல் திருமண பந்தம் இனிதாக அமையாததால் பல துன்பங்களை அனுபவித்து விவாகரத்து பெற்று ஒற்றை ஆளாக மகனை வளர்த்த தாயின் இரண்டாவது திருமண முடிவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கேரள மாநில இளைஞர் கோகுல் ஸ்ரீதர்.
குடும்ப உறவுகளில் கணவன் மனைவியின் உறவே நல்லறத்திற்கான ஆணி வேர். அந்த வேர் சரியாக அமையாவிட்டால் அதன் தாக்கம் அவர்களின் பிள்ளைகளிடத்தில் அதிக அளவில் இருக்கும். ஒரு சில தாய்மார்கள் பிள்ளைகளின் நலனுக்காக அவற்றை சகித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறார்கள். மற்ற சிலர் துணிந்து முதல் மண பந்தத்தை முறித்துக் கொண்டு விவாகரத்து பெற்று ஒற்றைத் தாயாக குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துகின்றனர்.
கண்ணீர் பெருக்கெடுக்கக் கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பள்ளிமோன் பகுதியைச் சேர்ந்த கோகுல் ஸ்ரீதர் தனது முகநூல் பக்கத்தில் அம்மாவின் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்து சொல்லி உருக்கமாக எழுதி இருக்கும் வரிகள் ஒரு தாயின் வலிகளை உணர்த்துகின்றன.
இது ஒரு சாதாரண திருமண வாழ்த்தாக இல்லாமல் அம்மாவின் தியாகங்களை உணர்ந்து கொண்ட 23 வயது இளைஞனின் முற்போக்குத் தனத்தை காட்டுகிறது.
கோகுலின் தாயார் மினியின் முதல் திருமணம் மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. எந்நேரமும் அடி, உதை, வாக்குவாதங்கள் என்றே சென்றுள்ளன. அம்மாவிற்கான இந்த வாழ்த்துப் பதிவை போடுவதற்கு முன்னர் கூட அந்த நிகழ்வுகள் தனது மனதில் நிழலாடியதாகக் கூறுகிறார் கோகுல் ஸ்ரீதர்.
மோசமான இல்லற வாழ்க்கையை எனக்காக என்னுடைய அம்மா சகித்துக் கொண்டு வாழ்ந்தார். அம்மா, அப்பா இடையே நடக்கும் வாக்குவாதங்கள் இன்னமும் என்னுடைய நினைவில் இருக்கிறது என்று கோகுல் கூறியுள்ளார்.
என்னுடைய பயமெல்லாம் இந்த சமூகம் அம்மாவின் மறுமணத்தை ஏற்றுக் கொள்ளுமா? எனினும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தான் இந்தப் பதிவை முகநூலில் பகிர்ந்து கொள்கிறேன். என்னுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் அம்மாவின் 2வது திருமண முடிவை ஏற்றுக் கொண்டு அவருக்கான மரியாதையை அளியுங்கள் என்று கோகுல் குறிப்பிட்டுள்ளார்.
முறிந்து போகும் திருமண பந்தங்களால் வாழ்க்கையில் தோற்றுபோய்விட்டோம் என்று எண்ணாமல் அடுத்த நல்ல துணையை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய அம்மா நினைத்தார். அம்மாவின் இரண்டாவது திருமணம் பற்றி பிறர் கூறி நண்பர்களும் உறவினர்களும் தெரிந்து கொள்வதை விட நாங்களே தெரியப்படுத்தலாம் என்று நினைத்தேன்.
அம்மாவின் மறுமண முடிவை மற்றவர்கள் தவறாக சித்தரித்துவிடக் கூடாது என்பதே எனது கவலை என கோகுல் ஸ்ரீதர் கூறியுள்ளார். ஆண்கள் மறுமணம் செய்து கொண்டால் ஏற்றுக் கொள்ளும் சமூகம் அதையே பெண்கள் செய்தால் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை என்றும் கோகுல் கேள்வி எழுப்புகிறார்.
என்னுடைய அப்பாவை வில்லன் மாதிரியெல்லாம் நான் சித்தரிக்கவில்லை, என் பெற்றோர் வித்தியாசமானவர்கள். அப்பாவின் நடவடிக்கைகள் அம்மாவிற்கு பிடிக்கவில்லை. அப்பா மூர்க்கத்தனமாக நடந்து கொள்வார் எப்போதும் அம்மாவுடன் சண்டை போட்டுக் கொண்டும் கத்திக் கொண்டுமே இருப்பார்.
எனக்கு 6 வயது இருக்கும் போது அதாவது 2002ல் நாங்கள் என்னுடைய அம்மா வீட்டிற்கே சென்று விட்டோம். அம்மாவிற்கு அப்போது ஆசிரியர் பணி கிடைத்தது, அப்பாவும் வேலைக்காக துபாய் சென்றுவிட்டார். 2 ஆண்டுகள் கழித்து 2004ம் ஆண்டு அப்பா எங்களைத் தேடி வந்து மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று கூறினார். ஆனால் அம்மா வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார். அம்மாவும் வேலையை விட்டு விட்டு அப்பாவுடன் சென்றார்.
அப்பா மிகவும் கண்டிப்பானவர், நான் யாருடனும் சகஜமாக பழகியது கிடையாது எனக்கு நண்பர்களும் கிடையாது. அம்மா மீது அப்பா கோபமாக இருக்கும்போதெல்லாம் அவரை நான் அமைதிப்படுத்தப் பார்ப்பேன். ஆனால் அவர் என்னைத் தள்ளி விட்டு விடுவார். 2 மூன்று முறை அம்மாவை அவர் கடுமையாக அடித்து துன்புறுத்துவதைக் கூட நான் நேரில் பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் எனக்கு மிகவும் பயமாக இருக்கும் அம்மா அடி வாங்குவதையும் என்னால் தடுக்க முடியவில்லை என்று தனது கருப்பு பக்கங்களை அசைபோடுகிறார் பொலிடிகல் சயின்ஸ் மாணவரான கோகுல்.
2009ம் ஆண்டில் இருவரும் பிரிந்து செல்ல முடிவெடுத்தார்கள். இறுதியாக 2013ம் ஆண்டு விவகாரத்து கோரி இருவரும் நீதிமன்றத்தை நாடினார்கள். விவகாரத்துத் தர என்னுடைய அப்பாவும் தயாராக இருந்தார், ஜீவனாம்சமாக என்னுடைய படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டதோடு நாங்கள் வசிப்பதற்காக ஒரு வீட்டையும் கொடுத்தார்.
கோகுல் ஸ்ரீதர் மலையாளத்தில் தனது முகநூல் பக்கத்தில் அப்படி என்ன எழுதியுள்ளார்?
“இது என்னுடைய அம்மாவின் 2வது திருமணம். இது குறித்த பதிவை போடலாமா வேண்டாமா பல முறை யோசித்தேன் ஆனால் இது தான் சரியான நேரம் என்று இந்தப் பதிவை பகிர்கிறேன். ஏனெனில் பெண்களின் மறுமணத்தை இன்னும் சிலர் ஏற்றுக் கொள்வதில்லை. அம்மாவின் இந்த முடிவிற்காக எங்களை சந்தேகத்துடனோ அல்லது வெறுப்புடனோ பார்க்காதீர்கள். நீங்கள் அப்படி நினைத்தாலும் இதை அசிங்கமாக யாரும் பார்க்கமாட்டார்கள். என்னுடைய அம்மாவும் ஒரு பெண்தான் எனக்காக வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்துள்ளார். திருமண வாழ்வில் பல துயரங்களை அனுபவித்திருக்கிறார்.
ஒரு முறை அப்பா அடித்ததில் தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்த போது அவரைப் பார்த்து நான் கேட்டேன், ஏன் இப்படி எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதற்கு அவர் சொன்ன பதில் எனக்காகத் தான், இதை விட கஷ்டங்களையும் கூட பொறுத்துக் கொள்வேன் என்றும் அம்மா அப்போது கூறினார்.
அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறிய தருணத்தில் நான் எடுத்த முடிவு இது. அவருக்கு மீண்டும் ஒரு நல்லறத்தை அமைத்துத் தர வேண்டும் என்று உறுதியேற்றேன். அதையே இன்று செய்து முடித்திருக்கிறேன்.
அம்மாவிற்காக பல வரன்கள் வந்த போதும் அவருடைய பள்ளி பருவத்து நண்பரே வரனாக வந்த போது அவரை மறுமணம் செய்து கொள்ள அம்மாவை சம்மதிக்க வைத்தேன். எனக்காக தன்னுடைய இளமைக் காலத்தை அம்மா தியாகம் செய்திருக்கிறார், பல தடைகளைக் கடந்து வந்திருக்கிறார். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை, அம்மாவின் மறுமணத்தை ரகசியமாக வைக்கவும் விரும்பவில்லை என்பதால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், என்று கோகுல் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கோகுல் ஸ்ரீதரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கோகுலின் முற்போக்குத்தனமான சிந்தனைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். கோகுல் ஸ்ரீதரின் இந்தப் பதிவு அம்மாக்கள் திருமண பந்தத்தில் அனுபவிக்கும் கொடுமைகளுக்கான முற்றுப்புள்ளி என்றே பார்க்க வேண்டும்.
மனம் ஒத்துப் போகாத திருமணங்களில் குழந்தைகளுக்காக என்று எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. பழங்காலத்துப் பெண்களைப் போல கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்றெல்லாம் புராதான வசனங்களை பிதற்றாமல் கஷ்டப்படும் மணவாழ்வில் இருந்து வெளியேறி இஷ்டப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் அவர்களுக்கு இந்த முறிவு பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின்னர் அவர்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார்கள். உங்களுக்கான அன்பையும் மரியாதையையும் நிச்சயம் அவர்கள் உங்களுக்கு அளிப்பார்கள் என்பதே கோகுல் இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தும் செய்தி.
கட்டுரையாளர் : கஜலட்சுமி