கேக்கை ருசிக்கும் வயதில் பேக்கரியே நடத்தும் லிட்டில் வினுஷா!
அம்மாவிற்காக பிறந்தநாள் கேக் தயாரிப்பதில் ஏற்பட்ட ஆர்வம் 9 வயதில் வினுஷாவை லிட்டில் பேக்கராக மாற்றியதோடு சுயமாக ஒரு பிராண்டை உருவாக்கவும் நம்பிக்கை தந்துள்ளது.
குழந்தைகளை சந்தோஷப்படுத்த வேண்டும் என்றால் கேக், ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தால் குஷியாகி விடுவார்கள். ஆனால் 9 வயது சிறுமி வினுஷாவிற்கு அவரே கேக் தயாரித்து அதை உண்பதில் தான் சந்தோஷமாம். பொதுவாகவே குழந்தைகள் கேக்களில் புதிது புதிதான சுவைகளை ருசிக்க விரும்புவார்கள் வினுஷாவோ அந்த கேக் எப்படி தயாரிக்கப்பட்டிருக்கும் என்று தேடிக் கண்டுபிடித்து அதனை முயற்சித்துப் பார்ப்பாராம்.
8 வயது இருக்கும் போது முதன்முதலில் என்னுடைய அம்மாவின் பிறந்தநாளிற்காக என் தோழியுடன் இணைந்து கேக் செய்தேன். முதல் முறையே கேக் நல்ல சுவையுடன் வந்திருக்கிறதே என்று ஆச்சரியமாக இருந்தது. ஏன் இதையே தொடர்ந்து முயற்சி செய்யக்கூடாது என்று நினைத்தேன் பேக்கிங் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தை நான் உணர்ந்த நேரம் அது தான் என்கிறார் சுட்டிப் பெண் வினுஷா.
பேக்கிங் மீது இருக்கும் காதலால் ஒரு மாதம் முறையான பயிற்சிகளை மேற்கொண்டு கப்கேக்களில் புதுப்புது ரகங்களை தயாரித்து நண்பர்கள், உறவினர்களுக்கு வீட்டிலேயே கப்கேக்குகளை தயாரித்து டெலிவரி கொடுக்கத் தொடங்கியுள்ளார் வினுஷா. கப் கேக் என்றால் எசென்ஸ் கலந்து பிரவுன் நிறத்தில் உப்பலாக இருக்கும் ஆனால் வினுஷாவின் கப்கேக்குகள் விதவிதமான நிறங்களில் காண்போரை சுவைக்க வைக்க இழுக்கிறது.
9 வயது சிறுமிக்கு பள்ளி, படிப்பு, வீட்டுப்பாடம், டிவி, எலக்ட்ரானிக் கேட்ஜஸ் தவிர என்ன தெரியும். நானும் மற்றவர்களைப் போல இல்லாமல் இந்த வயதிலேயே எனக்கு பிடித்த பேக்கிங் துறையில் ஒரு தனி பிராண்டை உருவாக்க நினைத்தேன். இந்த வயதிலேயே தொழில்முனைவு அவசியமா எனப் பலரும் கேட்கிறார்கள். பேக்கிங் என்னுடைய ஆர்வம் என்பது தெரிந்து விட்டது எனவே இப்போதே எனக்கான பிராண்டை உருவாக்கினால் நான் வளர வளர என்னுடைய நிறுவனமும் வளர்ச்சி பெறும் என்று பாஸ்ட் பார்வேர்டாக யோசிக்கிறார் வினுஷா.
தொழில்முனைவோராக வேண்டும் என்று விரும்பினாலும் அதற்காக முறையான பயிற்சி தேவை என நினைத்தோம். என்னுடைய விருப்பத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்த அப்பா இணையத்தில் தேடிப் பிடித்து Kidsprenuer பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டார். இந்த பயிற்சி இளம் வயதில் தொழில்முனைவை கையில் எடுக்க என்னென்ன தேவை என்பதற்கான வழிகாட்டியாக இருந்தது என்கிறார் வினு.
செப்டம்பர் 2019ல் வினுஷா தன்னுடைய பிராண்டான 'Four seasons pastry' அறிமுகம் செய்து அதன் நிறுவனர் மற்றம் சிஇஓவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். Seasons என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதையே கருவாக வைத்து என்னுடைய பிராண்டை உருவாக்கினேன்.
கோடைக்காலம், குளிர் காலம், இளவேனில் காலம், இளையுதிர் காலம் என 4 காலங்களை குறிக்கும் வகையில் கப்கேக்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளேன். கோடை கால கப் கேக் மஞ்சள் நிற டாப்பிங்ஸையும், குளிர்கால கப்கேக்கில் ஸ்னோப்ளேக் டாப்பிங்ஸ், இளவேனில் கால கப்கேக்கள் பூக்கள் போன்ற டாப்பிங்ஸ் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் இருக்கும் என்கிறார் வினுஷா.
கப்கேக்களில் தனது கற்பனைத் திறனை வெளிக்காட்டும் வினுஷாவின் கைவண்ணத்திற்கு பலரும் அடிமையாகிவிட்டனர் என்றே சொல்லாம். சென்னையில் நடக்கும் பிரபலமான போட்டிகளில் பங்கேற்று தனது குட்டிக் கைகளால் தயாரிக்கும் கப்பேக்குகளை செய்து காட்டி பார்வையாளர்கள் முதல் டாப் செஃப்கள் வரை அனைவரின் பாராட்டுகளையும் வாங்கிக் குவித்துள்ளார்.
போட்டிகளின் போது அமைக்கும் ஸ்டால்களே அவருக்கு விளம்பரமாகிவிட அதன் மூலமே வாடிக்கையாளர்களும் கிடைத்துள்ளனர். 3 நாட்கள் முன்பே ஆர்டர் வாங்கி விட்டு டெலிவரிக்கு முந்தைய நாள் கப்கேக்குகளை தயார் செய்து விடுகிறார் இவர். வினுஷாவின் ஆர்டர்களை அவருடைய அப்பாவே நேரில் சென்று டெலிவரி செய்து வருகிறார். தற்போது ஆன்லைனில் தீபாவளிக்கான கிப்ட்களுக்கான புக்கிங் தொடங்கியுள்ள இவர்களின் கப்கேக்குகளை Dunzo செயலியிலும் பெறலாம்.
குக்கிங்கை ஏன் பேஷனாக தேர்ந்தெடுத்தாய் என்று பலரும் என்னைk கேட்கிறார்கள். பேக்கிங்கும் ஒரு கலை தான், பொறுமையுடனும் சரியான அளவுகளில் பொருட்களை சேர்த்தும் செய்யாவிட்டால் நாம் நினைத்த சுவை கிடைக்காது. நான் விரும்பிச் செய்வதாலேயே குறுகிய காலத்தில் என்னுடைய தயாரிப்புகள் பிரபலமடைந்திருக்கிறது. பேக்கிங் வீடியோக்களை பார்த்து கேக் தயாரிப்பை மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன் என்கிறார் வினுஷா.
இளம் வயதிலேயே தொழில்முனைவோராகி இருப்பதால் என்னுடைய கல்வியில் எந்த பாதிப்பும் இல்லை. படிக்க வேண்டிய நேரத்தில் படித்து விடுவேன், படித்து முடித்த பின்னர் ஆர்டர்கள் இருந்தால் பேக்கிங் செய்யத் தொடங்கிவிடுவேன். பேக்கிங் செய்யத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது எனக்கு சலிப்போ சோர்வோ வந்ததே இல்லை என்று கூறுகிறார் வினுஷா. எல்லோராலும் வெளிநாடுகளில் சென்று பேக்கிங் தொடர்பான படிப்புகளை படிக்க முடியாது எதிர்காலத்தில் பேக்கிங் இன்ஸ்டிட்யூட் தொடங்கி நிறைய குட்டி சுட்டி செஃப்களை உருவாக்கி வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளார்.
9 வயது சிறுமிக்கு இத்தனை புரிதலா என்று ஆச்சரியமாக வினுஷாவின் தந்தை முத்து ராமலிங்கத்திடம் கேட்டால் புன்னகையை பதிலாகத் தருகிறார். நான் கல்வி ஆலோசகராக இருக்கிறேன், என்னுடைய மனைவி கவிதா pre school நடத்தி வருகிறார். எங்களுடைய தொழிலை அபிவிருத்தி செய்வது தொடர்பாக நாங்கள் எப்போதும் வீட்டில் பேசிக் கொண்டிருப்போம் அதைப் பார்த்து வினுஷா தானும் தொழில்முனைவோராக வேண்டும் என்று கூறினார். அந்த சமயத்தில் பேக்கிங் மீது அவருக்கு ஆர்வம் இருந்ததால் அதையே தொழில்முனைவுக்கான அடித்தளமாக தேர்ந்தெடுத்தோம் என்கிறார் முத்து ராமலிங்கம்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வினுஷா தொழில்முனைவை தேர்ந்தெடுக்கவில்லை. Culinary அவளுடைய passion என்பதால் நாங்களும் அவளுடைய யோசனைக்கு மறுப்பு கூறவில்லை. தற்போது சிறிய அளவில் செய்து கொண்டிருக்கும் பேக்கிங்கால் வினுவிற்கு கவனச்சிதறல்கள் வருகிறதா அவரால் முழுமனதோடு கேக் தயாரிப்பு, படிப்பு இரண்டிலும் கவனம் செலுத்த முடிகிறதா என்பதை கண்காணித்து வருகிறோம்.
வினுஷாவின் மென்டர்கள் பலரும் அவருக்கு culinary தொடர்பான நல்ல அடித்தளம் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருவதால் எதிர்காலத்தில் அயல்நாடுகளில் இருக்கம் பயிற்சி மையங்களில் முறையாக கற்றுக்கொள்ள வைக்கலாம் என்று திட்டமிட்டு வருவதாகக் கூறுகிறார் லிட்டில் செஃப்பின் தந்தை.
லிட்டிள் பேக்கர் வினுஷாவின் கேக்கை ருசிக்க ஆர்டர்களுக்கு இந்த பக்கத்தை கிளிக் செய்யுங்கள் Fourseasonspastry