நிஜக் கல்யாணங்களின் பொம்மை வெர்ஷன்: வருமானம் ஈட்டும் தொழிலாக செய்யும் மதுரை நித்யா!
வீட்டு அலங்காரத்திற்காகவும், ஹாபியாகவும் தொடங்கிய பொம்மை தயாரிப்பை, வருமானம் ஈட்டும் தொழிலாக்கி தொழில்முனைவராக மிளிர்கிறார் மதுரையைச் சேர்ந்த நித்யா.
பொம்மைகள்... குழந்தைகளின் உலகத்தை அழகாக்கும் அவைகள் மீது விருப்பம் கொள்ளாதோரில்லை. ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம். ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு வகைபொம்மை. ஆம், அக்காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட ஆண், பெண் என்றிருக்கும் மரப்பாச்சி பொம்மைகள் புதுமண தம்பதிகளுக்கு பெற்றோர்களால் சீதனமாக அளிக்கப்பட்டது. அதுவே இன்று அப்டேஷனாகி நூல் மற்றும் கம்பி பொம்மைகளாக மணமகளின் சீர்வரிசையில் அழகாய் விற்றிருக்கின்றன. அதுபோன்ற, சீர்வரிசையாக அளிக்கும் பொம்மைகளை விதவிதமாய் கைகளால் தயாரித்து, பர்சை நிரப்பும் தொழிலாகவும் மாற்றியுள்ளார் நித்யா.
மதுரையைச் சேர்ந்த நித்யா, வீட்டு அலங்காரத்திற்காகவும், ஹாபியாகவும் ஆர்ட் அண்ட் கிராப்ட்டை கையில் எடுத்தவர். ஆம், திருமணத்துக்கு பிறகு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். குடும்பம், குழந்தை என்றாக, சொந்த கனவுகளை தள்ளி வைத்தார். குழந்தைகளும் வளர்ந்து பள்ளிக்குச் செல்ல, அவருக்கான நேரம் கிடைத்தது. அந்நேரங்களில் அவருடைய பால்ய காலத்து பொழுதுபோக்கான பெயின்டிங்கை மீண்டும் தொடங்கி உள்ளார்.
அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தனையில் இருந்த காலத்தில் வடஇந்தியாவை நோக்கிய ஒரு பயணம் மேற்கொண்டார். அந்த ஒரு பயணமே நித்யாவின் ஹோம்ப்ரூனர் அவதாரத்திற்கான தொடக்கப்புள்ளி.
“சின்ன வயசுல வீட்ல அம்மா வரலெட்சுமி நோன்பு அன்று, சாமி சிலை செய்து அலங்கரிப்பாங்க. அப்போ நாங்களும் கூட இருந்து உதவி செய்வோம். அப்படி தான் பொம்மைகள் செய்றது எப்படினு தெரிஞ்சுக்கிட்டோம். ஆனா, இந்த கம்பி பொம்பைகள் பற்றி ஒரு 5 ஆண்டுகளுக்கு முன்னாடி தான் தொரிஞ்சுகிட்டேன்.
தசரா திருவிழா நடந்து கொண்டிருந்த சமயம் நார்த் இந்தியாவுக்கு குடும்பத்துடன் போயிருந்தோம். அங்க இந்த பொம்பைகள் ரொம்ப ஸ்பெஷல். எல்லா கடைகளிலும் தசரா பொம்மைகள் விற்றுக் கொண்டிருந்தார்கள். நாங்க டிரிப் முடிச்சு வரும்போது ஒரு ஜோடி பொம்மைகளையும் வாங்கிவந்தேன்.
வீட்டுக்கு வந்த அப்புறம், அந்த பொம்மையின் உயரம், அகலம், சுற்றளவுனு எல்லா அளவுகளையும் குறித்து வைத்து கொண்டு ஸ்டெப் பை ஸ்டெப்பா பிரிச்சு, எப்படி தெரிஞ்சுருகாங்கனு பாத்தேன். அப்புறம் வீட்டிலிருந்த பஞ்சு, கம்பி வைத்து நானே ஒரு பொம்மை செய்தேன்,” என்று கம்பி பொம்மைகளுக்கும் அவருக்குமான கனெக்ஷன் எங்கிருந்து துவங்கியது என்ற கதையை கூறினார்.
தொடக்கத்தில், வீட்டு விசேஷங்களுக்கும், சொந்தப்பந்தம் மற்றும் அக்கம் பக்கத்தாரின் விருப்பத்திற்கு ஏற்ற பொம்மைகளை தயாரித்து கொடுத்துள்ளார். பின்பு கணவரின் உந்துதலில் இக்கலையை வணிக ரீதியாக மாற்றியுள்ளார். மதுரை அரசரடியில் அமைந்துள்ள அவர்களது ‘குமாரய்யா அகாடமி’ எனும் கலைக்கூடத்தில், திருமணம், காதுக்குத்து, பூப்புனித நீராட்டு விழா என அனைத்து மங்கல நிகழ்வினையும், அதன் சடங்குகளையும் அப்படியே பிரதிபலிக்கும் பொம்பைகள் அழகாய் அடுக்கி வைக்கப்படுள்ளன. ஆம், மாப்பிள்ளை அழைப்பு, மணமகள் வளையல் சூடுதல், பரிசம் செய்தல், விருந்து நிகழ்ச்சி போன்ற திருமணம் சடங்குகளை அப்படியே செய்வதுடன், கொலுவிற்கு தேவையான அனைத்து வகையான பொம்மைகளையும் தயாரிக்கிறார்.
சுப நிகழ்ச்சிகளில் சீர் வரிசையில் இடம்பெறும் பொம்மைகளை தயாரிப்பதுடன், சீர்வரிசை தட்டுகளையும், ரெடிமேட் பொம்மைகளையும் அலங்கரித்து விற்பனை செய்து வருகிறார்.
“கொலு பொம்மைகள் என்றாலே மண் பொம்மைகள் தான். அதை பாதுகாப்பது ரொம்ப கடினமான விஷயம். ஒரு முறை விழுந்துவிட்டால் மறுபடியும் பயன்படுத்த முடியாது. ஆனா, இந்த பொம்பைகள் எல்லாம் வளையும் தன்மை கொண்டது. தூசி படிந்து அழுக்காகிவிட்டாலும், அழுக்காகிய இடத்தில் சோப்பு துணி வைத்து கழுவிவிட்டால் காலத்திற்கும் கிடக்கும். கம்பி வளைப்பது தொடங்கி, பொம்மையின் ஃபைனல் டச் வரை அனைத்துமே கைவேலைப்பாடு தான். அத்துடன், கம்பி பொம்மைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவை. இது தான் கம்பிப் பொம்மைகளின் ஸ்பெஷாலிட்டி,” என்றார் அவர்.
கம்பி பொம்மை தயாரிப்பை முழுநேர பிசினசாக பலரும் செய்து வந்தாலும், அவர்களிடமிருந்து தன்னை வேறுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சில முயற்சிகளையும் செய்துள்ளார்.
“பொதுவாக வணிக நோக்கத்தை கருத்தில் கொண்டு கம்பி பொம்மைகள் செய்பவர்கள், 4 இன்ச் உயரத்தில் தான் பொம்மையை செய்கின்றனர். நாங்க 12 இன்ச் வரை பொம்மைகள் செய்கிறோம். அப்புறம், பொம்மைகளின் தலை மரம் அல்லது பேப்பர் மேஷ் கொண்டு தயாரித்து அதில் கண், காது, மூக்கு எல்லாம் வரைந்து கொள்வர். எங்க பொம்மைகளில் கண், காது எல்லாம் எம்போசாகிருக்கும்.”
மியூரல் பெயின்டிங், ஆயில் பெயின்டிங், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பொம்மை தயாரிப்பும் கற்றுக் கொடுத்து வருகிறார் நித்யா. கம்பியை பொம்மைகளின் பேஸ்மண்ட். அதை, மனித எலும்புக்கூடு தோற்றத்திற்கு வளைத்தபின், அதில் பஞ்சு வைத்து உல்லன்நூல் கொண்டு சுற்றினால் பொம்மைகளின் உடல்பகுதி கிடைத்துவிடுகிறது. பொம்மைகளின் தலைபகுதி மரம் அல்லது பேப்பர் மேஷ் கொண்டு தனியாக தயாரித்து கொள்ளப்படுகிறது. பிறகு, அந்த உடலையும் இந்த தலையையும் இணைத்து விருப்பப்படி ஆடை, அணிகலன்களை அணிவித்து கம்பி பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.
“இத்தொழிலை செய்ய நினைப்பவர்களுக்கு பொறுமையும், ஆர்வமும் அவசியம். முதலில் குறைந்த அளவில் மூலப்பொருள்களை வாங்கி இரண்டு, மூன்று பொம்மைகள் செய்து அதற்கான வாடிக்கையாளர்களைத் தேடி கொண்டு, எவ்வளவு லாபம் வருகின்றது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு பொம்மை தயாரிக்க இரண்டரை மணி நேரமாகும். அதிக டைம் எடுத்து பண்ணீங்கனா பினிஷிங் நல்லாயிருக்கும். நல்ல லாபம் தரக்கூடிய தொழில் தான் இது. அழகா செய்து கொடுத்தால், கஸ்டமர்கள் தேடி வருவார்கள்...” என்றார் நித்யா நிறைவாக.