Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

மதுரை மாணவிகளை தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி துறைகளுக்குச் செல்ல பயிற்சி தரும் தொழில் முனைவர்!

மதுரையில் செந்தில் குமார் பயிற்சியளித்த இளம் பெண்களில் சிலர், விண்வெளி வீரர்கள் ஆகவேண்டும் என்கிற கனவை வளர்த்துக்கொண்டுள்ளனர். மேலும் சிலர் உள்ளூர் சிக்கல்களுக்கு தீர்வளிக்கும் சிறந்த செயலிகளை உருவாக்குகின்றனர்.

மதுரை மாணவிகளை தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி துறைகளுக்குச் செல்ல பயிற்சி தரும் தொழில் முனைவர்!

Friday April 05, 2019 , 4 min Read

பழமையான கோயில்களுக்கும் கலாச்சாரத்திற்கும் ஜிகர்தண்டாவிற்கும் பிரபலமான மதுரையில் உள்ள சிரேதாவின் கண்களில் நட்சத்திரங்கள் மின்னுகின்றன. கல்பனா சாவ்லாவின் வாழ்க்கையைக் கண்டு ஈர்க்கப்பட்ட இந்த 12 வயது சிறுமி இந்தியாவின் முன்னணி விண்வெளி வீரர்களில் ஒருவராக உருவாகவேண்டும் என்கிற கனவைக் கொண்டுள்ளார்.

பெண்கள் தங்களது தற்போதைய சூழலைக் கடந்து மிகப்பெரிய கனவைக் காணலாம் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் இந்தச் சிறுமி. 2014-ம் ஆண்டு முதல் தனது சொந்த ஊரில் உள்ள பெண்களுக்கு பயிற்சியளித்து வரும் எம் செந்தில்குமாரின் முயற்சியால் மட்டுமே இது சாத்தியமானது.

செந்தில் கடந்த ஐந்தாண்டுகளில் மதுரையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சியளித்துள்ளார். அவர் பெங்களூருவில் பணியாற்றியபோது பெண்களுக்கு ஆலோசனை வழங்க ஒவ்வொரு வார இறுதியிலும் மதுரைக்குப் பயணம் செல்வார். பெங்களூருவில் இருந்து மதுரைக்கு 12 மணி நேரம் காரில் பயணம் சென்று இந்த முயற்சியை செய்தது, அவரின் அர்ப்பணிப்பைப் பற்றி புரிந்துகொள்ள முடிகிறது.

அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது. உலகளவிலான தொழில்முனைவு திட்டமான ’டெக்னொவேஷன் சேலஞ்ச்’ நிகழ்வில் பள்ளி மாணவிகள் 36 பேர் தங்களது செயலிகளை நம்பிக்கையுடன் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

தன்னிறைவுள்ள சமுகம்

செந்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவிகளுக்காக ’டெக்னொவேஷன் சேலஞ்ச்’ நடத்துகிறார். அதுமட்டுமின்றி கல்லூரி மாணவிகளுக்காக ஓபன் சோர்ஸ் சார்ந்து ’கீக் கேர்ல்ஸ்’, பெண்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் தளங்களில் பயிற்சியளிக்க ‘வீவுமன்’ ஆகிய இருவேறு திட்டங்களையும் நடத்தி வருகிறார்.

”பெண்களை உலகளவிலான போட்டிகளுக்குத் தயார்படுத்த டெக்னொவேஷன் சேலஞ்ச் நான்கு எடிஷன்களை நடத்தியுள்ளேன். எங்களிடம் பயிற்சி பெற்ற பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் பிராந்திய நிகழ்வுகளில் வெற்றி பெறுகின்றனர். சில பெண்களுக்கு நல்ல பணி வாய்ப்பு கிடைத்துள்ளது. சிலர் சொந்த வணிக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்,” என்றார் செந்தில்.

முயற்சிக்கான உந்துதல்

”நான் என்னுடைய பகுதியில் தொழில்நுட்பம் சார்ந்த தன்னிறைவுள்ள சமூகத்தை உருவாக்க விரும்பினேன். சமூகத்தில் நிலவும் டிஜிட்டல் பிளவுகளை இணைத்து அதிக பாதிப்பிற்கு ஆளாகும் நபர்களுக்கு சக்தியளித்தால் மட்டுமே இது சாத்தியம் என்பதை உணர்ந்தேன். இந்த காரணத்திற்காகவே சமூக மேம்பாடு மற்றும் கல்வி சார்ந்த முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டேன்.

“தொழில்நுட்பம் வாயிலாக இளம் பெண்களுக்கு பயிற்சியளிக்கும் ’மீடூமென்டார்’ (MetooMentor) என்கிற லாபநோக்கமற்ற நிறுவனத்தின் மூலம் இந்த முயற்சிகளில் ஈடுபட்டேன்,” என்றார் செந்தில்.

செந்தில் தனது பயணத்தை மதுரையில் இருந்தே துவங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்தார். உலகின் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியவேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.

2010-ம் ஆண்டு பெங்களூரு சென்று சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியத் துவங்கினார். 2014-ல் Qualcomm நிறுவனத்திற்கு மாறினார். அங்குதான் பெங்களூருவில் பெண்களுக்காக நடத்தப்படும் பயிற்சித் திட்டங்கள் குறித்து கேள்விப்பட்டார்.

பெண்களுக்கான இத்தகைய தொழில்நுட்ப பயிற்சி திட்டங்கள் குறித்து செந்தில் கேள்விப்பட்டபோது தனது சொந்த ஊரில் இருக்கும் பெண்களுக்கும் இதே போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தவேண்டும் என தீர்மானித்தார். அப்போதுதான் பெண்களுக்கு பயிற்சியளிக்க ஒவ்வொரு வார இறுதியிலும் மதுரைக்கு பயணம் செய்யத் தொடங்கினார். எனினும் சிறு நகரில் இளம் மாணவிகளுக்கு இளைஞர் ஒருவர் பயிற்சியளிப்பது எளிதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சமூக கட்டுப்பாடுகள் காரணமாக பெண்களை நேரடியாக அணுகமுடியாது என்பதை செந்தில் உணர்ந்தார். அவரது சகோதரியான மணிமாலா இளம் பெண்களை அணுகி அவர்களுடன் ஒருங்கிணைந்தார். செந்தில் அவர்களுக்கு பயிற்சியளித்தார்.

பெண்கள் பயிற்சிக்கு சம்மதித்த பிறகு பள்ளி அல்லது கல்லூரி தரப்பில் இருந்து சம்மதம் பெறவேண்டியிருந்தது. இறுதியாக அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சம்மதிக்கவைப்பது கடினமாக இருந்தது. ஆனால் செந்திலின் விடாமுயற்சி பலனளித்தது. மாற்றத்திற்கான விதை மதுரையில் விதைக்கப்பட்டது.

பெண்கள் அனைவரிடமும் திறமை இருந்ததைக் கண்டேன். ஆனால் சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக இவர்களால் முன்னேற இயலவில்லை. எனவே இவர்களை ஊக்குவித்து, இவர்களது குடும்பங்களை சம்மதிக்கை வைத்து, இவர்களுக்கு பயிற்சியளித்து உள்ளூர் சிக்கல்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இவர்கள் தீர்வு காண உதவவேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது.

உதாரணத்திற்கு பெண்கள் உருவாக்கிய மதுரை காவலன் செயலிக்கு மதுரை காவல்துறை ஆதரவளித்தது. இந்த செயலி பூட்டிய வீடுகளில் நடக்கப்படும் திருட்டுகளை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். தற்போது இந்த செயலியை சுமார் 40,000 பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

பயிற்சி நம்பிக்கையளிக்கிறது

டெக்னொவேஷன் சேலஞ்சில் மேடையில் இருக்கும் பெண்கள் தொழில்நுட்பத்தையும் அவர்கள் உருவாக்கிய செயலிகளையும் பயன்படுத்தி உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதம் குறித்து விவரித்தனர். நகரை சுத்தமாக வைப்பதற்கான வழிமுறைகள், திருட்டைத் தவிப்பதற்கான விலை மலிவான தீர்வுகள், படிக்காத அதேசமயம் திறன்மிக்க தொழிலாளர்கள் பணி வாய்ப்பு குறித்து தெரிந்துகொள்ள உதவும் தளம் என பல்வேறு தீர்வுகளை உருவாக்கியுள்ளனர்.

”பயிற்சி இந்தப் பெண்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட உதவியுள்ளது. மேடையேறி தங்களது திறமையை வெளிப்படுத்த உதவியுள்ளது. ”இதுதான் பயிற்சியின் முக்கிய அம்சம்,” என்று செந்தில் குறிப்பிட்டார்.

அவர்கள் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ள இந்த நம்பிக்கைதான் உதவியுள்ளது.

“சில பெண்கள் STEM கல்வி பயின்று தொழில்முனைவில் ஈடுபட்டு தொழில்நுட்பம் கொண்டு உள்ளூர் பிரச்சனைக்களுக்கு தீர்வுகாண்கின்றனர்,” என்றார் செந்தில்.

தீர்வுகாண்போர் குழுவை உருவாக்குதல்

2016-ம் ஆண்டில் உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பணியில் முழுநேரமாக ஈடுபட மதுரைக்கு மாற்றலானார். இரண்டு நிறுவனங்களைத் துவங்கினார். இவர் கர்ப்பிணிகளுக்கு தரமான ஹெல்த்கேர் சேவை வழங்கும் Jiovio Healthcare ஸ்டார்ட் அப்பின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர். இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது கிராமப்புறங்களில் தொலைதொடர்பு வசதி இல்லாததை உணர்ந்தார். எனவே தொலைதூரப் பகுதிகளில் தொடர்பை ஏற்படுத்த Geomeo என்கிற அடுத்த ஸ்டார்ட் அப் முயற்சியைத் துவங்கினார். மதுரையில் உள்ள கூகுள் டெவலப்பர் சாப்டருக்கு செந்தில் தலைமை வகிக்கிறார். அதேபோல் மதுரை டெக்னொவேஷன் சாப்டரின் பிராந்திய தலைவராகவும் உள்ளார்.

பயிற்சி பெற்ற பெண்கள் தாங்கள் கற்றதை அடுத்தவர்களுக்கு கற்றுக்கொடுத்து ஒருவருக்கொருவர் ஆதரவளித்துக்கொள்ளும் சமூகத்தை உருவாக்குவதைக் கண்டு செந்தில் பெருமைப்படுகிறார்.

செயலி உருவாக்குதல், வெவ்வேறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வுகாணுதல், தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்த புரிதல் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்தப் பெண்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

”பெண்களின் அறிவாற்றலை மேம்படுத்தவேண்டும். அவர்கள் தற்சார்புடன் இருக்க உதவவேண்டும். சமூகக் கட்டுப்பாடுகள் அவர்களது முயற்சிகளுக்கு தடைவிதிக்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இதுவே எங்கள் நோக்கம்,” என்றார்.

செயலி உருவாக்கம்

சிரேதா ஒரு விண்வெளி வீரராக உருவாகி விண்வெளியில் பயணிக்க விரும்புகிறார். அதேசமயம் பூமியில் தனது திறமையை வெளிப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறார். பெண்கள் பயமின்றி நகைகளை அணிந்து செல்லும் வகையில் நகைத் திருட்டை தவிர்க்கக்கூடிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

”நாம் செய்திகளில் நகை பறிப்பு சம்பவங்கள் பலவற்றைப் பற்றி கேள்விப்படுகிறோம். பெண்கள் நகைகளை இழந்துவிடுவோம் என்கிற பயமின்றி அவற்றை அணிந்துசெல்ல விரும்புகிறோம்,” என்றார்.

சில சமயங்களில் சிறு நகரங்களில் உள்ள பெண்களுக்குப் பெரிதாக கனவு காண்பதுகூட சாத்தியமில்லாமல் போகிறது. ஆனால் கனவு காண்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அவர்களால் அவற்றை நிறைவேற்றவும் முடியும் என்பதை செந்தில் உணர்த்துகிறார்.

ஆங்கில கட்டுரையாளர் : தன்வி துபே | தமிழில் : ஸ்ரீவித்யா