எம்பிஏ-வை பாதியிலே விட்டு டீக்கடை வைத்து, இன்று ரூ.4 கோடி டர்ன்ஓவர் வணிகமாக்கிய இளைஞர்!
மிகப்பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும் என்று கனவு கண்ட பிரஃபுல் பில்லோர் எம்பிஏ படிப்பை பாதியிலேயே இடைநிறுத்தம் செய்துவிட்டு சிறியளவில் டீ விற்பனை தொடங்கி இன்று வெற்றிகரமாக பல இடங்களில் கஃபே நடத்தி லாபம் ஈட்டி வருகிறார்.
பிரஃபுல் பில்லோர் உணவில் அதிக ஈடுபாடு கொண்டவர் அல்ல. இருப்பினும் இவர் 'எம்பிஏ சாய்வாலா’ என்கிற டீ வணிகம் தொடங்கி பிரபலமாகியிருக்கிறார்.
“நிறைய சம்பாதிக்கவேண்டும். வசதியாக வாழவேண்டும். சிறு வயது முதலே இதுதான் என் கனவு. நான் எம்பிஏ முடித்தால் நல்ல சம்பளத்துடன் வசதியாக வாழலாம் என்று என் பெற்றோர் நினைத்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. மூன்று முறை CAT நுழைவுத் தேர்வு எழுதினேன். எவ்வளவோ முயற்சி செய்தும் தேர்வில் தோல்வியடைந்தேன்,” என்கிறார் பிரஃபுல்.
மத்திய பிரதேசத்தின் தார் என்கிற சிறுநகரைச் சேர்ந்தவர் பிரஃபுல். 2017-ம் ஆண்டு முதல் இவர் அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார்.
படிப்பைக் காட்டிலும் புத்தக வாசிப்பில் இவருக்கு ஆர்வம் அதிகம். குறிப்பாக வணிகத் தலைவர்களின் மேற்கோள்கள் இவரைப் பெரிதும் ஈர்த்தன. ஊக்கமளித்துள்ளன.
எம்பிஏ படிக்க ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து ஐந்தாண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று பல மில்லியன் மதிப்புடைய நிறுவனத்தை கட்டமைத்துள்ள தொழில்முனைவராக உயர்ந்துள்ளார். இவரது நிறுவனமான ‘எம்பிஏ சாய்வாலா’ (MBA Chaiwala) இந்தியா முழுவதும் 50 அவுட்லெட்களுடன் செயல்பட்டு 4 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்டுள்ளது.
இவர் தொழில் முயற்சியைத் தொடங்கிய புதிதில் சுற்றியிருப்பவர்கள் மட்டுமல்ல பெற்றோரும் எதிர்ப்புக் குரலே கொடுத்துள்ளனர். இந்த எதிர்ப்புகளைத் தாண்டி தொழில் தொடங்கி இன்று வளர்ச்சியடைந்துள்ளதன் பின்னணியைப் பற்றி அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மனமிருந்தால் நிச்சயம் மார்க்கமுண்டு
மக்களை சந்திப்பதிலும் உரையாடுவதிலும் பிரஃபுலுக்கு ஆர்வம் அதிகம். இதனால், புதிய கண்ணோட்டம் கிடைக்கும். உலகம் விரிவடையும் என்பது அவரது கருத்து. 2016ம் ஆண்டு கையில் இருந்த சேமிப்பு அனைத்தையும் பயணம் செய்வதற்கு செலவிட்டார். எங்கெல்லாம் செல்ல முடியுமோ சென்றார். பலரை சந்தித்தார்.
பெற்றோர் தரப்பில் ஒரே அழுத்தம். முழுநேரமாக கல்லூரியில் சேரவேண்டும். படிப்பை முடிக்கவேண்டும். அப்போதுதான் நல்ல வேலை கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்.
சூழலை சமாளிக்க முடியவில்லை. அப்பா அம்மா கொடுக்கும் அழுத்தத்தை புறக்கணிக்க முடியவில்லை. வேறு வழியின்றி அகமதாபாத்தில் கல்லூரியில் சேர்ந்தார்.
“நான் கல்லூரியில் சேர்ந்தேன். அதேநேரம் பணிச்சூழல் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளவும் முடிவு செய்தேன். மெக்டொனால்ட்ஸில் சேர்ந்தேன். சம்பளம் குறைவுதான். அந்த சமயத்தில் திடீரென்று என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. ஒருவேளை எம்பிஏ முடித்தாலும் இதேபோல் குறைந்த சம்பளத்தில்தான் வேலை கிடைக்குமா? இதுபற்றி யோசித்தேன். மனதில் அடுத்த கேள்வி எழுந்தது. இப்படியே இருந்தால் வாழ்க்கையில் உயரத்தை எட்டவேண்டும் என்கிற என் கனவு எப்படி நனவாகும்? இதற்கான விடையைத் தேடினேன்,” என்கிறார்.
எம்பிஏ முடித்து அதிக சம்பளத்துடன் உயர் பதவியில் இருப்பவர்கள் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் இந்த அதிர்ஷ்ட்டம் இருந்துவிடாதே என்று யோசித்தார். இந்த யோசனையின் விளைவு படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார். அகமதாபாத் எஸ்ஜி ஹைவேயில் தள்ளுவண்டி போன்ற அமைப்பில் டீ விற்பனையைத் தொடங்கினார்.
“இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பருகும் பானம் என்றால் அது டீதான். எனக்கு டீ போடத்தெரியாது. ஆனால் எல்லோருக்கும் தேவை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். மற்ற வாய்ப்புகளை ஆராயவில்லை. காரணம் குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாயாவது அதற்கு முதலீடு செய்யவேண்டியிருக்கும். கையிலிருந்த 8,000 ரூபாய் பணத்துடன் சாலையோர டீ வியாபாரத்தைத் தொடங்கினேன்,” என்கிறார்.
மிஸ்டர் பில்லோர் அகமதாபாத் என்பதன் சுருக்கமே எம்பிஏ என்று குறிப்பிடும் பிரஃபுல், “எந்த தொழிலும் தவறல்ல. மனமிருந்தால் மார்க்கமுண்டு,” என்கிறார்.
பெற்றோர்களுக்கு இவரது முடிவில் உடன்பாடில்லை. கோபப்பட்டனர். மற்றொருபுறம் உறவினர்கள் தொல்லை வேறு. ஆனால், பிரஃபுல் இவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. தொழிலை எப்படி வளர்ச்சியடையச் செய்வது என்கிற ஒற்றை சிந்தனை மட்டுமே அவர் மனதை ஆக்கிரமித்திருந்தது.
ஆங்கிலம் பேசும் ஒருவர் டீ விற்பனை செய்கிறாரா என சுற்றியிருந்த மக்களுக்கு ஒரே ஆச்சரியம். மெல்ல மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவருக்கு டீ போடத் தெரியாது. ஆரம்பத்தில் நிறைய சர்க்கரையைச் சேர்த்து குளறுபடி செய்த அனுபவங்களும் உண்டு என்கிறார். படிப்படியாக டீ தயாரிக்கக் கற்றுக்கொண்டார்.
”இன்று டீ போடுவதைக் காட்டிலும் என் தொழிலை எப்படி விரிவுபடுத்தலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்,” என்கிறார்.
தள்ளுவண்டியில் டீ விற்பனை செய்த காலத்தில் வாடிக்கையாளர்களைக் கவர பிரஃபுல் பலவிதமாக யோசித்தார். கிரிக்கெட், லூடோ போன்ற விளையாட்டுகள் ஏற்பாடு செய்தார். ஒயிட் போர்ட் ஒன்று வைத்திருந்தார். இதில் மக்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மெசேஜ் எழுதலாம். வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை வரும்போதும் இப்படி ஏதாவது புதிதாக அறிமுகப்படுத்தி அசத்தினார்.
விரிவாக்கம்
எம்பிஏ சாய்வாலா வளர்ச்சியடையத் தொடங்கியது. எஸ்ஜி ஹைவேஸ் அவுட்லெட்டில் இரண்டாண்டுகள் செயல்பட்டதை அடுத்து போபாலில் ஒரு ஃப்ரான்சைஸ் கஃபே ஆரம்பித்தார். தள்ளுவண்டியில் தொடங்கப்பட்ட எம்பிஏ சாய்வாலா இன்று 50 கஃபேக்களுடன் வளர்ச்சியடைந்துள்ளது.
Chaayos, Chai Point போன்ற பிரீமியம் டீ கஃபேக்களை சுட்டிக்காட்டிய பிரஃபுல் இந்தியாவில் எப்போதும் டீ வணிகம் சிறப்பாகவே இருக்கும் என்கிறார்.
கஃபே ஒன்றில் வசதியாக அமர்ந்துகொண்டு 40-50 ரூபாய் வரை செலவிட்டு டீ குடிக்க விரும்பும் மக்களுக்கு சேவையளிப்பதே எம்பிஏ சாய்வாலா நோக்கமாக உள்ளது.
“சுயநிதியில் தொழிலை நடத்தி வருகிறேன். பெரிய பிராண்டுகளின் அளவிற்கு வணிகத்தை விரிவாக்கம் செய்வதில் சில கட்டுப்பாடுகள் இருக்கவே செய்கின்றன. தொழில் ஆரம்பிக்கும் புதிதில் சிறு நகரங்களில் இருந்து செயல்படும் என்னைப் போன்றோருக்கு நிதி திரட்டுவது என்பது பரிச்சயமில்லாத ஒன்று,” என்கிறார்.
இந்தியாவில் 2022-2027 காலகட்டத்தில் இந்த சந்தை 4.2 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சியடைந்து 1.40 மில்லியன் டன் என்கிற அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக சந்தை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிறுநகரங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு மில்லியனர்
பிரஃபுல் டீ வணிகம் மட்டுமில்லாமல் எம்பிஏ சாய்வாலா அகாடமி தொடங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஏராளமான ஃபாலோயர்கள் இருக்கின்றனர். இதுவும் பிராண்ட் வளர்சிக்கு முக்கியக் காரணம்.
“ஒவ்வொரு சிறு நகரங்களில் இருந்தும் ஒரு மில்லியனரை உருவாக்க விரும்புகிறேன்,” என்கிறார்.
2022-ம் ஆண்டு இறுதிக்குள் 100 எம்பிஏ சாய்வாலா அவுட்லெட் திறக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்.
இந்தியாவில் பேற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்கிற கருத்தையும் தன் வாழ்க்கை பயணத்துடன் சேர்த்தே முன்வைக்கிறார் பிரஃபுல்.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா