Ford அதிகாரிகள் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை துவங்குமா ஃபோர்டு?
தமிழ்நாட்டின் தொழில் பரப்பில் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய ஸ்ரீபெரும்பதூரில் அருகே அமைந்த ஃபோர்டு நிறுவன ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
தமிழ்நாட்டின் தொழில் பரப்பில் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய சென்னை அருகே அமைந்த ஃபோர்டு நிறுவன ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் ஃபோர்டு மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய திட்டமிட்டிருப்பதாக தொடர்ந்து தகவல்கள் கசிந்து வந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தமிழ்நாட்டுடனான ஃபோர்டு நிறுவனத்தின் 30 ஆண்டு உறவை புதுப்பிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தததாக, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஃபோர்டு வருகை
பல்வேறு பெருமைகளைக் கொண்ட சென்னை நகரம், கார் தயாரிப்பு தொழிலில் சிறந்து விளங்குவதற்காக இந்தியாவின் டெட்ராய்ட் (அமெரிக்க கார் தயாரிப்பு நகரம்) என அழைக்கப்படுகிறது. சென்னையின் பெருமைக்கு வலு சேர்க்கும் வகையில், 1990-களில் சென்னை அருகே மறைமலை நகரில் அமெரிக்க முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் ஃபோர்டு தனது உற்பத்தி ஆலையை அமைத்தது.
இந்தியாவின் மகிந்திரா நிறுவனத்துடன் இணைந்து ஃபோர்டு உற்பத்தியை துவக்கியது.
மறைமலைநகரில் அமைந்த ஃபோர்டு இந்தியா ஆலை, இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தது. மேலும், இந்திய கார் சந்தை மேலும் விரிவடைந்து வளரவும் காரணமாக அமைந்தது. ஃபோர்டு நிறுவனத்தை தொடர்ந்து மேலும் பல வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னைக்கு படையெடுத்தன. மறைமலை நகர் பகுதியிலும் நிறுவனங்கள் அதிகரித்தன.
ஃபோர்டு கார்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், சந்தையில் அதிகரித்த போட்டி காரணமாக பின் தங்கியது. ஒரு கட்டத்தில் ஃபோர்டு கார்களின் சந்தை பங்கு மிகவும் குறைந்தது.
கோவிட் தாக்கம்
இதனிடையே, 2020ம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று தாக்கம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக ஃபோர்டு இந்தியா 2021ம் ஆண்டு அறிவித்தது. அடுத்த ஆண்டு சென்னை உள்ளிட்ட ஆலைகளில் உற்பத்தியை நிறுத்துக்கொண்டது.
குஜராத்தில் இருந்த ஆலை விற்பனை செய்யப்பட்டாலும் சென்னை ஆலை தொடர்ந்து ஃபோர்டு வசம் இருந்தது. ஒரு காலத்தில் பரபரப்பாக இயங்கி வந்த ஆலை அமைதியானது, அங்கு பணிபுரிந்தவர்களுக்கு வருத்தம் அளித்தது. ஃபோர்டு சென்னை ஆலையின் எதிர்காலம் பற்றி உறுதியாக தெரியாத நிலையில் அண்மை ஆண்டுகளாக, இந்த ஆலை மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்புகள் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி வந்தன.
ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. மின்வாகனங்களுக்கான வரவேற்பும் தேவையும் அதிகரித்து வரும் சூழலில், ஃபோர்டு மின்வாகன தயாரிப்பிற்கு இந்த ஆலையை பயன்படுத்தலாம் என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகின.
திட்டங்கள் தோல்வி
எனினும், ஃபோர்டு இந்தியா தொடர்பான திட்டங்களில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தன. மகிந்திரா நிறுவனம் மற்றும் ஃபோர்டு இடையே கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டு, இந்த கூட்டு ரத்து செய்யப்படுவதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. டாடா நிறுவனத்துடன் ஃபோர்டு கூட்டாக செயல்பட வாய்ப்பிருப்பதாகவும் ஒரு செய்தி வெளியானது. இது தொடர்பாகவும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனிடையே, ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்துடனான பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. வியட்னாம் மின்வாகன கார் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஆலையை பயன்படுத்தி கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியானது. முடங்கிக் கிடந்த ஃபோர்டு ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்குவதற்கான எதிர்பார்ப்பு உண்டானாலும், உறுதியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.
ஸ்டாலின் நம்பிக்கை
இந்நிலையில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேசிய செய்தி வெளியாகியுள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்று முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து பேசி வருகிறார். இதுவரை பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
இந்த பின்னணியில், ஃபோர்டு நிர்வாகிகளை சந்தித்து பேசிய முதல்வர், ஃபோர்டு சென்னை ஆலை மீண்டும் செயல்படுவது பற்றி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
”தமிழ்நாட்டில் இருந்து உலகிற்கு மீண்டும் தயாரிக்கத்துவங்கும் வகையில் தமிழ்நாட்டுடனான முப்பது ஆண்டு உறவை புதுப்பிப்பது தொடர்பாக ஃபோர்டு நிர்வாகிகளுடன் பேச்சு திருப்தி அளித்தது,” என்று ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய செயல்பாடு தொடர்பாக ஃபோர்டு நிறுவனம் முடிவெடுக்க தீர்மானித்துள்ள நிலையில், முதல்வரின் இந்த கருத்து, சென்னை ஆலை தொடர்பான நம்பிக்கையை அதிகமாக்கியுள்ளது.
சென்னை ஆலை வசதியை ஃபோர்டு நிறுவனம் தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்வதில் ஈடுபாடு கொண்டுள்ளது. ஏற்றுமதி நோக்கில் கார்களை சென்னை ஆலையில் தயாரிக்கலாம், என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கார் தயாரிப்பு
ஃபோர்டு இந்தியா நிறுவனம், புதிய கார் தயாரிப்பு தொடர்பான வடிவமைப்பிற்கு காப்புரிமை கோரியிருப்பதும் ஆலை தொடர்பான எதிர்பார்ப்பை வலுவாக்கியுள்ளது. ஃபோர்டு சென்னை ஆலைக்கான பொறியாளர் விளம்பரமும் வெளியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய செயல்பாட்டை ஃபோர்டு தீவிரமாக பரிசீலிக்க சென்னை ஆலையின் அமைவிடம் முக்கிய அம்சமாகிறது. ஃபோர்டு ஆலை 350 எக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். சென்னை விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ளதோடு, துறைமுகத்தை எளிதாக அணுகும் வசதியும் கொண்டுள்ளது.
மேலும், பெங்களுருக்கும் அருகே இருப்பது சாதகமாக கருதப்படுகிறது. ஃபோர்டு சென்னை ஆலை மீண்டும் செயல்படத்துவங்கி, சுற்றுப்புற பகுதிக்கு மேலும் சுறுசுறுப்பை அளிக்குமா என்பதை பொருந்த்திருந்து பார்க்க வேண்டும்.
திருச்சியில் 2,000 கோடி ரூபாயில் மின்னணு உற்பத்தி ஆலை அமைக்க Jabil நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்!
Edited by Induja Raghunathan