9 மாதங்களில் 750 DIY கேக் கிட் விற்பனை: 3 லட்ச ரூபாய் ஈட்டிய மும்பை மாணவிகள்!
எலிஷா, வீர் கபூர் இருவரும் Cakeify என்கிற டிஐஒய் பேக்கிங் ஸ்டார்ட் அப் தொடங்கி ஒன்பது மாதங்களில் 3 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்கள்.
எலிஷா பரீக்கிற்கு 7 வயதிருக்கும்போதே பேக்கிங் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது. அவர் வளர வளர அவருக்குள் இருந்த ஆர்வமும் அதிகரித்துக்கொண்டே போனது. Elithebaker என்கிற இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 16,000 ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.
எலிஷாவின் முயற்சியில் இணை நிறுவனராக இணைந்தவர் வீர் கபூர். இவருக்கு டெசர்ட் சாப்பிடுவது மிகவும் பிடித்தமானது. எனவே இவரும் எலிஷாவின் வணிக முயற்சியில் இணைந்துகொண்டார்.
எலிஷா, வீர் கபூர் இருவரும் இளம் தொழில்முனைவோர் அகாடமி (YEA) வகுப்பில் Cakeify என்கிற டிஐஒய் (Do it yourself) பேக்கிங் ஸ்டார்ட் அப் தொடங்கினார்கள்.
இந்த ஸ்டார்ட் அப் பேக்கிங் செய்வதற்குத் தேவையானப் பொருட்களை ஒரு தொகுப்பாக விற்பனை செய்கிறது. இந்த விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு நன்கொடையாகக் கொடுக்கிறார்கள்.
“உணவு சம்பந்தப்பட்ட வணிகத்தில் ஈடுபடுவது என்கிற தீர்மானம் எடுக்கப்பட்டதும் டெசர்ட் பகுதியில் ஆர்வம் இருப்பதால் அதையே தேர்வு செய்தோம். இது தொடர்பாக சந்தையில் நிலவும் தேவை குறித்து தீவிரமாக ஆய்வு செய்தோம். மக்கள் பேக்கிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பதை ஆய்வுகள் மூலம் தெரிந்துகொண்டோம்,” என்கிறார் எலிஷா.
வீர், அலிஷா இருவரும் திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளி மாணவர்கள். இவர்கள் ஆரம்பத்தில் மிக்ஸ், ஃப்ராஸ்டிங் ஆகியவற்றை மட்டுமே வழங்கத் திட்டமிட்டார்கள். இருவரும் தீவிர சந்தை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மற்ற பிராண்டுகள் எதில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதை கவனித்தனர். முழுமையான பேக்கிங் கிட் தொகுத்து வழங்கலாம் என்கிற முடிவை எடுத்தார்கள்.
எக்லெஸ் கேக் மற்றும் ஃப்ராஸ்டிங், ஸ்பிரிங்கிள்ஸ், பேக்கிங் அச்சு, அளக்க உதவும் கப் ஆகியவை DIY கேக் கிட்டில் இருக்கும். பால், வெண்ணெய், எண்ணெய் ஆகிய பொருட்கள் உங்களிடம் இருந்தால் போதும், கேக் தயாராகிவிடும்.
இளம் தொழில்முனைவோர் அகாடமியில் இவர்களுக்கு ஆர்வமுள்ள பகுதியில் தனித்துவமான யோசனையைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். இதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.
“ரெடிகேக் மிக்ஸ் என்றதும் Pillsbury, Betty Crocker ஆகிய பிராண்டுகள் நம் நினைவிற்கு வருகிறது. எனினும் Cakeify மட்டுமே கேக் மிக்ஸ், ஃப்ராஸ்டிங் மிக்ஸ் இரண்டையும் ஒரே தொகுப்பில் வழங்குகிறது. வேறு எந்த ஒரு பிராண்டும் அச்சு மற்றும் அளவிட உதவும் கப் வழங்குவதில்லை. அனைவரிடமும் ஒரே அளவில் ஸ்பூன் இருக்காது என்பதை உணர்ந்ததால் நாங்கள் அளவிட உதவும் கப் வழங்குகிறோம்,” என்றார் எலிஷா.
Cakeify தற்சமயம் வெண்ணிலா, ரெட் வெல்வெட், சாக்லேட் ஆகிய சுவைகளில் கிடைக்கிறது. இந்தத் தொகுப்பை அறிமுகம் செய்வதற்கு சுமார் 4 மாதங்களுக்கு முன்பு வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையிலேயே இந்த சுவைகள் தேர்வு செய்யப்பட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இவை பிடித்தமான சுவையாக இருப்பதைத் தெரிந்துக்கொண்டனர்.
வரும் நாட்களில் எலுமிச்சை மற்றும் காபி சுவைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.
நவி மும்பையில் உள்ள FSSAI அனுமதி பெற்ற தொழிற்சாலையில் பேக்கிங் கிட் தயாரிக்கப்படுகிறது. இந்தக் கிட் 425 ரூபாய் முதல் 550 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
YEA வர்த்தகக் கண்காட்சியில் இவர்கள் இரண்டாம் பரிசு வென்றார்கள். பரிசுத் தொகையாக 30,000 ரூபாய் கிடைத்தது. இந்தத் தொகையையும் குடும்பத்தினரிடமிருந்து திரட்டிய தொகையையும் கொண்டு ஸ்டார்ட் அப் தொடங்கினார்கள்.
இவர்கள் இதுவரை 750 டிஐஒய் கேக் கிட் விற்பனை செய்துள்ளார்கள். ஒன்பது மாதங்களில் 3 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்கள்.
பண்டிகை, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றிற்கு இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள் இந்த இளம் தொழில்முனைவோர்கள்.
பரிசாகக் கொடுப்பதற்கு மிகச்சரியான தேர்வு இந்தக் கிட். இது இளம் அம்மாக்களையும் பதின்ம வயதினரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
லாக்டவுன் சமயத்தில் எத்தனையோ பிராண்டுகள் டிஐஒய் கிட் அறிமுகப்படுத்தின. ஆனால் இந்த கான்செப்டை முதன் முதலில் உருவாக்கியது Cakeify நிறுவனம்.
சமூக வலைதளங்கள் மூலமாகவே பெரும்பாலான ஆர்டர்கள் பெறப்படுகிறது. பிரபல வலைப்பதிவாளர்கள் இந்த முயற்சியை வெகுவாகப் பாராட்டி பதிவுட்டுள்ளனர். இந்த மதிப்பீடு மேலும் பலரைச் சென்றடைய உதவியுள்ளது.
“தற்சமயம் எங்கள் இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே சந்தைப்படுத்துகிறோம். பல பிரபல வலைப்பதிவாளர்கள் எங்கள் தயாரிப்பைப் பயன்படுத்தி பாராட்டி பதிவிட்டுள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களைச் சென்றடைய சமூக வலைதளங்களில் செல்வாக்குள்ள மேலும் பலரை அணுக திட்டமிட்டுள்ளோம்,” என்றார் எலிஷா.
YEA வர்த்தக கண்காட்சி இவர்களது முயற்சிக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவளித்துள்ளது. இதுவே இவர்களது பயணத்தின் தொடக்கப்புள்ளியாகவும் அமைந்தது. இந்தியாவில் கோவிட் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே இவர்களது தயாரிப்பு தயார்நிலையில் இருந்தது. இதுவே மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.
”லாக்டவுன் சமயத்தில் மக்கள் இந்தத் தயாரிப்பையே அதிகம் தேடினார்கள். குடும்பத்தினர் ஒன்றுசேர்ந்து வீட்டிலேயே பாதுகாப்பாக தயாரிக்க விரும்பினார்கள். லாக்டவுன் சமயத்தில்தான் அதிகபட்ச விற்பனை இருந்தது,” என்றார் எலிஷா.
மூலப்பொருட்களை சரியான நேரத்தில் பெறுவது, லாஜிஸ்டிக்ஸ் போன்றவையே மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் நிலைமை சீரானது.
இந்த இளம் நிறுவனர்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்க சேவை மாதிரியில் முழு கவனம் செலுத்தியுள்ளனர். தாமதமின்றி வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் பதிலளிக்கிறார்கள். டெலிவரி ஆப் பயன்படுத்துவதால் சரியான நேரத்தில் டெலிவர் செய்யமுடிகிறது.
Cakeify சொந்த வலைதளம் மூலமாகவும் மின்வணிக தளங்கள் மூலமாகவும் விற்பனை செய்து வளர்ச்சியடைய விரும்புகிறது. புதிய சுவைகளை அறிமுகப்படுத்தி, சில்லறை வர்த்தக ஸ்டோர்களில் விரிவடைந்து, சர்வதேச டெலிவரிகளைத் தொடங்கி விரிவடைய திட்டமிட்டுள்ளனர்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா