Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தன் குழந்தைகளுக்காக மாடித் தோட்டம் தொடங்கி, நகர விவசாயி ஆன சந்தியா!

தனது குழந்தைகள் உட்கொள்ளும் உணவு வகைகள் உட்சபட்ச தரம் மற்றும் சத்துடன் இருப்பதை உறுதிசெய்ய மாடித்தோட்டம் தொடங்கி இன்று நகர விவசாயம் பற்றியும் ஆர்கானிக் உணவுவகைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் மும்பை சந்தியா.

தன் குழந்தைகளுக்காக மாடித் தோட்டம் தொடங்கி, நகர விவசாயி ஆன சந்தியா!

Saturday September 24, 2022 , 3 min Read

நகர வாழ்க்கையில் இயற்கை காய்கறிகள் கிடைக்காததால் தன் குழந்தைகளுக்காக மாடி விவசாயம் தொடங்கிய சந்தியா, இன்று அதை பலருக்கும் சொல்லித்தந்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவி வருகிறார்.

Santhya

சந்தியா வெங்கட்

இயற்கை விவசாயத்தில் முதல் அடி

கோயம்பத்தூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சந்தியா. அங்குள்ள ஒரு கல்லூரியிலேயே இளங்கலை இயந்திர பொறியியல் படித்துமுடித்த பின்னர் மும்பையில் ஒரு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தார்.

2020 ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் பிறந்து 6 மாதங்களே ஆன தனது இரண்டாவது குழந்தைக்கு இதயம் சார்ந்த மருத்துவப் பிரச்னை இருப்பது இவருக்கு தெரிய வந்தது. காலநிலை மாற்றம் மற்றும் அதனால் உணவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் கூட அதற்கொரு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூற தனது குழந்தைகள் உட்கொள்ளும் உணவு வகைகள் உட்சபட்ச தரம் மற்றும் சத்துடன் இருப்பதை உறுதிசெய்ய முடிவெடுத்தார் சந்தியா.

சந்தியா தனது குழந்தைக்கு அறுவை சிகிச்சையை முடிந்த பின்னர் பொறியாளர் பணியிலிருந்து விலகினார். தன் வீட்டு பால்கனியிலேயே இயற்கை முறையில் கீரை வகைகள், தக்காளி, கத்திரிக்காய், பீட்ரூட், வெண்டைக்காய், மிளகாய் உள்ளிட்ட அடிப்படை காய்கறிகளை விளைவித்தார்.

”நான் விளைவிக்கும் விதைகள் கலப்படம் அற்றவகையாக இருப்பதையும், விளைவிக்கப்படும் மண் இயற்கையானதாக இருப்பதையும் ஆய்வுக்குட்படுத்தி உறுதி செய்து கொள்வேன். அது நல்ல பலன் தரவே மும்பையில் எனது வீட்டிற்கு அருகில் வசித்துவரும் சில பெண்களுக்கும் அதனை கற்றுத்தந்து அவர்களும் அவரவர் வீட்டு பால்கனியில் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்க உதவியுள்ளேன்,” என்கிறார் சந்தியா.
Santhya

ஐ ஐ டி யில் முதுகலை பட்டம்

இன்டெர்ன்ட் உதவியுடன் மட்டும் பெரிய அளவில் செயல்பட முடியாது என நினைத்த சந்தியா, ஐஐடி காரக்பூரில் 'Sustainable Agriculture' துறையில் முதுகலை பட்டம் பெற்றார்

”எனது குழந்தைகள் போலவே முடிந்த அளவு மற்ற குழந்தைகளுக்கும் கலப்படம் இல்லாத இயற்கை உணவு வகைகள் கிடைக்க ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டிருக்க, கோயம்புத்தூர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் பாரம்பரியமாக விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் சில விவசாயிகளுடன் கிட்டத்தட்ட 3 மாதங்கள் வரை உடனிருந்து இயற்கை விவசாயம் பற்றிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன,” என்றார்.

பின்னர், ‘Mud and Mother' என்ற பெயரில் முன்னெடுப்பை தொடங்கி மும்பைக்கு அருகில் உள்ள காலாப்பூர் பகுதியில் நிலம் வாங்கி அங்கு கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட சிறுதானிய வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்ளை தற்போது விளைவித்து வருகிறார் சந்தியா.

அத்தோடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரின் நிலத்தில் இயற்கை முறையில் கருப்பு கவுனி அரசி வகையை விளைவித்து அதனை மும்பைக்கு எடுத்துச்செல்கிறார்.

organic vegetables

கருப்பு கவுனி மற்றும் சிறுதானியங்களால் ஆன ஊட்டச்சத்து பவுடர்

கருப்பு கவுனி மற்றும் சிறுதானியங்களை தனித்தனியே சமைத்து உட்கொள்வது நகரப் பகுதியில் வசிப்பவர்களுக்கு சிரமமாக இருக்கக்கூடும் என்பதால் அவற்றை அரைத்து சரியான அளவில் ஒன்றாக கலந்து ஊட்டச்சத்து பவுடர் ஒன்றை உருவாக்கியுள்ளார் சந்தியா. வெறும் நீரில் கலந்து குடிப்பது முதல் லட்டு, கொழுக்கட்டை, தோசை என பல்வேறு வகைகளில் அந்த பவுடரை உட்கொள்ளலாம்.

மும்பையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சுமார் 50 பேருக்கு தான் தயாரித்த ஊட்டச்சத்து பவுடரை இலவசமாகக் கொடுத்து வருகிறார் சந்தியா. விலை கொடுத்து வாங்க விரும்புவர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்.

karupu kavuni

கொரோனா பேரிடரும் உணவு முறைகள் மீதான அதன் தாக்கமும்

கொரோனா பேரிடருக்கு பின்பு பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் தங்களது உணவுமுறை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றார்.

கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இயற்கை முறையில் தங்களுக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறுதானியங்களை விளைவிப்பது சற்று எளிதாக இருந்தாலும் பெருநகரங்களில் வசிக்கும் மக்களுக்கு அதற்கான நிலவசதி என்பது கேள்விக்குரியாக உள்ளது. எனினும் அதையும் மீறி மொட்டைமாடி, பால்கனி என தங்களிடம் இருக்கும் இடங்களைக்கொண்டு சுலபமாக விளைவிக்கக்கூடிய உணவு வகைகளை பலர் விளைவிக்க தொடங்கியுள்ளனர். சந்தியாவும் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான்.

பெருநகரமக்களின் மனநிலைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை கருத்தில்கொண்டு தமிழக அரசு 'நகர விவசாயம்' பற்றிய தேவையையும் புரிதலையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்த தக்க நடவடிக்கைகளை எடுத்தால் உதவிகரமாக இருக்கும்.

(Disclaimer: The views and opinions expressed in this article are those of the author and do not necessarily reflect the views of YourStory.)