‘அறிவியலை இப்படியும் சொல்லிக் கொடுக்கலாம்’ - நல்லாசிரியர் விருது பெறும் மாலதி டீச்சரின் சிறப்பு!
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வியில் புதுமைகளை புகுத்தி திறன்மிக்க எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாலதி மற்றும் காட்வின் இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளை பெறுவது தமிழகத்திற்கு இரட்டை மகிழ்ச்சியை தந்துள்ளது.
அகரம் கற்று சிகரம் தொட அச்சாணியாய் சுழன்று
ஆதி அந்தம் பாராமல் குலம் கோத்திரம் காணாமல்
ஜாதி மதம் கேளாமல் கற்க வந்தவனை
காலம் கடந்து ஞாலம் போற்றும் சான்றோனாக மாற்றும்
அற்புதம் ஆசிரியர்களே!
ஏழ்மையான குடும்பம் சிறுவயதிலேயே இறந்து விட்ட தந்தை, ஒற்றைத் தாயின் வளர்ப்பில் செங்கோட்டை அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்தவர் மாலதி டீச்சர். அரசுப் பள்ளியில் படித்த தான், திறன்மிக்க ஆனால் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத அதே அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு 2008ம் ஆண்டு முதல் அறிவியல் ஆசிரியராக தன்னுடைய பணியைத் தொடங்கி உள்ளார்.
14 ஆண்டுகளாக தன்னுடைய ஆசிரியர் பணியைத் திறம்பட செய்து பல மாணவர்களின் ஊற்றுக்கண்ணாகவும் ரோபோடிக்ஸ் மற்றும் ஆப் தொழில்நுட்பத்தை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய அறிவொளியாகவும் திகழ்கிறார் இவர். தற்போது தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார் நல்லாசிரியர் விருது பெறப்போகும் ஆசிரியை.
புரியாததும் புரிந்தது
சிறந்த ஆசிரியருக்கான 2023ம் ஆண்டின் ’தேசிய நல்லாசிரியர்’ விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெறுவதற்காக டெல்லி சென்றுள்ள மாலதி டீச்சர் தன்னுடைய உயரிய நோக்கத்தை யுவர் ஸ்டோரி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்,
“என்னுடைய சொந்த ஊர் செங்கோட்டை, நான் எம்எஸ்.சி, பி.எட், எம்.பில் முடித்திருக்கிறேன். அரசுப் பள்ளியில் படித்தாலும் எனக்கு சிறு வயது முதலே கல்வி மீது தீராத ஆர்வம். அறிவியலை விரும்பிப் படித்தேன், ஆனால், நான் படிக்கும் போதும் சரி ஆசிரியராகப் பணியில் சேர்ந்த பிறகும் சரி பல மாணவர்களுக்கு அறிவியல் பாடம் ஒரு சலிப்பான விஷயமாகவே இருப்பதை பார்த்தேன். விரும்பிப் படித்தால் எந்தப் பாடமும் புரியாதது இல்லை. எனக்குப் பிடித்த அறிவியல் பாடத்தை மற்றவர்களும் விரும்பிப் படிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
“பாடங்களாக புத்தகங்களில் படிப்பது தான் சலிப்பை ஏற்படுத்துகிறது, அதை சுவாரஸ்யமாகவும் மாணவர்களின் பங்களிப்பும் அதில் இருப்பதை உறுதிபடுத்துவதற்காக அறிவியல் பாடங்களை வில்லுப்பாட்டு, கதை வடிவில் விவரித்தல், ஆடியோ வடிவில் பாடங்களை விளக்குதல், எளிமையான பொருட்களைக் கொண்டு மாதிரி வடிவங்களை உருவாக்கி அதன் மூலம் அறிவியலை அறிய வைத்தல் என செயல்வழியில் அறிவியலை புரிந்து கொள்ள வைக்க முயற்சித்தேன். மாணவர்களுக்கு இந்த முறை கற்றலில் அதிக ஆர்வம் இருந்தது எனக்கு மகிழ்ச்சியை தந்தது,” என்கிறார் மாலதி டீச்சர்.
ஆசிரியர்களும் அப்டேட் ஆக வேண்டும்
மாணவர்களுக்கு கல்வியை புகட்டுவது என்பது வெறும் பாடப்புத்தகத்தில் இருப்பவற்றை புரிய வைப்பது மட்டுமல்ல, அதையும் தாண்டி புதிய விஷயங்களையும் கற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். அதிலும் சூரியனுக்கே ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பும் அளவிற்கு அறிவியலும் விஞ்ஞானம் வளர்ந்து இருக்கும் நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களும் அறிவியலில் அப்டேட்டாக இருக்க வேண்டும் என்று முதலில் நான் என்னை அதற்காகத் தயார்படுத்தினேன் என்கிறார் மாலதி.
”ரோபோடிக்ஸ் மற்றும் செயலி வடிவமைப்பு பற்றி நான் படிக்கத் தொடங்கினேன். ஆசிரியர்களும் காலத்திற்கேற்ப தங்களை மேம்படுத்திக் கொண்டாலே மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்ய முடியும் என்பது என்னுடைய தீர்க்கமான நம்பிக்கை.”
ஓய்வறியா ஆசிரியை
கொரோனா பெருந்தொற்று காலத்தில் டெக்னாலஜியின் பங்கு கல்வி கற்றலில் மிகப்பெரியதாக இருந்தது. ஒன்றும் செய்ய முடியாது என்று வீட்டில் முடங்கிப் போய் விடாமல் மாணவர்களின் பொழுதை வீணடிக்காமல் 507 லைவ் ஆன்லைன் வகுப்புகளை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு எடுத்தேன்.
”எல்லோர் கைகளிலும் ஸ்மார்ட் போன் புழக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், மாணவர்கள் தொழில்நுட்பத்தை எப்படி பயனுள்ளதாக்க வேண்டும் என்ற அறிவுப் புகட்டலையும், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்போம் நேசிப்போம் போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கிறேன்,” என்று தன்னுடைய ஓய்வறியாப் பணியை பட்டியலிடுகிறார் ஆசிரியை மாலதி.
அரசுப் பள்ளி அறிஞர்கள்
வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ’வாசிப்பை நேசிப்போம்' நிகழ்ச்சிகள், வாழ்வியல் பயிற்சி வகுப்புகள், மேற்படிப்பு வழிகாட்டி வகுப்புகள், ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளை நடத்தினேன். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் மற்றும் செயலி தயாரிப்பு பற்றி கற்றுக் கொடுத்தததன் விளைவாக பல அறிவியல் விஞ்ஞானிகளை எங்களது வீரகேரளம்புதூர் அரசுப் பள்ளியிலேயே பார்க்க முடிகிறது.
அது மட்டுமல்ல எங்கள் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெறுவது எனக்குக் கிடைத்த பெருமகிழ்ச்சி என்று மகிழ்கிறார் மாலதி.
உயர் கல்விக்கு வழிகாட்டுதல்
இது மட்டுமல்ல அரசுப் பள்ளி மாணவர்கள் +2 முடித்த பின்னர் உயர்படிப்பை எப்படி தேர்வு செய்யலாம், அவற்றிற்கு எப்படி தயாராவது, ஆங்கிலத் திறன் பயிற்சி, வாழ்வியல் பயிற்சி என மாணவர்களின் சிறப்பான வாழ்க்கைக்கு உறுதியளிக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஓய்வின்றி எந்த சலிப்பும் எதிர்பார்ப்பும் இன்றி செய்து அசத்திக் கொண்டிருக்கிறார் இவர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமின்றி ஸ்மார்ட் போன் வசதியில்லாத குடும்பங்களுக்கு நேரில் சென்று கல்வித் தொலைக்காட்சி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி எந்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு என்பதை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் அவற்றை பார்த்து படித்து புரிந்து கற்றுக் கொள்ளவும் உதவி இருக்கிறார்.
யூடியூப் சேனல்
சாரல் ஐசிடி ஆன்லைன் வகுப்பு என்கிற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். தொடர்ந்து 26 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளை எடுத்து புதிய சாதனையையும் படைத்திருக்கிறார். மாணவர்களுக்கான பயனுள்ள வீடியோக்கள், தொய்வின்றி கல்வியில் முன்னேற்றம் பெறுவதற்கான வழிகள் என உத்வேகம் தரும் பல காணொளிகள் அவற்றில் இடம்பெற்றுள்ளன.
தனிப்பட்ட முறையில் என்னுடைய யூடியூப் சேனல் மட்டுமல்ல, பள்ளியின் பெயரிலும் ஒரு யூடியூப் சேனல் இயங்குகிறது. அதில் மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோக்கள் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் உற்சாகத்தைத் தருகிறது.
சொந்த செலவில் திறனறித் தேர்வு கையேடு
தமிழ்நாடு ஊரக மாணவர் திறனறித் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கத் தயங்குவதை கருத்தில் கொண்டு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்விற்கு வழிகாட்டும் கையேட்டை 25க்கும் மேற்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுடன் சேர்ந்து கையேட்டை தயாரித்துள்ளார்.
இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.1000 உதவித் தொகை கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்தக் கையேடுகளை ரூ.1 லட்சம் செலவில் தானே அச்சிட்டு அதனை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியும் உள்ளார் இவர். தனிம அட்டவணையில் உள்ள 20 தனிமங்களை 25 விநாடிகளில் ஒப்பித்து அவருடைய வீரகேரளம்புதூர் மாணவர்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.
அங்கீகாரரங்கள்
தன்னோடு மாணவர்களின் தரத்தையும் உயர்த்தும் மாலதி டீச்சரின் அயராத அற்பணிப்புப் பணியை பாராட்டி தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு இவருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
அந்த விருதில் கிடைத்த ரூ.10,000 ரொக்கப் பரிசையும் கூட மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சிக்கான உபகரணங்களை வாங்கி அவர்கள் பயனடைவதற்காக அளித்துள்ளார். இது மட்டுமின்றி மேலும் பல சாதனைகளைச் செய்து சாதனைப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளார்.
பெருமிதம்
2023ம் ஆண்டிற்கான சிறந்த தேசிய நல்லாசிரியர் விருது பெறுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான் இந்த விருதை எதிர்பார்க்கவில்லை, மாணவர்களுக்காக புதுப்புது முறைகளில் வகுப்பெடுத்து அரசுப் பள்ளி மாணவர்களை ஆச்சரியமுட்டும் சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்று நான் நினைக்கும் இலக்கை அடைய இந்த விருதானது மேலும் உறுதியை அளிக்கிறது என்று பெருமிதப்படுகிறார் ஆசிரியை மாலதி.
மதுரை உடற்கல்வி ஆசிரியர்
அறிவியல் ஆசிரியை மாலதியை போல மதுரைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும் இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதைப் பெறுகிறார். மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர், டேக்வாண்டோ, ஜம்பிங்ஜாக்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்களுடன் சேர்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கைச் சிலம்பம் போட்டியில் 300 மாணவர்களை பங்கேற்கச் செய்து உலகச் சாதனையும் நிகழ்த்தியுள்ளார். 500க்கும் மேற்பட்ட இவரது மாணவர்கள் காவல்துறை, ராணுவம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களாகப் பணியில் சேர்ந்துள்ளனர்.
முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.7 லட்சம் செலவில் பள்ளியில் பாக்சிங் ரிங், மற்றும் ரூ.7 லட்சம் செலவில் அரசுப் பள்ளியில் ஜிம் போன்றவற்றை அமைத்துக் கொடுத்துள்ளார்.
அரசுப் பள்ளியில் இது போன்ற வசதிகளை முதன்முறையாக ஏற்படுத்தி உள்ள இவரும் கூட உடற்கல்வி ஆசிரியர் என்கிற பிரிவில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெறும் முதல் ஆசிரியர் என்பது மகிழ்ச்சியான விஷயம்.