Netflix-ல் நயன் - விக்கி காதல், திருமணம்: கவுதம் மேனன் இயக்கத்தில் விரைவில் வெளியீடு!
ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த லேடிசூப்பர்ஸ்டார் நயன் - விக்கியின் திருமண வீடியோ ஒளிபரப்பு பற்றி அதிகாரப்பூர்வமாக டிவீட் வெளியிட்டுள்ளது பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ். டாக்குமெண்டரியாக நயன் -விக்கியின் காதல் கதையையும் படமாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த கதை ஊரறிந்த விசயம்தான். ஜோடியாக வெளிநாடுகளுக்குச் சென்று வந்த காதலர்கள், எப்போது கணவன், மனைவியாவார்கள் என்பதுதான் அவர்களது ரசிகர்களின் மனதில் பெரிய கேள்வியாக இருந்தது. இதனாலேயே அவர்களது திருமணம் பற்றிய எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகமாக இருந்தது.
கடந்த மாதம் 9ம் தேதி மாமல்லபுரத்தில் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்தைப் பார்க்க ரசிகர்கள் முன்பிருந்தே ஆர்வமாக இருந்ததால், அதனை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் முடிவு செய்தது. அதன்படி, நயன் - விக்கியின் திருமண உரிமையை வாங்கியது.
கோலாகல திருமணம்
திருமணக் கொண்டாட்டக் காட்சிகள் லீக்காகி விடாதபடி, பிரம்மாண்டமாக, அதே சமயம் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்தது நயன் திருமணம். இத்திருமணத்தில் வரவேற்பு அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். சில குறிப்பிட்ட பிரபலங்களுக்கு மட்டுமே திருமண அரங்கில் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இத்திருமணத்திற்கு முன்பே, இதன் ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கி விட்டதாக அரசல்புரசலாக ஒரு செய்தி வைரலானது. பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நயன் திருமணத்தை சினிமா போல் படமாக்கத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
இத்திருமணத்துக்கான சாப்பாடு, ஓட்டல் அறைகள், டெக்கரேஷன், மேக்-அப், பாதுகாப்பு உள்ளிட்ட செலவுகளை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம்தான் பார்த்துக்கொண்டது எனப் பலத் தகவல்கள் இணையத்தில் உலா வந்தன.
நயன் திருமணத்திற்காக சுமார் 25 கோடி ரூபாய் வரை அந்நிறுவனம் செலவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், இது எதையுமே நெட்பிளிக்ஸும் சரி, நயன் தரப்பும் சரி, மறுக்கவும் இல்லை, ஆம் என ஒப்புக் கொள்ளவும் இல்லை.
இது ஒருபுறம் இருக்க, திருமணம் முடிந்து, நயன்-விக்கி ஜோடி தாய்லாந்தில் தேனிலவுக்கு சென்று வந்து விட்டனர். மீண்டும் இருவரும் அவரவர் பட வேலைகளில் பிஸியாகி விட்டனர். அப்போதும் திருமண வீடியோ பற்றி எந்தத் தகவலுமில்லை. ஆனால், ஊடகங்களில் மட்டும் நெட்பிளிக்ஸுடன் ஏதோ பிரச்சினை, அவர்கள் நயன் திருமண வீடியோவை வாங்க மறுத்துவிட்டனர், அவர்களது ஒப்பந்தத்தில் சிக்கல்,’ என ஏதேதோ யூகங்கள் உலா வந்தன.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
இதனை உறுதி செய்வதுபோல் விக்னேஷ் சிவனும் தங்களது திருமணத்தின்போது முக்கியப் பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட சிலப் புகைப்படங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட ஆரம்பித்தார். நெட்பிளிக்ஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகக்கூட ஒரு தகவல் வெளியானது.
ஆனால், இது எதுவுமே அதிகாரப்பூர்வமான தகவல்களாக இல்லை. இதனால் நயன் திருமண வீடியோ வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு மேலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இந்நிலையில்தான், நயன் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது Netflix. அதாவது, நயன் - விக்கி திருமண நிகழ்வின் முதல் சீசன் விரைவில் வெளியாகவுள்ளதாக டிவிட்டரில் நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நயன் மற்றும் விக்கியின் சில காதல் புகைப்படங்களைப் பகிர்ந்து இந்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த முதல் சீசனில் அவர்களது திருமணம் மற்றும் அது சார்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் இடம் பெறும் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நெட்பிளிக்ஸ் இந்தியா சீரிஸ் தலைவர் தன்யா பாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்தியா மற்றும் அதையும் தாண்டி, ஸ்கிரிப்ட் எழுதப்படாத, மிகவும் புத்துணர்ச்சியான, மக்களோடு ஒன்றிணைக்கும்படியான படைப்புகளைத் தரும் தளமாக Netflix இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நீடித்திருக்கும் நயன்தாரா, உண்மையிலேயே ஒரு சூப்பர்ஸ்டார் தான். எங்களது அருமையான படைப்பு பங்குதாரர்களான இயக்குநர் கௌதவ் வாசுதேவ் மேனன் மற்றும் ’ரௌடி பிக்சர்ஸ்’ உடன் இணைந்து, நயன்தாராவின் வாழ்க்கைப் பயணம் மற்றும் விக்னேஷ் சிவனுடனான அவரது அற்புதமான திருமண தருணங்களை நெட்பிளிக்ஸில் பார்க்க நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
இது தவிர, நயன் - விக்கி எப்போது சந்தித்துக் கொண்டனர். அவர்களுக்கு இடையே எப்படிக் காதல் மலர்ந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை எப்படி மேற்கொண்டனர் உள்ளிட்ட தகவல்களை இரண்டாம் சீசனில் காட்ட இருக்கிறார்கள்.
இதில், பல காட்சிகளை அனிமேஷனில் உருவாக்கி, இதனை ஒரு டாக்குமெண்டரி வடிவில் தயாரித்திருக்கிறார்களாம். அதற்கான படப்பிடிப்பை கெளதம் மேனன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
நெட்பிளிக்ஸ்-இன் அறிவிப்புக்கு த்மகிழ்ச்சி தெரிவித்த விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டா பக்கத்தில்,
‘Netflix உடன் இணைந்து எங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணங்களை உங்களுக்கு தருவதில் மகிழ்ச்சி,” எனப் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
எப்படியோ நெட்பிளிக்ஸ் போட்ட ஒற்றை டிவீட்டால் நயன் -விக்கி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கண்ணா இன்னொரு லட்டு சாப்பிட ஆசையா என்பதுபோல், நயன் திருமணம் இரண்டு சீசன்களாக ஒளிபரப்பப்பட இருக்கிறது என்பது அவர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதோடு, நெட்பிளிக்ஸுடனான ஒப்பந்தன் முறிந்தது என்ற சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்றே கூறலாம்.
நெட்பிளிக்ஸ் தற்போது வெளியிட்டுள்ள நயன் - விக்கியின் புகைப்படங்கள் இதுவரை பார்க்காத ஒன்று. எனவே, இது அவர்களது திருமண புரொமோவுக்காக நடத்தப்பட்ட படப்பிடிப்பாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விரைவில் அவர்களது திருமண வீடியோ புரொமோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெட்பிளிக்ஸ் போட்ட கணக்கு
நயந்தாராவுக்கு தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி என உலகம் முழுவதுமே ரசிகர்கள் உள்ளனர். தற்போது ஷாரூக்கானுக்கு ஜோடியாக பாலிவுட் படமொன்றில் நடித்து வருகிறார். எனவே, மொழிகளைக் கடந்து அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
அதோடு, சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் நயன் அதிகம் நடித்து வருகிறார். அவருக்கு வயது வித்தியாசமின்றி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என எல்லாதரப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே நயன் - விக்கியின் திருமண வீடியோ நிச்சயம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமேயில்லை.
இந்த வீடியோ உரிமைக்காக நெட்பிளிக்ஸ் பெரும் தொகையை இந்த ஜோடிக்கு கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்போதுதான் முதன்முறையாக நயன் திருமண வீடியோ பற்றி நெட்பிளிக்ஸ் வாய் திறந்துள்ளது. விரைவில் அவர்களது ஒப்பந்தம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.