70% பணிகள் நிறைவு; புதிய நாடாளுமன்றக் கட்டிடம் எப்படி இருக்கப் போகிறது?
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய விஸ்டா மேம்பாடு மற்றும் மறுவடிவமைப்புத் திட்டத்தின் (சிவிடிஆர்பி) ஒரு பகுதியாக, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 70% நிறைவடைந்துள்ளதாகவும், நவம்பர் 2022க்குள் தயாராகி விடும் என்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதித் துறை இணையமைச்சர் கவுசல் கிஷோர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடம்:
தலைநகர் டெல்லியில் பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தை நவீனமாக்கும் வகையில், தற்போதுள்ள நாடாளுமன்றத்தை புதுப்பிப்பதற்கு பதில், நாடாளுமன்ற வளாகத்தில் புதிய கட்டிடம் எழுப்பப் திட்டமிடப்பட்டது.
புதிய நாடாளுமன்றம் கட்ட கடந்த 2020 டிச. 10-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மொத்தம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில், 4 மாடிகளுடன் முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. பிரதமர் இல்லம், குடியரசுத் துணைத் தலைவர் இல்லம், மத்திய செயலகம், மத்திய கருத்தரங்கு மையம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், 51 அமைச்சகங்களின் அலுவலகங்களும் நாடாளுமன்ற வளாகத்தில் கட்டப்படுகின்றன.
நாடாளுமன்ற கட்டுமான பணியை டாடா நிறுவனமும், நாடாளுமன்ற வளாகக் கட்டுமானப் பணியை ஷபூர்ஜி பலோன்ஜி குழுமமும் மேற்கொள்கிறது. வரும் அக்டோபர் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில்,
70 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், நவம்பர் மாதத்துக்குள் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் என்றும் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதித் துறை இணையமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் 5 திட்டங்கள்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டு திட்டம் என்பது, புதிய முக்கோண வடிவக் கட்டிடம், பிரதமர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவருக்கு இல்லங்கள், பொதுவான மத்திய தலைமைச் செயலகம், குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. தூர ராஜபாதையை மறுசீரமைப்பது ஆகிய பணிகளை உள்ளடக்கியது ஆகும்.
சிவிடிஆர்பியின் கீழ், மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டு வசதித் துறை மூலம் ஐந்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பொது மத்திய செயலக கட்டிடம்-1, 2 மற்றும் 3 இன் 17% பணிகள் முழுவதுமாக 2023 டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, துணை ஜனாதிபதி மாளிகையின் கட்டுமானப் பணிகள் 24% முடிந்து, 2023 ஜனவரிக்குள் தயாராகிவிடும். ஆனால், எக்ஸிகியூட்டிவ் என்கிளேவ் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
தோட்ட இயக்குனரகம் (DoE) அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு அலுவலக இடங்களை பொது குளம் அலுவலக விடுதி சான்றிதழ் கட்டிடத்தில் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் 69 துறைகளுக்கு 2021-22 ஆம் ஆண்டில் 11.98 லட்சம் சதுர அடிக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவை ஆண்டுதோறும் மொத்தம் ரூ.1,177, 25 கோடி வாடகையை தங்கள் அலுவலகங்களுக்கு செலுத்தி வருகின்றன. சென்ட்ரல் விஸ்டா திட்டங்கள் முடிவடைந்தால், இந்த தொகையை அமைச்சகங்கள் மற்றும் துறைகள் சேமிக்க வாய்ப்புள்ளது.
இந்த 70 சதவீத கட்டுமான பணியும் 14,55,598 வேலையாட்கள், 24,605 மெட்ரிக் டன் இரும்பு, 57,225 சிமெண்ட் மற்றும் 8,431 மெட்ரிக் டன் நிலக்கரி சாம்பல் ஆகியவற்றைக் கொண்டு முடிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் சிறப்புகள்:
செப்டம்பர் 2019 முதல் 2026 ஆம் ஆண்டு முடிவடையும் வரை 13,450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய விஸ்டா மறுவடிவமைப்புத் திட்டங்கள் நடைபெற உள்ளது. இந்தத் திட்டத்தில், பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறப்புப் பாதுகாப்புக் குழுவிற்கு (SPG) கட்டிடம் கட்டும் திட்டமும் இடம் பெற்றுள்ளது.
- புதிய மாநிலங்களவை 384 இருக்கைகள் கொண்டதாகவும், புதிய மக்களவை கட்டிடம் 770 இருக்கைகள் கொண்டதாகவும், கூட்டு அமர்வுகளை நடத்துவதற்கு 1134 இடங்கள் வரை கூடுதல் திறன் கொண்டதாகவும் கட்டப்படுகிறது.
- அடுத்த 150 ஆண்டுகளுக்கு மின் நுகர்வு குறைவாக இருப்பதை உறுதிசெய்ய டிஜிட்டல் இடைமுக அமைப்புகள் நிறுவப்பட உள்ளன.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, துணை குடியரசுத் தலைவரின் இல்லம் 15 ஏக்கராகவும், பிரதமரின் புதிய அலுவலகம் மற்றும் குடியிருப்பு 15 ஏக்கர் நிலப்பரப்பிலும் 10 நான்கு மாடி கட்டிடங்களுடன் - ஒவ்வொன்றும் அதிகபட்சமாக 12 மீட்டர் உயரம் கொண்ட கட்ட அடுக்குகளாகவும் அமைக்கப்பட உள்ளது.
- புதிய கட்டிடத்தில் பெரிய கமிட்டி அறைகள், சமீபத்திய ஆடியோ-விஷுவல் அமைப்புகளுடன் பொருத்தப்பட்டிருக்கும். அதிக செயல்திறனை எளிதாக்குவதற்கும் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட உள்ளது.
- புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அதிநவீன வசதிகளைக் கொண்ட நூலகம், உறுப்பினர்களுக்கு ஏராளமான தகவல்களை அள்ளித் தரக்கூடிய புத்தகங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட உள்ளது.
- புதிய நாடாளுமன்ற கட்டிடம் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய வகையிலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் செல்லக்கூடிய வகையிலும் வடிவமைப்பட்டு வருகிறது.
- புதிய கட்டிடத்தில் அமைய உள்ள மத்திய அமைச்சக உயர் அதிகாரிகளின் அறைகள் அனைத்தும் ஒலி மற்றும் ஒளி அமைப்புடன் கூடிய அதிநவீன வசதிகளைக் கொண்டிருக்கும்.
- சன்சத் பவன் என அழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் புதிய கட்டுமான பணியில் செமி மற்றும் ஸ்கில்டு லேபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் தேசிய சின்னமான நான்முகச் சிங்கம், புதிய நாடாளுமன்றத்தின் மேற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட தேசிய சின்னத்தை தாங்கி பிடிக்க 6,500 கிலோ எடையில் 4 புறமும் எஃகு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
சென்ட்ரல் விஸ்டா அவென்யூ:
குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. தூர ராஜபாதையை மறுசீரமைப்பது ‘சென்ட்ரல் விஸ்டா அவென்யூ’ என அழைக்கப்படுகிறது. இந்த சீரமைப்பு பணிக்காக மட்டும் 477 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இந்தியா கேட் அருகே பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறைகள், வென்டிங் மெஷின், புணரமைக்கப்பட்ட வழித்தடம் ஆகியவை உருவாக்கப்பட உள்ளது.
- மறுவடிவமைப்புக்குப் பிறகு, சென்ட்ரல் விஸ்டா அவென்யூ ஒட்டுமொத்தமாக பசுமையாக காட்சியளிக்கும் வகையில் புல்வெளியின் இடம் 3,50,000 சதுர மீட்டரிலிருந்து சுமார் 3,90,000 சதுர மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- புதிய மேம்படுத்தப்பட்ட அவென்யூவில், தேசிய நிகழ்வுகள் நடைபெறும் ராஜபாதையை இடையூறு இல்லாததாக அதிகம் பேர் கண்டுகளிக்கக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. புதுப்பிக்கப்பட்ட அவென்யூபில் தேசிய நிகழ்வுகளுக்கு பல பயன்பாட்டு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட வசதிகள் இடம் பெற உள்ளன. மடிக்கக்கூடிய இருக்கை அமைப்பு, குடிமக்கள் மற்றும் விருந்தினர்களுக்கான இடவசதி ஆகியன பாதுகாப்பு கட்டுப்பாடுகளை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
- சென்ட்ரல் விஸ்டா பகுதியில் குடியிருப்போர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக சென்று வரும் வகையில் பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
- குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாத போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்காக பாதசாரி சுரங்கப்பாதையும் உருவாக்கப்படுகிறது.
- ராஜ்பாத் புல்வெளி மற்றும் நடைபாதைகளின் சீரமைப்பின் ஒரு பகுதியாக, புதுப்பிக்கப்பட்ட அவென்யூவில் அழகாக வடிவமைக்கப்பட்ட படிக்கட்டு தோட்டங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கால்வாய்கள் இருக்கும், இது பொது இடங்களை ஒட்டுமொத்தமாக அழகுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- புதுப்பிக்கப்பட்ட விஸ்டா அவென்யூவை பார்வையிட வரும் மக்களுக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்யக்கூடிய கடைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.