‘இந்திய மகளுக்குக் கிடைத்த வெற்றி’ - ட்விட்டரில் ட்ரென்டான நிர்பயா ஹேஷ்டேகுகள்!

இந்தியாவின் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது என்று நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

20th Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

தெற்கு டெல்லியில் 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது இந்த சம்பவம். அரக்கர்களால் நசுக்கப்பட்ட அந்த இளம்பெணணிற்கு டெல்லி மற்றும் சிங்கப்பூரில் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.


இந்த விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான ரமண் சிங் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார், மற்றொரு குற்றவாளி சிறுவன் என்பதால் சிறார் தண்டனைச் சட்டத்தில் குறைந்தபட்ச தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டார். எஞ்சிய குற்றவாளிகள் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா மற்றும் அக்ஷய் குமார் சிங் உள்ளிட்ட 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் இவர்கள் கருணை மனு, மேல்முறையீடு என தண்டனையை நிறைவேற்ற விடாமல் சட்டப்போராட்டம் என்ற பெயரில் தப்பித்துக் கொண்டு வந்தனர்.


3 முறை தூக்குத் தண்டனைக்கான தேதி குறிக்கப்பட்ட போதும் சட்டப்பேராட்டத்தின் மூலம் தப்பித்து வந்தனர். இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிந்த பின்னரும் கூட நேற்று மாலை குற்றவாளிகள் முகேஷ் சிங் மற்றும் அக்ஷய் குமார் தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். நள்ளிரவில் அவசர வழக்காக இதனை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்தது. பிற்பகல் 3.30 மணியளவில் இருவரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் அதிகாலை 5.30 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 4பேருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டு 20 நிமிடங்கள் தூக்கு மேடையில் தூக்கில் தொங்கவிடப்பட்டனர். தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் குற்றவாளிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்பதை நாடே எதிர்பார்த்துக் காத்திருந்தது. அவர்களுக்கான நீதி வழங்கப்பட்டதையடுத்து இந்திய அளவில் ட்விட்டரில் நிர்பயா ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின. #rip nirbhaya, #justice for nirbhaya,#tiharjail என 12க்கும் மேற்பட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்ட் ஆகின.

twitter trend

4 பேரின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதையொட்டி டெல்லி திஹார் சிறைக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குற்றவாளிகளில் ஒருவனான அக்ஷய் குமார் சிங்கின் மனைவி மற்றும் 6 வயது மகன் பாட்டியாலா நீதிமன்றத்தின் வெளியே மேல்முறையீட்டு மனு தீர்ப்பிற்காக காத்திருந்தனர். எனினும் மனு தள்ளுபடியானதால் பதற்றமான புனிதா தேவி,

“என் கணவர் அப்பாவி, அவர் சாகப் போகிறார், அவருடன் என்னையும் கொன்றுவிடுங்கள். ஒரு விதவையாக என் வாழ்க்கையைத் தொடர விரும்பவில்லை, கணவர் இறந்துவிட்டால் மனைவியின் நிலை என்ன என்று இந்த அரசாங்கத்திற்கு தெரியாதா?” என்று அழுது புரண்டார்.

நிர்பயா குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்காக 2013ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 ஆண்டுகள் உறுதியான சட்டப்போராட்டத்தை முன் எடுத்தவர் அவருடைய தாய் ஆஷா தேவி.


தன் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சுமார் 6 முறை கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார். கடைசி நேரத்தில் தனது மகள் அனுபவித்த கஷ்டங்கள் அவளது மரண வாக்குமூலம் என அனைத்தையும் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறியவர். தூக்குத் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் சட்டப்போராட்டம் நடத்திய போதெல்லாம் அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தர உறுதியாகப் போராடினார்.

ஆஷா தேவி

ஆஷாதேவி, நிர்பயாவின் தாய்

படஉதவி : தி ஸ்டேட்ஸ் மேன்

முக்கியக் குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்ட போதும் கூட இந்த தற்கொலை எனக்குக் கவலை தருகிறது. அவனுக்கு நான் சட்டப்படி தண்டனை வாங்கித் தரவே விரும்பினேன் என்று கூறி இருந்தார் ஆஷா தேவி.


பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை தெரிவிக்கக் கூடாது என்பதால் ‘நிர்பயா’ என்று ஊடகங்கள் கூற என் மகள் எந்தத் தவறும் செய்யவில்லை, அவரது பெயரைச் சொல்ல நான் ஏன் தயங்க வேண்டும் என்று ஊடகங்களுக்கு நிர்பயாவின் பெயரை தெரிவித்தவர் ஆஷா தேவி.


நள்ளிரவில் நடந்த மேல்முறையீட்டு மனு விசாரணையின் போதும் கூட தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் நம்பிக்கையுடன் இருந்தார். வழக்கு விசாரணை முடிந்து மனு தள்ளுபடியான போது மகிழ்ச்சியுடன் வெளியே வந்த ஆஷா தேவி, வெற்றிக்கான குறியை காண்பித்தவாறு ஓடி வந்து நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த பெண் பத்திரிக்கையாளரை கட்டித் தழுவி முத்தமிட்டார். இந்த முத்தம் நிர்பயாவிற்கு ஆஷா தேவி அளித்த முத்தம்.

“இந்தியாவின் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது, இனி நான் நிம்மதி பெருமூச்சு விடுவேன். நம்முடைய சட்டப்போராட்டம் வென்றுவிட்டது, இதில் எனக்கு உதவியான இருந்த மக்கள், ஊடகங்கள், நாட்டிற்கு நன்றி. முக்கியமாக எல்லாப் பெண்களுக்கும் நன்றி. இது பெண்களுக்கான நீதி ஒட்டுமொத்த நாட்டிற்கான நீதி,” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India