9 நொடிகளில் தரைமட்டமான நொய்டா இரட்டை கோபுரம்: ஏன்? எதற்கு? பின்னணி என்ன?
நொய்டா இரட்டைக் கோபுரக் கட்டடம் நீதிமன்ற உத்தரவின்படி சில நொடிகளில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அருவி உள்வெடிப்பு முறையில் இந்த பிரமாண்டக் கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறிக் கட்டப்படும் கட்டிடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதுவும் பெருநகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப கட்டிடங்களும் அதிகரிக்கின்றன.
நிறுவனங்களுக்கு இடையேயுள்ள போட்டியால், அப்பாவி மக்கள் பலியாகும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. சில சமயங்களில் முன்கூட்டியே அரசு விழித்துக் கொண்டு, விதிகளை மீறிக் கட்டப்படும் கட்டடங்களை இடித்து விடுகிறது.
அப்படிப்பட்ட கட்டிடங்களில் ஒன்றுதான் இன்று உத்தரப்பிரதேசத்தில் இடிக்கப்பட்டுள்ள இரட்டை கோபுரக் கட்டிடம். தொலைக்காட்சிகளில் அக்கட்டிடம் ஒரு சில நொடிகளில் சீட்டுக்கட்டுப் போல் சரிந்து விழுந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. ஆனால், அந்தக் கட்டிடம் கடந்து வந்த கதை, ஒரு சில நிமிடங்களில் முடிந்ததல்ல.. அதன் பின்னால் பல ஆண்டுக்கதை உள்ளது.
இரட்டை கோபுரம்
கடந்த 2004ம் ஆண்டு நொய்டாவின் செக்டார் 93Aல் 'சூப்பர்டெக் எமரால்டு கோர்ட்' ஹவுசிங் சொசைட்டி கட்டப்பட உத்தேசிக்கப்பட்டது. இதற்காக, அடுத்த ஆண்டே ஒன்பது தளங்களைக் கொண்ட 14 கோபுரங்கள் கட்டும் கட்டிடத் திட்டத்தை நொய்டா உள்ளாட்சியிடம் கொடுத்து அனுமதி பெறப்பட்டது.
ஆனால், இந்தத் திட்டம் பின்னர் மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2012ம் ஆண்டு புதிய திட்டம் போடப்பட்டு, அதே இடத்தில் 40 மாடிகளைக் கொண்ட இரட்டை கோபுரங்களின் அமைப்பு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, அபெக்ஸ் எனும் கட்டிடம் 32 மாடிகளுடன் 328 அடி உயரமும், சியான் எனும் கட்டிடம் 31 மாடிகளுடன் 318 அடி உயரமும் கொண்டு அழகாகக் கட்டப்பட்டது.
டெல்லியின் அடையாளங்களில் ஒன்றான குதுப் மினாரை விட இந்த இரட்டை கோபுரங்கள் அதிக உயரமாகக் கட்டப்பட்டது. ஆனால், நொய்டாவின் புவியியல் சூழ்நிலைக்கு இத்தனை உயர கட்டிடம் சரியானதல்ல என்பது பின்னர் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த கட்டிடம் கட்டப்பட்டது சட்டவிரோதமானது என குடியிருப்போர் நலச் சங்கம் (RWA) சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
வழக்கு கடந்து வந்த பாதை
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2014ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி அந்தக் கட்டிடத்தை இடிக்க கால நிர்ணயம் செய்தது. அந்த உத்தரவு வெளியான நாளிலிருந்து, நான்கு மாதங்களுக்குள் அந்தக் கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் சொந்த செலவில் இடிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்தக் கட்டிடத்தில் பிளாட் வாங்கியவர்கள் நஷ்டமடையக் கூடாது என்பதற்காக, அவர்கள் செலுத்திய பணத்திற்கு 14% வட்டி போட்டு, அதனைத் திருப்பித்தர வேண்டும் எனவும் பில்டருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இதற்கு ஒத்து வராத பில்டர்கள், இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அந்த வழக்கிலும் கட்டிடத்தை இடித்தே தீர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இம்மாதம் 21ம் தேதி இதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் அளித்தபோதும், நொய்டா ஆணையம் புதிய கோரிக்கை ஒன்றை முன்வைத்தது. அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கட்டிட இடிப்பு தேதியை ஆகஸ்ட் 28 வரை நீட்டித்தது.
இந்த இரட்டை கோபுரங்களை இடிக்கும் பணி ‘எடிஃபைஸ்’ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று மதியம் 2.30 மணிக்கு கட்டிடம் வெற்றிகரமாக இடிக்கப்பட்டது.
முன்னதாக, தொழில்நுட்பக் காரணங்களிலோ, வானிலை காரணங்களினாலோ ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4 வரை கட்டிடத்தை இடிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கு அவசியப்படாமல், இயற்கையும், தொழில்நுட்பமும் கைகொடுக்க, தற்போது சில நொடிகளில் அருவி உள்வெடிப்பு முறையில் வெற்றிகரமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது அந்தக் கட்டடம்.
இரட்டை கோபுரக் கட்டடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார், 55 ஆயிரம் டன் கட்டிட கழிவுகள் அப்பகுதியில் குவிந்துள்ளது. இதனை 3,000 லாரிகளில் அகற்றுவதற்கு 3 மாதங்களுக்கு மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் வெடிவைத்து தகர்க்கப்பட்ட சமயத்தில் புழுதிப் புயல் போன்று அந்த பகுதியில் தூசிப் புகை காணப்பட்டது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இடிபாடுகளில் இருந்து வந்த இவை, மற்ற பகுதிகளை சேதப்படுத்தாமல் தடுக்க 110 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பிரத்யேக துணி கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கனவு பலித்தது
முன்னதாக, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த இரட்டை கோபுரத்தை இடிப்பதுதான் தனது கனவு என சேத்தன் தத்தா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படி அவர் கூறியதன் காரணம், இன்று அந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட கட்டிடத்தை இடிக்க வெடி மருந்துகளை வெடிக்க வைக்கும் பட்டனை அழுத்திய நபர் அவர்தான்.
கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவு வழங்கியதிலிருந்தே இந்தக் கட்டிடத்தை இடிக்க ஆர்வமாகக் காத்துக் கொண்டிருந்தவர் ஹரியானாவைச் சேர்ந்த பொறியாளர் சேத்தன் தத்தா. கட்டிடத்தை இடிப்பதற்கான பட்டனை அழுத்த நீண்ட நாட்கள் பிரார்த்தனை செய்து வந்ததாகவும் பேட்டிகளில் வெளிப்படையாகவே கூறிவந்தார்.
“கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் அந்த செய்தியை யாரோ ஒருவர் எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார். நான் அப்போதிலிருந்து பிரார்த்தனை செய்யத் தொடங்கினேன். ஆனால் நான் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இதனையடுத்து சில மாதங்கள் கழித்து எடிஃபைஸ் என்னையும் எனது நிறுவனத்தையும் வெடிமருந்துகளை கட்டிடங்களில் நிரப்புவதற்காக அணுகியது,” என ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் சேத்தன் தத்தா.
இப்படித்தான் இடிக்கப்பட்டது!
சிறிய கட்டிடங்களை இடிப்பதென்றாலே, அதன் அருகில் வசிப்பவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல், எப்படி அதனை நிறைவேற்றுவது என அதிகாரிகள் நன்கு யோசித்தே திட்டமிடுவார்கள். அப்படி இருக்கையில் இவ்வளவு பெரிய கட்டிடத்தை இடிப்பதென்றால், அது சுலபமான காரியமா என்ன?
முன்னதாகவே கட்டிடத்தை எப்படி இடிப்பது எனத் தெளிவாக திட்டமொன்று வகுக்கப்பட்டது. கட்டிடத்தின் 9 ஆயிரம் இடங்களில் வெடிமருந்துகள் சங்கிலித் தொடராக வைக்கப்பட்டன. கட்டிடத்தின் தூண்களில் வெடிபொருள் நிரப்பும் பணி ஆகஸ்ட் 13-ல் தொடங்கி, கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தன. இதற்காக மொத்தம் 3700 கிலோ வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டன.
வெடிக்க வைக்கும் குழு கட்டிடத்திலிருந்து சுமார் 50-70 மீ தொலைவில் இருந்து பணியில் ஈடுபட்டது. வெடிக்க வைக்கப்பட்ட பகுதி நான்கு அடுக்கு இரும்பு சுற்று வேலி மற்றும் 2 போர்வை அமைப்புகளால் மூடப்பட்டிருந்ததால், எந்த இடிபாடும் வெளியில் வராமல், இடிப்புக்குழு எதிர்பார்த்தபடியே தூசி மட்டுமே அதிகம் பறந்தது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக முன்கூட்டியே இந்த கட்டிடத்தின் அக்கம் பக்கத்தில் உள்ள சுமார் 7,000 பேர் காலை 7 மணிக்கே அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.