'ஏஐ செலவுகளை இந்தியா குறைக்கும்' - சாம் ஆல்ட்மன் கருத்துக்கு ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் பதில்!
ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால், தனது ஏஐ சேவை க்ருத்ரிம் மூலம் ஓபன் ஏஐ சாட்ஜிபிடிக்கு வலுவான போட்டியாக விளங்க முடியும் என நம்புகிறார்.
இந்திய நிறுவனங்களால் சாட்ஜிபிடி போன்ற ஏஐ சேவைகளை உருவாக்க முடியாது என ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மன் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாக, ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால், தமது நிறுவனம் உருவாக்கிய ஏஐ ஸ்டார்ட் அப் 'க்ருத்ரிம்' (Krutrim) இதற்கான பதிலாக அமையும் என தெரிவித்துள்ளார்.
யுவர்ஸ்டோரியின் டெலவப்பர் மாநாடு 'DevSparks 2023' நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் ஏஐ சேவைகள் ஏற்பு தொடர்பாக கேள்விக்கு பதில் அளிக்கும் போது பவிஷ் அகர்வால்,
"மேற்கத்திய நிறுவனங்கள் எல்லாம் ஏஐ சேவைகள் உருவாக்க மிகவும் கடினமானவை, எங்களால் மட்டுமே இது சாத்தியம் என உங்களை நம்ப வைக்க முயல்கின்றன,” என்று கூறினார்.
சாட்ஜிபிடி போன்ற சேவையை இந்தியாவால் உருவாக்க முடியாது என ஓபன் ஏஐ சி.இ.ஓ சாம் ஆல்ட்மன் தெரிவித்த கருத்தை குறிப்பிட்டவர்,
“இதை எப்படி செய்வது என அவருக்கு உணர்த்துவோம்,” என்று தெரிவித்தார்.
தங்கள் நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை ஏஐ செலவுகளை குறைந்து, இவற்றை இந்திய மக்களுக்கு ஏற்றதாக மாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
க்ருத்ரிம் சேவை பற்றி குறிப்பிட்டவர், சாட்ஜிபிடிக்கு இணையாக இது இன்னும் வளர வேண்டும் என்றாலும், நாம் துவங்கினால் தானே முன்னேற முடியும் என்றார்.
2023ல் ஜுன் மாதம் இந்தியா வந்திருந்த போது சாம் ஆல்ட்மன் சாட்ஜிபிடிக்கான போட்டி சேவையை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்க முடியாது எனக் கூறியிருந்தார்.
இது இந்திய தொழில்நுட்ப உலகில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இத்தகைய சேவைகளை உருவாக்குவதற்கான பெரிய பட்ஜெட் இல்லாததே காரணம் என்று விளக்கம் அளித்தார்.
ஏஐ பல தலைமுறைக்கு ஒருமுறை வரும் வாய்ப்பு என்றும் இந்தியா இதன் மையமாக திகழலாம் என்று பாவிஷ் அகர்வால் கூறினார்.
“கடந்த 30 ஆண்டுகளில் தரவுகளுக்கான ஈர்ப்பு மையம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. இப்போது அவை இந்தியாவில் தேவைக்காக வருகின்றன. இந்தியா திறந்தவெளி சந்தை மட்டும் அல்ல, எதிர்கால பாதையை வகுக்கக் கூடியது," என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் டெவலப்பர் சூழலை வளரச்செய்வது தங்கள் ஏஐ சேவையின் நோக்கம் என்றும் கூறினார்.
“நாம் மேற்கத்திய டிஜிட்டல் கருத்து வடிவங்களில் வளர்ந்தோம், இப்போது இந்திய கருத்து வடிவங்கள் உருவாகி வருகின்றன...” என்றும் தெரிவித்தார்.
(பொறுப்பு துறப்பு: யுவர்ஸ்டோரி நிறுவனர், சி.இ.ஓ., ஷரத்தா சர்மா, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சுயேட்சை இயக்குனர்களில் ஒருவர்.)
ஆங்கிலத்தில்: திம்மையா பூஜாரி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan