Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மதுரை கள்ளழகர் கோவிலுக்கு ரூ.1 கோடி சொத்தைத் தானம் செய்த முதியவர்!

தன் குடும்பம், தன் வாழ்க்கை முன்னேற்றம் என்றே ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில் தள்ளாத வயதில் தான் உழைத்து சம்பாதித்த சொத்தை தானமாக தந்திருக்கிறார் வாழும் வள்ளல் இவர்.

மதுரை கள்ளழகர் கோவிலுக்கு ரூ.1 கோடி சொத்தைத் தானம் செய்த முதியவர்!

Tuesday January 07, 2020 , 2 min Read

மனிதனுடைய வாழ்க்கை என்பது பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு, சொந்தக் காலில் நிற்க மாதச் சம்பளத்தில் வேலை, வேலை கிடைத்தவுடன் திருமணம். திருமணத்திற்குப் பின்னர் தனது குடும்ப முன்னேற்றம் என இப்படித்தான் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை ஓட்டம் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதில் தப்பித் தவறி சில அதிசயங்களும் நடப்பதுண்டு. அப்படியான ஒரு அதிசய மனிதராக இருக்கிறார் வாழும் வள்ளல் கருப்பையா.


மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. மின்சாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தன்னுடைய சொந்த உழைப்பால் முன்னிற்கு வந்தவர். கருப்பையா தனது மனைவி, இரு மகள்களுடன் சந்தோஷமாக வாழ்ந்தவர். மகள்களுக்குத் திருமணம் முடித்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்த இவரின் மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார்.


அம்மா இல்லாத நிலையில் தங்களைக் கஷ்டப்பட்டு வளர்த்த அப்பாவை மகள்கள் அன்போடும் அரவணைப்போடும் பராமரித்து வருகின்றனர். வயோதிகத்தால் கருப்பையா வீல் சேரில் நடமாடிக் கொண்டிருக்க அவருக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர் அவருடைய மகள்கள்.

கருப்பையா

இந்நிலையில், தனக்குச் சொந்தமான 5 செண்ட் பரப்பளவில் உள்ள 2 வீடுகளை, உலகப்புகழ் பெற்ற மதுரை கள்ளழகர் கோவிலுக்குத் தானமாக வழங்க முடிவு செய்திருக்கிறார் கருப்பையா.

தாயோ, தந்தையோ வயோதிகம் அடைந்துவிட்டால் அவர்களின் சொத்தை எப்படி அபகரிக்கலாம் என்றும் கடமையே என்று பராமரிக்கும் வாரிசுகளுக்கு மத்தியில் வைரமாக ஜொலிக்கின்றனர் கருப்பையாவின் மகள்கள்.

சொத்து தான் முக்கியம் என்று அப்பாவை தூக்கி தெருவில் வீசும் மகள்களையெல்லாம் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம், ஆனால் கருப்பையாவின் மகள்கள் அவருடைய முடிவிற்கு மதிப்பளித்து சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சொத்து ஆவணங்களை கள்ளழகர் திருக்கோவில் துணை ஆணையர் அனிதாவிடம் தனது இரு மகள்களின் முன்னிலையில், முதியவர் கருப்பையா கோயிலுக்கு தானமாக வழங்கினார். சொத்தை தானம் செய்தது பற்றிக் கூறிய கருப்பையாவின் மகள் சாந்தி,

“அப்பாவுடைய ஆசையை நிறைவேற்றுவதில் எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம். அப்பா யாரையும் நம்பாமல் உழைப்பாலேயே உயர்ந்தவர். கடைசி வரை கஷ்டப்பட்டு தானும் உயர்ந்து எங்களையும் உயரத்திற்கு கொண்டு வந்தவர். அந்த உழைப்பு கடைசி காலத்தில் பல பேருக்கு பயனளிக்கும் வகையில் சொத்தை தானம் செய்வது எங்களுக்கு மகிழ்ச்சியே,” என்றார்.

கள்ளழகர் எங்களுக்கு குல தெய்வம் மாதிரித் தான். அம்மா காலத்திலேயே கோவிலுக்கு வீட்டை தானமாக எழுதி வைக்க வேண்டும் என்று சொல்லி வந்தார். இன்றைய காலகட்டத்தில் சுயநலமாக எல்லோரும் யோசிக்கும் போது தனது வாழ்க்கையில் எல்லாக் கடமைகளையும் சிறப்பாக செய்த அப்பா, தற்போது தனது சொத்தை கோவிலுக்குத் தானமாக செய்வதாகச் சொன்னது அவருடைய வாழ்க்கை முழுமையடைவதை குறிக்கும் என நாங்கள் நினைத்தோம். எனவே மகிழ்ச்சியோடும், முழு மனதோடும் இதனைச் செய்தோம் என்கிறார் அவர்.

கருப்பையா

பட உதவி: நியூஸ் ஜே

தனது கடமைகளையெல்லாம் முடித்துவிட்ட கருப்பையா சொத்தை தானமாகக் கொடுக்க முன் வந்த நல்ல மனதையும். காசு, பணம் மட்டும் முக்கியமல்ல தர்மம் தலைகாக்கும் என்று அப்பாவிற்கு தப்பாத மகள்களாக இந்த சமூக நல செயலில் தங்களின் பங்களிப்பையும் சிறப்பாக செய்திருக்கின்றனர் அவரின் மகள்கள்.


நாட்டுல இப்படியும் சிலர் இருக்கிறதால தான் கொஞ்சமாச்சும் மழை பெய்யுதுன்னு நீங்க நினைப்பது போலவே பலரும் இந்த வாழும் வள்ளல்களை வாழ்த்தியும், பாராட்டியும் வருகின்றனர். மணணில் பிறப்பது ஒரு முறை அந்த ஒரு முறையும் எப்படி வாழ்ந்தோம் என்பதை விட நாம் வாழ்ந்த வாழ்க்கையால் நமக்குப் பிறகு வரும் சந்ததியினருக்காக என்ன விட்டுச் சென்றிருக்கிறோம் என்பதே முக்கியம் என்பதை விதைத்திருக்கிறார் கருப்பையா.


தகவல் உதவி : நியூஸ் ஜெ