புற்றுநோயாளிகளுக்காக தலைமுடியை தானம் செய்த கேரள பெண் போலீஸ்!
பெண்களின் அழகு கூந்தலில் இல்லை அவர்களின் செயல்களில் தான் இருக்கிறது என்று காட்டியுள்ளார் கேரள காவல்துறையில் பணியாற்றும் இவர்.
பெண்ணின் அழகு கூந்தலில் தான் என்ற நம்பிக்கை எல்லாம் பத்தாம்பசிளித்தனம் என்பதில் மூத்த போலீஸ் அதிகாரி அபர்ணா லாவாகுமாருக்கு தெளிவாக இருக்கிறார். வெறும் பெமினிஸம் பேசும் பெண்ணாக இதை அவர் கூறவில்லை 46 வயதான அபர்ணா கேரள மாநிலம் திருச்சூர காவல் சரகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று தன்னுடைய தலையை மொட்டையடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு வந்திருக்கிறார் இவர். தன்னுடைய முட்டிக்கால் வரை நீண்டிருந்த அழகிய தலைமுடியை அவர் விட்டுக்கொடுத்தற்கு பின்னால் ஒரு அழகிய காரணம் இருக்கிறது. அபர்ணா எதிர்கொண்டிருக்கும் இந்த சவால் அழகு என்பது தலைமுடியில் இல்லை என்பதை உடைத்துக் காட்டியுள்ளது.
திருச்சூர் மாவட்டம் இரிஞ்சலகுடா காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அபர்ணா எதேச்சையாக உள்ளூர் பள்ளி ஒன்றின் விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்றிருக்கிறார். அங்கு 5 வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரைப் பார்த்து மனம் களங்கி இருக்கிறார். இதன் எதிரொலியாகவே தனது தலைமுடியை அபர்ணா தானம் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.
“கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு தலைமுடி உதிர்தல் என்பது நோய்வாய்பட்டவர்களுக்கு மிகுந்த வலியைத் தரும். என்னுடை ய ஆதரவை அவர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டே நான் மொட்டையடித்துக் கொண்டு அதனை வெளிப்படுத்தினேன். வெட்டிய என்னுடைய முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்வதற்காக தானம் அளித்துவிட்டேன்," என்று கூறுகிறார் அபர்ணா.
சிறு வயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் சிகிச்சைக்குப் பிறகு தலைமுடியின்றி காணப்படுகின்றனர். ஒரு பக்கம் நோய் அவர்களை வாட்டுகிறது மற்றொருபுறம் சிகிச்சையின் பின்விளைவுகளை எதிர்கொள்கின்றனர். இதனிடையே தோற்றம் மாற்றத்தால் சகமாணவர்களின் கேலி, கிண்டல்களுக்கும் ஆளாகின்றனர் என்று கூறுகிறார் அபர்ணா.
புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நோய் பாதிக்கப்பட்ட இளம் மாணவரை பார்த்த பிறது அபர்ணா ஒல்லூரில் உள்ள அழகு நிலையம் சென்று தன்னுடைய முடியைவெட்ட முடிவு செய்துள்ளார். முடியை வெட்டுவதை விட முழுவதும் மொட்டை போடுவது அந்த மாணவருக்கு நம்பிக்கை தருவதாக இருக்கும் என்று மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு முன்பும் கூட அபர்ணா தன்னுடைய தலைமுடியை புற்றுநோயாளிகளுக்கு விக் செய்வதற்கு தானம் செய்திருக்கிறார்.
"ஏற்கனவே ஒரு முறை கூட நான் என்னுடைய முடியை தானம் செய்திருக்கிறேன். ஆனால் அப்போது தோள்பட்டை அளவிற்கு முடி வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை தானம் செய்தேன். இந்த முறை முழுவதும் மொட்டையடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். என்னால் முடிந்த அளவு முழுமையான உதவியை புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தர விரும்பினேன். மொட்டை அடித்துக் கொள்வதால் என்னுடைய தோற்றம் என்னவாகுமோ என்றெல்லாம் நான் கவலைகொள்ளவில்லை," என்கிறார் அபர்ணா.
காவல்துறையில் உயரிய பொறுப்பில் இருக்கும் அபர்ணா செய்த இந்த நற்செயலை அவரே விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் மொட்டையடித்துக் கொண்ட உள்ளூர் பார்லர் இவரின் புகைப்படத்ததை முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அது ஊடகங்கள் கவனத்திற்கு வந்தது.
கேரள காவல்துறையில் சீருடை தொடர்பாக சில விதிகள் இருக்கிறது. தாடி வளர்க்கக் கூடாது, ஆண் காவலரோ பெண் காவலரோ சரியான காரணமின்றி மொட்டையடித்துக் கொள்ளக் கூடாது. எனினும் அபர்ணா மொட்டையடித்துக்கொள்வதற்கான காரணம் நல்ல விஷயத்திற்கானது என்பதால் அவருக்கு அனுமதி தந்ததாகக் கூறுகிறார் திருச்சூர் மாவட்ட காவல் தலைவர் விஜயகுமார் ஐபிஎஸ்.
சொல்லப்போனால் சமூக சிந்தனையோடு தனது முடியை தானம் செய்ய முன் வந்த அபர்ணாவின் செயல் பாராட்டிற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய தலைமுடியை தானம் செய்ததன் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ள அபர்ணா ஏற்கனவே 2008ம் ஆண்டும் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டவர். தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தவரின் உடலைத் தர வேண்டுமானால் கட்டணத்தை செலுத்த மருத்துவமனை வலியுறுத்தியுள்ளது. கட்டணத்திற்கு பணம் இல்லாமல் அந்த குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருந்த சமயத்தில் இரிஞ்சலகுடாவில் கொலை வழக்கு விசாரணைக்காக சென்றிருந்தவர் இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தன்னுடைய கையில் போட்டிருந்த தங்க வளையலை கழட்டிக் கொடுத்து உதவியுள்ளார்.
மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தோள் கொடுத்து நிற்கும் போது மக்கள் காவல்துறையினர் இடையேயான இடைவெளி குறையும். போலீஸ் என்றாலே மக்களுக்கு ஒரு வித பயஉணர்வு தான் முதலில் வருகிறது அதனை மாற்ற வேண்டும் என்று நான் நினைத்தேன் என்கிறார் அபர்ணா.
கையில் காசு இல்லைன்னா ஃபைன், மாமூல் வசூலிக்கும் காவலர்கள் மத்தியில் தன்னுடைய வளையலை கொடுத்து முடியை தானம் செய்து காவல்துறையின் மீது புது நம்பிக்கையை பாய்ச்சி இருக்கிறார் அபர்ணா. கிரேட் சல்யூட் மேடம்!
தகவல் உதவி : தி நியூஸ் மினிட் | கட்டுரையாளர் : கஜலெட்சுமி