2021: சமந்தா டூ சுஷ்மிதா; வெப் சீரிஸில் அழுத்தமான ரோலில் கலக்கிய பெண் நடிகர்கள்!
ஓடிடி தளங்களைப் பொறுத்தவரை 2021ம் ஆண்டு பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல நடிகர்கள், படைப்பாளர்கள் என அனைவருக்குமே நல்ல அனுபவங்களை வழங்கியுள்ளது. வெள்ளித்திரையில் காட்சிப்படுத்த முடியாத சவாலன விஷயங்கள் பலவற்றையும் ஓடிடி தளத்தில் உருவாக்க முடிந்தது படைப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
ஓடிடி தளங்களைப் பொறுத்தவரை 2021ம் ஆண்டு பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல நடிகர்கள், படைப்பாளர்கள் என அனைவருக்குமே நல்ல அனுபவங்களை வழங்கியுள்ளது. வெள்ளித்திரையில் காட்சிப்படுத்த முடியாத சவாலன விஷயங்கள் பலவற்றையும் ஓடிடி தளத்தில் உருவாக்க முடிந்தது படைப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
நடிகர்களை விடவும் நடிகைகளுக்கு தான் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்கள் பல்வேறு வாய்ப்புகளை வாரி வழங்கியுள்ளன. ஓடிடி வெப் சீரிஸ் மூலமாக நடிகைகள் சிரிக்கவும், சிந்திக்கவும், உற்சாகப்படுத்தவும் செய்துள்ளனர். அதிலும், சில கேரக்டர்கள் தொடர் முடிந்த பிறகும் கூட நம்முடன் இணைந்து பயணிப்பதைப் போன்ற உணர்வை கொடுக்கிறது.
அப்படி 2021ம் ஆண்டில் ஓடிடி தளங்களை ஒரு கலக்கு, கலக்கி சிறந்த பெண் கதாபாத்திரங்களை பற்றி காணலாம்...
The Family Man 2 - ராஜி:
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து வெளியான வெப் சீரிஸ் ‘ஃபேமிலி மேன் 2’. இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கியிருந்த வெப் தொடரில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் தொடரில் ஈழப் போராளியாக ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சமந்தாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தது.
ராஜியின் கதாபாத்திரம் சமநிலையுடன், நுணுக்கத்துடன், உணர்வுபூர்வமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அரசியல் ரீதியாக இந்த கதாபாத்திரம் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புக்கு ஆளாகி இருந்தாலும், ஓடிடி ரசிகர்கள் சமந்தாவின் நடிப்பை கொண்டாடினர்.
லிட்டில் திங்ஸ் - காவ்யா:
துருவ், காவ்யா இருவருக்கும் இடையிலான க்யூட்டான காதல் தான் Little Things. நாங்கு சீசன்கள் கடந்து வந்துள்ளது இந்த கதைக்களம். இதில் ’காவ்யா’வாக மிதிலா பால்கர் நடித்திருந்தார். ஒரு சுதந்திரமான, உணர்ச்சிகரமான, எளிமையான, நேர்மையான ஆனால் மிகவும் வலிமையான பெண் கதாபாத்திரமாக காவ்யா வடிவமைக்கப்பட்டிருந்தது. அவள் செய்யும் காரியங்களில் ஆர்வம் கொண்டவள்.
வசீகரம் மற்றும் நகைச்சுவையான இயல்பு மூலம் தன்னைச் சுற்றியுள்ள உறவுகளை குதூகலமாக்கும் கேரக்டர். தனது தனிப்பட்ட வாழ்க்கையுடன் தனது வேலையை சமநிலைப்படுத்துவதில் சிறந்தவள். இப்படிப்பட்ட கவரக்கூடிய அம்சங்கள் நிறைந்திருந்ததால் லிட்டில் திங்ஸின் கடைசி பாகமான 4வது சீசனின் காவ்யாவை பிரிவது கஷ்டமாக இருப்பதாக ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் புலம்பி தீர்த்தனர்.
மும்பை டைரிஸ் 26/11 - சித்ரா தாஸ்:
மும்பையில் 2008ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதல் பற்றி பல்வேறு கதைகள் வெளியாகி இருந்தாலும், அவசர காலத்தில் மருத்துவர்கள் மற்றும் அது சார்ந்த ஊழியர்கள் சந்திக்கின்ற அழுத்தங்கள் பற்றி வித்தியாசமான கோணத்தை Mumbai Diaries 26/11 வெப் தொடர் கையாண்டது. இதில் தவறான திருமணத்தால் தோல்வியுற்ற, சமூக சேவகி சித்ரா தாஸ் கதாபாத்திரத்தில் கொங்கனா சென் சர்மா நடித்திருந்தார்.
தனக்கான பல பிரச்சனைகள் இருந்தாலும், பிற மருத்துவர்களைப் போலவே இரும்பு நெஞ்சம் கொண்டு தனது பணியைக் கையாளும் மருத்துவராக சித்ரா தாஸ் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
மகாராணி - ராணி பாரதி:
நடிகைகள் பலரும் ஒருமுறையாவது இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துவிட மாட்டோமா? என ஏங்க வைக்கும் கேரக்டரில் ஹூமா குரோஷி அசத்தியிருப்பார். வீடு, பிள்ளைகள், கணவன், மாடு என வாழ்ந்து வரும் கிராமத்து பெண் ஒருத்தி, எதிர்பாராத சூழ்நிலையால் ஒரு மாநிலத்தின் முதல்வராக மாறினால் எப்படியிருக்கும் என்பதே கதைக்களம்.
முதல்வரின் மனைவியான ராணி பாரதி எதிர்பாராத தருணத்தில் தனது கணவருக்கு பதிலாக அந்தப் பதவியில் அமரவைக்கப்படுகிறார். அதன் பின்னர் இல்லத்தரசியில் இருந்து ஆளுமை மிக்க அரசியல்வாதியாக மாறும் ஒவ்வொரு கட்டங்களையும் பார்க்கும் போது ரசிகர்கள் நிச்சயம் மெய் சிலிர்த்திருப்பார்கள்.
ஹூமா குரோஷிக்காகவே வடிவமைக்கப்பட்டது போன்ற கெத்தான கதாபாத்திரம் என்றால் அது மிகையாகாது. ராணி பாரதியை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் 2வது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆரண்யக் - கஸ்தூரி டோக்ரா:
நெட்ஃபிக்ஸில் வெளியான Aranyak வெப் தொடரில் சிறிய நகர காவலராக ரவீனா டாண்டன் சிறப்பாக நடித்திருந்தார். குடும்பத்திற்கும், வேலைக்கும் இடையே அல்லாடும் காவல்துறை அதிகாரியாக கஸ்தூரி டோக்ரா கேரக்டரில் நடித்துள்ளார். தான் பணியாற்றிய காலத்தில் இப்படியொரு கேஸ் கிடைக்கவில்லையே என வருத்தப்படும் போதும் ரசிகர்களையே பச்சாதாபப்பட வைக்கிறார். கடைசியில் துணிச்சலான போலீஸ் அதிகாரியாக நின்று உண்மையான குற்றவாளியை கண்டறியும் போதும் நம்மையே அறியாமல் சல்யூட் அடிக்க வைக்கிறார்.
ஆர்யா - ஆர்யா
க்ரைம் த்ரில்லர் கதையம்சத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான ஆர்யா வெப் சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து இரண்டாவது சீசனிலும் சுஷ்மிதா சென் பிரதான வேடத்தில் நடித்திருந்தார். உலகம் முழுவதும் பெண்களை மையமாக கொண்ட க்ரைம் திரில்லர் தொடர்கள் வெளியாகி வருகின்றன. அதில் ஒன்று போலீஸ் அதிகாரியாக இருந்து குற்றவாளியை கண்டறிவார்கள் அல்லது ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டு தப்பிக்க போராடுவார்கள். இதில் இரண்டாவது கேரக்டர் தான் ஆர்யா ஷரீன் (சுஷ்மிதா சென்).
இரண்டாவது சீசனில், சுஷ்மிதா சென் தனது குழந்தைகளைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் வலிமையான மனம் கொண்ட ஆர்யாவாக மீண்டும் நடித்திருந்தார். நல்ல மனைவி, சிறந்த அம்மா என்று தானுண்டு தன் குடும்பம் உண்டு என இருக்கும் ஆர்யா ஷரீனின் வாழ்க்கையில் புயலடிக்கிறது. கணவன் யாராலோ சுட்டுக்கொல்லபட, தனது குழந்தைகளை பாதுகாப்பதற்காக ஆர்யா போராடுவதே கதைக்களம்.
முழுக்க முழுக்க ஒரு பெண்ணை பிரதான கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த வெப்சீரிஸுக்கு நல்ல வரவேற் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.