குடும்பத்தைக் காப்பாற்ற இசையை விட்டு ராபிடோ கேப்டன் ஆன சென்னை பெண்!
குடும்ப வருமானத்திற்காக களத்தில் இறங்கிய 34 வயது பெண்!
கொரோனா தொற்றுநோய் மனித இனத்திற்கு எண்ணற்ற சவால்களை எழுப்பியுள்ளது. நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளைத் தாண்டி, குடும்பங்களை இடம்பெயர வைத்தது, தாங்கள் மேற்கொண்ட தொழில்களை விட்டுவிட்டு ஏராளமான மக்களை எந்த வருமான ஆதாரமும் இல்லாமல் விட்டுவிட்டது என கொரோனாவால் நிகழ்ந்த சவால்கள் அதிகம்.
இப்படிப்பட்ட கொரோனா தொற்றுநோய்க்கு சென்னையைச் சேர்ந்த முப்பத்தி நான்கு வயது அம்பிகாவும் விதிவிலக்கல்ல. அவரது குடும்பம் திரைத்துறை பின்னணியை கொண்டது. அவரது தந்தை, ஜான்சன் மாஸ்டர், கேரளாவில் பிரபல இசை இயக்குனர்களிடம் தபலா வாசிப்பவராக பணியாற்றிஇருக்கிறார். இதேபோல் அவரது சகோதரர் ஒரு கீ போர்டு பிளேயர். அம்பிகாவும் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இசைத்துறையில் பணியாற்றினார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த அம்பிகா, படங்களுக்கான பின்னணி இசை கோர்ப்பு செய்வதற்கும், மேடை நிகழ்வுகளில் பாடுவதற்கும் தனி குழு ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். ஆனால், கொரோனா தொற்றுநோய் தொடங்கியபோது அவரின் 14 ஆண்டு இசை வாழ்க்கை கடும் சவாலை சந்தித்தது.
ஏற்கனவே அவரது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட, கொரோனா தொற்றுநோய் அவரின் வாழ்க்கையை மேலும் சவாலாக்கியது. இதனால் அம்பிகா, குடும்ப வருமானத்தை ஈடுசெய்வதற்கான வழிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
வேலைக்கான வழிகளைத் தேடிக்கொண்டிருந்த அவர், கார்ப்பரேஷன் அலுவலகத்தில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மேற்பார்வையிடும், மேற்பார்வையாளராக நான்கு மாதங்கள் பணிபுரிந்தார்.
நான்கு மாதங்களுக்கு பின்பு இந்த வேலையும் பறிபோக, பைக்-டாக்ஸி சேவையான Rapido மீது தனது கவனத்தை திசைத்திருப்பினார். இந்த யோசனை எப்படி வந்தது என்பது குறித்து,
”எனது சகோதரர் ராபிடோவின் சேவைகளைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்குச் செல்வதை நான் கண்டிருக்கிறேன். இது நியாபகம் , வரவும் ராபிடோ சேவை வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று நினைத்தேன். நான் படிவத்தை பூர்த்தி செய்து அவர்களிடம் பேசினேன். உடனடியாக ஒரு வேலை வழங்கப்பட்டது,” என்று அம்பிகா கூறுகிறார்.

லாக்டவுன் நேரத்தில் தற்போது மக்களை கொண்டுசெல்லும் சேவை இல்லையென்றாலும், அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்ல, உணவு டெலிவரி செய்ய போன்ற சேவைகளை மேற்கொள்ள இ-காமர்ஸ் தளங்களுடன், ராபிடோ இணைந்துள்ளது.
இந்தப் பணியில் தன்னையும் இணைத்துக்கொண்ட அம்பிகா, இப்போது தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சென்னை நகரம் வழியாக தனது ஹோண்டா ஆக்டிவாவில் பொருட்களை டெலிவரி செய்கிறார்.
சேவையின் காரணமாக பெரும்பாலும் நீண்ட தூரம் பயணம் செய்கிறார். சாதாரண காலகட்டங்களில் இந்த சேவையில் சில கசப்பான சம்பவங்கள் நடக்கும். இதனால் பெண்கள் இந்த சேவையில் அவ்வளவாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
”ஆனால் தற்போது ஒரு கடினமான நேரம். பி.காம் பட்டம் பெற்றிருந்தாலும், நான் நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும்போது ரூ.6,000-7,000 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த வேலை குறைந்தபட்சம் எனக்கு ஒரு நிலையான வருமானத்தை அளிக்கிறது - ஒரு நாளைக்கு சுமார் 250 ரூபாய் கிடைக்கிறது,"
எனக் கூறும் அம்பிகா கொரோனா பரவல் அச்சம் காரணாமாக, ஒரு மருத்துவர் அறிவுறுத்தியபடி தனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைத் தவிர, அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறார்.
முகக்கவசம் அணிவது, கையுறைகள் அணிவது, ஒவ்வொரு டெலிவரிக்கு முன்னும் பின்னும் சானிடைசரை தாராளமாக பயன்படுத்துவது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஆரம்பத்தில் அம்பிகா இந்த வேலையை தேர்வு செய்தது பற்றி அவரின் சகோதரர் சற்றே வருத்தப்பட்டிருந்தாலும், இப்போது அவர் அம்பிகாவின் முடிவை சரி என ஆதரிக்கிறார்.
”தொற்றுநோய் பலரின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்துள்ளது. என் குடும்பத்திற்கு உதவும் எந்த ஒரு வேலையை நான் விடப்போவதில்லை. எனது எதிர்காலம், எனது இரண்டு மகள்களைச் சுற்றி இருக்கிறது. கேரளாவில் உள்ள அவர்களது குடும்ப வீட்டை விற்றுவிட்டு சென்னையில் ஒரு வீட்டை வாங்கத் திட்டமிட்டுளேன். குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தைப் பாதுகாக்க போதுமான பணத்தை சேமிக்க விரும்புகிறேன்.”
எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்வதே இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி. எல்லாம் இயல்பு நிலைக்கு வரத் தொடங்கும் வரை இந்த வைரஸை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது, என்று மனம் திறக்கிறார் அம்பிகா!
ஆங்கிலத்தில்: ரேகா | தமிழில்: மலையரசு

