{கொரோனா வாரியர்}: கணவருடன் சேர்ந்து உடல் தகனம் செய்யும் 38 வயது செவிலியர்!
ஒடிசாவின் புவனேஸ்வரில் பிரதீப் சேவா அறக்கட்டளையை நடத்தி வரும் மதுஸ்மிதா பிரஸ்டி மற்றும் அவரது கணவர் பிரதீப் குமார் பிரஸ்டிஒரு நாளைக்கு குறைந்தது 20 இறந்த உடல்களை தகனம் செய்து வருகின்றனர்.
ஒடிசாவின் புவனேஸ்வரில் பிரதீப் சேவா அறக்கட்டளையை நடத்தி வரும் மதுஸ்மிதா பிரஸ்டி மற்றும் அவரது கணவர் பிரதீப் குமார் பிரஸ்டி ஆகியோர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் கொரோனாவின் ருத்ர தாண்டவத்துத்துக்கு சாட்சியாக உள்ளனர்.
38 வயதாகும் மதுஸ்மிதா ஒரு செவிலியர். கொல்கத்தாவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் கொரோனா ஏற்படும் முன்பு வரை செவிலியராக பணிபுரிந்தவர், கொரோனாவுக்கு பின் தனது வேலையே விட்டுவிட்டு, தனது கணவர் பிரதீப்புடன் சேர்ந்து சொந்த ஊரான புவனேஸ்வருக்கு புறப்பட்டுச் சென்றார்.
சொந்த ஊரில் கொரோனா உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார் மதுஸ்மிதாவும், அவரின் கணவர் பிரதீப்பும். கொரோனா 2ம் அலை உச்சம் அடைந்துள்ள இந்த நிலையில், மதுஸ்மிதாவும் அவரின் கணவரும், ஒரு நாளைக்கு குறைந்தது 20 இறந்த உடல்களை தகனம் செய்து வருகின்றனர்.
மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை அறைகளில், இறந்த உடல்களை தகன இடங்களுக்கு கொண்டு செல்வது அல்லது இறந்த உடல்களை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வது என ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வேலை செய்கிறார் மதுஸ்மிதா.
கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக புதிதாக உருவாக்கப்பட்ட தகன மைதானத்தில் பணியாற்றுவதற்காக இஇப்போது புவனேஸ்வர் மாநகராட்சியுடன் (பிஎம்சி) ஒப்பந்தம் செய்துள்ளனர் இருவரும்.
இது தொடர்பாக பேசியுள்ள பிரதீப்,
“பகல் மற்றும் இரவு எந்த நேரத்திலும் எங்களுக்கு அழைப்புகள் வருகின்றன. அழைப்புகள் வந்தால், நாங்கள் செல்ல வேண்டும். உணவு தயார் செய்யக்கூட நேரமில்லாமல், வேலை செய்ய வேண்டியிருக்கிறது. நேற்று, எங்கள் மதிய உணவு பிஸ்கட் மட்டுமே," என்று கூறியுள்ளார்.
தன்னலமற்ற வாழ்க்கை!
மதுஸ்மிதா, தனது சிறுவயது முதலே தன்னலமற்ற வாழ்க்கைக்குப் பழகியுள்ளார். அவர் நொய்டாவில் உள்ள உயர் சமூக குடும்பத்தில் வளர்ந்தவர். அவளின் வீட்டில் எப்போதும் கொடுக்கும் அறிவுரை, ‘மற்றவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைத் தொடக்கூடாது. மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர்கள்' என்பது தானாம்.
ஆனால் அந்தக் காலகட்டத்திலேயே, மதுஸ்மிதா தனது வீட்டிலிருந்து அரிசி, காய்கறிகள், பழங்கள் போன்ற மளிகைப் பொருள்களைக் கட்டிக்கொண்டு அருகிலுள்ள ஏழைகளுக்கு வழங்குவதை வாடிக்கையாகிக் கொண்டுள்ளார்.
ஒருமுறை, ஏழாம் வகுப்பின் போது, அவரின் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தில் பழங்களை பறித்துக்கொண்டிருந்தபோது அவரின் தந்தை பிடித்து, அவரை அடிக்கத் தொடங்கியுள்ளார். ஏனென்றால், ஏழைகளுக்குக் கொடுக்க அவர் பழங்களை பறித்ததால் அவர் அடித்துள்ளார்.
இப்படி சிறுவயதில் தொடங்கிய அவரின் வாழ்க்கை, அதே போன்ற உதவும் மனப்பான்மை கொண்டு வாழ்க்கை வாழ்ந்த பிரதீப்பை கண்டுபிடிக்க உதவியுள்ளது. ஆம், அவரை போலவே சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட பிரதீப்பும் அவரும் பேஸ்புக்கில் சந்தித்து பழகி காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
”மற்றவர்களுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சியடைந்ததைப் போலவே, பல தசாப்தங்களாக சமூகப் பணிகளுக்காக அர்ப்பணித்த மனிதனையும் நான் காதலித்தேன். நாங்கள் ஆன்லைனில் இணைந்தோம், ஒடிசாவிலுள்ள எனது சொந்த ஊருக்குச் சென்ற போதெல்லாம், நான் அவருடன் பணிபுரிந்தேன், நாங்கள் 2010ல் திருமணம் செய்துகொண்டோம்," என நெகிழ்கிறார் மதுஸ்மிதா.
திருமணத்திற்குப் பிறகு, மதுஸ்மிதா நர்சிங்கில் இளங்கலைப் படிப்பை படித்து பின்னர் கொல்கத்தாவில் ஒரு செவிலியராக வேலை செய்யத் தொடங்கினார். இதோ இப்போது ஆம்புலன்ஸில் சடலங்களை ஏற்றி வருவது, தகன மேடைகளில் பணி செய்வது என சுழன்று வருகிறார்.
அவரின் சேவைக்கு ஒரு சல்யூட்!
ஆங்கிலத்தில்: டென்சின் நார்சாம் | தமிழில்: மலையரசு