11ம் வகுப்பில் தோல்வி; விடாமுயற்சியால் ஐஐடி-யில் இடம் பிடித்த பானிபூரி விற்பவரின் மகன்..!
11ம் வகுப்பில் தோல்வியடைந்ததால், 'பானிபூரி விற்பவரின் மகன், ஐஐடியில் படிக்க முடியாது' என்று சக நண்பர்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்ஷ் குப்தா, நிலையான முயற்சியுடன் இலக்கினை அடைய அயராது படித்து ஐஐடியில் படிக்க தேர்வாகி அசத்தியுள்ளார்.
11ம் வகுப்பில் தோல்வியடைந்ததால், 'பானிபூரி விற்பவரின் மகன், ஐஐடியில் படிக்க முடியாது' என்று சக நண்பர்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்ஷ் குப்தா, நிலையான முயற்சியுடன் இலக்கினை அடைய அயராது படித்து ஐஐடியில் படிக்க தேர்வாகி அசத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 19 வயதான ஹர்ஷ் குப்தா, தோல்வி என்பது பார்ட் ஆஃப் தி லைஃப் என்பதை உணர்த்தி, கடினஉழைப்பும், விடாமுயற்சியும், வெற்றிக்கான அடித்தளம் என்பதை நிரூபித்துள்ளார். ஹர்ஷின் தந்தை சந்தோஷ் குப்தா, மும்பை பெருநகரப் பகுதியின் ஸ்தாபக நகரங்களில் ஒன்றான கல்யாணில் சிறிய பானி பூரி கடையை நடத்தி வருகிறார்.
அவருடைய அம்மா மற்றும் 3 மகன்களை கொண்ட குடும்பத்திற்கான ஒரே ஆதாயம் அவரது வருமானம் மட்டுமே. வறுமை எவ்வளவு வாட்டினாலும், மகன்களை உயர்கல்வி படிக்க வைப்பதில் அவர் பின்வாங்கியதே இல்லை. படிப்பு செலவுகளுக்கான பணத்தை பெரும்பாலும் சிறு கடன்கள் மற்றும் சிறு சேமிப்பு மூலம் ஈடுக்கட்டி வந்துள்ளார்.

இதற்கிடையில், 11ம் வகுப்பு படிக்கும் போது, அவரது மூத்த மகனான ஹர்ஷ் குப்தா மலக்குடல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டார். அதன் காரணமாக, மருத்துவமனையின் படுக்கையிலே நாட்கள் கழிந்ததில், அவரால் தேர்வினை எதிர்கொள்ள முடியவில்லை. 11ம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்தார். ஆனால், தோல்வியால் அவர் துவண்டுவிட இல்லை. நிலையான முயற்சியுடனும், குடும்பத்தினரின் ஆதரவுடனும், அவர் மீண்டும் தேர்வை எழுதி, வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
11 ஆம் வகுப்புத் தோல்விக்குப் பிறகு அவரது வகுப்புத் தோழர்கள் கேலி செய்து, அவரது திறமையை சந்தேகித்ததுடன், 'பானிபூரி விற்பவரின் மகன், ஐஐடியில் படிக்க முடியாது' என்று வார்த்தைகளால் நொகடித்ததை வேதனையுடன் பகிர்ந்தார்.
ஆனால், நெக்டீவ் வைப்ஸை அண்டவிடாத ஹர்ஷ், படிப்பில் முழுகவனத்தை செலுத்தினார். கூடுதல் சுவராஸ்யம் என்னவெனில், 10 ஆம் வகுப்பு முடித்த பிறகு கோவிட் ஊரடங்கின் போது தான் ஹர்ஷ் முதன் முதலில் "ஐஐடி" என்ற வார்த்தையையே கேட்டுள்ளார். இன்ஜீனியரிங் காலேஜ் பற்றிய வீடியோ ஒன்றை ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்குக் காட்டி உள்ளார். அப்போது ஏற்பட்ட ஐஐடி மீதான ஆர்வம் பின்னாளில் இலக்காக மாறியது.
"11ம் வகுப்பில் ஃபெயில் ஆகியதால், சக மாணவர்கள் கேலி செய்தனர். 'பானிபூரி விற்பவரின் மகன் ஐஐடியில் படிக்க முடியாது' என்றனர். ஆனால், அந்த பேச்சுகளெல்லாம் என்னை பாதிக்கவிடவில்லை. படிப்பில் முழுகவனம் செலுத்தினேன். ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை படித்தேன். என்னுடைய முயற்சிகளுக்கு எனது குடும்பத்தினர் எப்போதும் பக்க பலமாக இருந்தனர். ஐஐடி நுழைவுத் தேர்விற்கு படிக்க ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் இணைய முடிவெடுத்தேன். ஐஐடி நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று மும்பை ஐஐடி அல்லது ரூர்க்கியில் இடம் பெற வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது," என்று பகிர்ந்தார் ஹர்ஷ் குப்தா.
இருப்பினும், அவரது கனவை எளிதில் அடையவில்லை. முயற்சிகள் தோல்வி அடைவதில்லை, முடிவுகள் மட்டுமே எதிர்பார்த்த வண்ணம் அமைவதில்லை. அதனால், தான் முயற்சியை என்று கைவிடகூடாது. ஹர்ஷுக்கும் அவரது முதல் முயற்சியின் முடிவுகள் அவர் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. ஆம், முதல் முயற்சியில் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் 98.59 சதவீத மதிப்பெண் பெற்று, நாட்டின் உயரிய கல்விநிறுவனமான ஐஐடியில் இணைவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்விற்கு தகுதி பெற்றார். இருப்பினும், அவர் விரும்பிய கல்லூரியில் சேர்க்கை பெறவில்லை.

முடியாதது எதுவும் இல்லை என்பதில் தீர்க்கமாகயிருந்த ஹர்ஷ், அவரது கனவான IIT-யில் சேர, மீண்டும் முயற்சி செய்து, இரண்டாவது முயற்சியில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஐஐடி ரூர்க்கியில் படிக்க அட்மிஷன் பெற்றார். அடுத்ததாக அவர் சிவில் சர்வீஸில் நுழைய இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
"எனது தந்தை எப்போதும் படிக்க ஊக்குவிப்பார். 'என்னால் படிக்க முடியவில்லை. ஆனால், நீங்கள் உங்கள் கனவுகளைத் தொடர வேண்டும்' என்று கூறிகொண்டே இருப்பார். என்னுடைய எல்லா முடிவுகளுக்கும் உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினருக்கும், நண்பரகளுக்கும் நன்றி. ஐஐடியில் படிக்க விரும்புபவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், 'நீங்கள் யார் என்பதைத் தோல்விகளை கொண்டு வரையறுக்க விடாதீர்கள்'. 11ம் வகுப்பில் தோல்வியடைந்தாலும் நான் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. என் குடும்பத்திலிருந்தும், என் பள்ளியிலிருந்தும் ஐஐடிக்கு படிக்க போகும் முதல் மாணவர் நான்தான்," என்று பெருமையுடன் கூறினார்.
மகனின் வெற்றியால் மகிழ்ச்சியில் திளைத்துள்ள அவரது தந்தை சந்தோஷ் குப்தா பேசுகையில்,
"நான் ஒரு பானி பூரி விற்பனையாளராக இருக்கலாம், ஆனால் என் குழந்தைகள் அவர்களது கனவுகளை அடைவதற்காக, எந்த அளவிற்கும் நான் செல்வேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஹர்ஷ் எப்போதும் நன்கு படிப்பவர். ஆனால், எங்களுக்கு நிதி நெருக்கடிகள் இருந்தன. எனது மற்ற இரண்டு மகன்களான சுபம் மற்றும் சிவம் ஆகியோரும் உயர்கல்வியைத் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்," என்று கூறியஅவர், நிதி நெருக்கடி இருப்பினும் அவரது சேமிப்பிலிருந்து படிப்பு செலவுகளை சமாளித்து வருகிறார்.
தகவல் உதவி: டைம்ஸ் ஆப் இந்தியா
திருச்சி அரசுப் பள்ளி மாணவன் அசத்தல் - ஐஐடி மெட்ராஸில் சேர உதவிய என்ஐடி இலவச பயிற்சி மையம்!

