பிட்சா கார்னர் முதல் இன்ஃபோசிஸ் வரை: நூற்றுக்கணக்கான மாணவர்கள் வாழ்வில் ஏற்றம் தரும் ‘மாற்றம்’ சுஜித் குமார்!
வாரம் முழுதும் இன்ஃபோசிஸ் பணி, வார இறுதிகளில் ‘மாற்றம் ஃபவுண்டேஷன்’ பணிகள் என ஏழை மாணவர்களைத் தேடிச்சென்று கல்வி உதவி, வேலைவாய்ப்பு அளித்து பல குடும்பங்களில் ஒளி ஏற்றி வைப்பவர்.
இதே நாள் 2000மாவது ஆண்டு, செவ்வாய் மதியம், நந்தனம் பிட்சா கார்னர் பிரான்ச்சுக்கு வேலைநிமித்தமாக சென்றிருந்தார் ஹெச்ஆர் பிரிவில் பணிபுரிந்த அவர். ஆடிட் செய்ய அங்கு சென்றிருந்தபோது, அந்த பிஸ்ஸா கார்னர் ரெஸ்டாரண்டின் போன் மணி அடித்தது. போனை பேசி முடித்த கேஷியர் உற்சாகத்தில் கத்தினார். ‘பட்டீஸ் நமக்கு 50 லார்ஜ் பிட்சாவுக்கான ஆர்டர் கிடைத்துள்ளது. அதுவும் எங்கிருந்து தெரியுமா...? இன்ஃபோசிஸில் இருந்து’ என்று சொல்லி துள்ளிக்குதித்தார். பிஸ்ஸா கார்னரின் மனிதவளப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த அவருக்கு இந்த ஆர்டரைப் பற்றி பெரிதாக புரியவில்லை. ஏனெனில், இன்ஃபோசிஸ் என்ற நிறுவனத்தின் பெயரையே முதல் முறையாக கேள்விப்படுகிறார். அவரை நோக்கி வந்த மேனேஜர், ‘உங்களிடம் டிரைவிங் லைசென்ஸ் இருக்கா? ஒரு பெரிய பல்க் ஆர்டர் வந்திருக்கு, டெலிவரிக்கு ஆள் குறைவா இருக்காங்க, கொஞ்சம் உங்கள் ஸ்கூட்டரில் மற்ற ஆட்களுடன் சென்று பிட்சா டெலிவரி செய்யமுடியுமா,?’ என்றார். அவரும் சரி எனச் சொல்லி தனது வெஸ்பாவில் மற்ற டெலிவரி ஆட்களுடன் இன்ஃபோசிஸ் நோக்கிச் சென்றார். அந்த அலுவலகத்திற்குள் நுழைந்ததும் சில்லென ஏசி காற்றுடன் ஒரு புதிய உலகத்தில் நுழைந்தது போல் உணர்ந்த அவர்கள், அந்த சூழலைப் பார்த்து வாய் பிளந்தனர். அங்குள்ள ஊழியர்களின் நேர்த்தியான ஆடையும், அவர்கள் நடந்து கொண்ட விதத்தையும் பார்த்த அந்த ஹெச் ஆர் நபர், பிட்சா டெலிவரிக்கு வந்ததை மறந்து பார்த்துக்கொண்டிருந்தார். வாவ் இத்தனை அற்புதமான ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால் எப்படி இருக்கும் என நினைத்தார். இன்ஃபோசிஸ் பற்றி அன்று கனவுகண்டார்...
சில மாதங்கள் சென்றது, அவரின் வருங்கால மனைவி அவரின் பயோடேட்டாவை இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு அனுப்ப, நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. 7 நிலை இன்டெர்வ்யூவிற்கு பிறகு, ஒரு நாள் அவருக்கு வேலை கிடைத்துவிட்டதாக போன் வந்தது. ‘ஹெச் ஆர் எக்சிக்யூடிவ்’ ஆக தேர்வானார்.
’பிஸ்ஸா கார்னரில் பணிபுரிந்த ஒருவருக்கு இன்ஃபோசிஸில் வேலைக் கிடைத்தது கேட்டு அவரின் நண்பர்கள் பெருமிதம் கொண்டனர், சிலர் ஆச்சர்யத்திலும் இருந்தனர்...’
இப்படி தன் அனுபவத்தை பதிவிட்டிருந்தவர் வேறு யாருமில்லை, ‘மாற்றம்’ சுஜித் குமார் தான். அவர் தான் இன்ஃபோசிஸில் 2001 மார்ச் மாதம் சேர்ந்து இந்தாண்டோடு 18 ஆண்டுகள் முடிந்தததை அடுத்து திரும்பி வந்த பாதையை பதிவு செய்திருந்தார்.
”இத்தனை ஆண்டுகாலம் இன்ஃபோசிஸில் இருப்பேன் என்று என் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் இந்த நிறுவனத்தால் மட்டுமே எனக்கு இன்றுள்ள அடையாளம், பிரபலம், எல்லாம் கிடைத்துள்ளது,” என்றும் பதிவிட்டிருந்தார்.
ஆம், சுஜித் குமார் இன்று இன்ஃபோசிஸின் ஹெச்.ஆர். பிரிவின் இணை துணைத் தலைவராக மட்டும் பதவி உயரவில்லை. தனது சமூக தொழில்முனைவு நிறுவனமான ‘மாற்றம் ஃபவுண்டேஷன்’ மூலம் பலநூறு ஏழை மாணவர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தியவரும் கூட. அதெப்படி கனவு நிறுவனமான இன்ஃபோசிஸில் பணி கிடைத்த சுஜித் குமார் தீடிரென சமூக ஆர்வலராக மாறிய காரணம் என்ன என்று கேட்டால்?,
“நல்ல கார்ப்பரேட் வேலை, கைநிறைய தேவைக்கு அதிகமாகவே சம்பளம், சொகுசான வாழ்க்கை, எல்லாமே இருந்தது. ஆனால் ஒருமுறை மதுரை அருகே ஒரு பள்ளியில் கேரியர் கவுன்சிலிங்கிற்காக பேசப் போயிருந்தபோது ஒரு மாணவி கேட்ட கேளிவியே என்னை சிந்திக்கத் தூண்டியது. அவளின் அக்கேள்வி என்னை சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது,” என்கிறார் சுஜித்.
படித்து முடித்ததும் உடனே வேலை கிடைக்கும்படியான கோர்சை சொல்லுங்கள், என்னையும் என் குடும்பத்தையும் வறுமையில் இருந்து மீட்க நான் வேலைக்கு செல்ல வழி செய்யும் படிப்பைச் சொல்லுங்கள், என்று அந்த மாணவியின் கேள்வி, பலரது வாழ்க்கையின் நிஜத்தை அன்று சுஜித்துக்கு புரியவைத்தது. ஆனால் இந்த ஒரு மாணவிக்கு நிதியுதவி செய்துவிட்டால் மட்டும் போதுமா? இவரைப் போன்ற ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் நிலை என்ன என்ற கேள்வியே அவரை அன்று தூங்கவிடாமல் செய்தது.
கேள்வி கேட்ட அம்மாணவி ப்ளஸ்2 வில் 1200க்கு 1152 மார்க் எடுக்க, அவருக்கு பொறியியல் கல்லூரியில் இலவச சீட்டு கேட்டு தனக்கு தெரிந்த கல்வி நிறுவனத்தை அணுகினார் சுஜித். அவருக்கு அங்கு கிடைத்த பதிலே இன்று ஆலமரமாய் அவரின் கனவு வளர்ந்திட காரணமாக அமைந்தது.
“நான் அந்த எஞ்சினியரிங் கல்லூரி நிர்வாகியிடம் ஒரு இலவச சீட்டு கேட்டேன், அவர் எனக்கு தந்ததோ 20 இலவச சீட். பின்தங்கிய மற்றும் வறுமைக்கோட்டில் இருக்கும் நன்கு படிக்கும் மாணவர்களுக்கு இந்த இலவச எஞ்சினியரிங் சீட்டை தருவதாக அவர் கூறினார்,” என்றார் சுஜித் குமார்.
இந்த வாய்ப்பு சுஜித்தை மீண்டும் ஆழ சிந்திக்க வைத்தது மட்டுமல்லாமல், தகுதியான மாணவர்களை கண்டுபிடிக்க தனக்கு உதவி வேண்டும், முறையான ஒரு அமைப்பு வேண்டும் என்ற முடிவை எடுக்கவைத்தது. சுஜித அடுத்து எடுத்த அடி, ‘மாற்றம் பவுண்டேஷன்’ நிறுவிப்பதில் அமைந்தது. அதே சமயம் தனக்கு அடையாளம் தந்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தை விட்டுவிடுவதாகவும் இல்லை.
2013ல் ‘மாற்றம் ஃபவுண்டேஷன்’ என்ற தன்னார்வ அமைப்பை தனது நண்பர்களான புனிதா, உதய் சங்கர், விஜய் ஆனந்த், ஆதித்யா, வினோத் குமார், ஆனந்த் மோகன்ராம், ஷோமா பட்டாச்சார்ஜீ, சிந்து, வினு விஸ்வனாதன் மற்றும் ராஜகோபாலன் உடன் இணைந்து துவங்கினார். வாலண்டியர்கள் உதவியுடன் தகுதியான மாணவர்களை கண்டெடுக்கும் பணிகளை தமிழகம் எங்கும் செய்யத் தொடங்கினார்கள். சுஜித் குமார் சந்திக்கும் ஒவ்வொரு மாணவர்களின் கதைகளும் ஒவ்வொரு விதங்களில் மனதைப் பாதிப்பதாக இருக்கும் என்கிறார்.
“ஆனால் நாங்கள் மாணவ-மாணவிகளின் கல்வி ஆர்வத்தை, அவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள், பின்னணி என்று எல்லாவற்றையும், வாலண்டியர் குழுக்கள் மூலம் அந்தந்த ஊர்களில் தீர விசாரித்த பின்பே, கல்லூரிகள் இலவசமாகக் கொடுக்கும் சீட்டுகளுக்கு பரிந்துரைக்கிறோம்,” என்கிறார்.
மாற்றம் ஃபவுண்டேஷனில் 10 முழுநேர ஊழியர்கள் உள்ளனர். அதைத்தவிர 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தமிழகமெங்கும் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்தப் பணிகளை தொடங்கி 5 ஆண்டுகள் கடந்து சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி வாய்ப்பை கொடுத்து, இன்று அவர்களில் பெரும்பாலானோர் இன்ஃபோசிஸ், விப்ரோ, சிடிஎஸ் உள்ளிட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்களில் நல்ல பணியில் இருப்பதே மாற்றம் நிகழ்த்தியுள்ள மாற்றமாகும்.
“நாங்கள்; மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஒற்றைத்தாயின் பிள்ளைகள், விதவை தாயின் பிள்ளைகள், மிகவும் வறுமையில் வாடும் குடும்பச்சூழலில் உள்ள மாணவ-மாணவிகளுக்கே இலவச சீட்டு பெற்று தர முன்னுரிமை அளிப்போம்.”
கார்பரேட் பணியில் உயர் பதவி, பிரபல ஊக்கப்பேச்சாளர், கேரியர் கவுன்சிலிங் வல்லுனர் என பன்முகத்தினை கொண்டிருந்தாலும், ‘மாற்றம் ஃபவுண்டேஷன்’ மூலம், தான் செய்யும் பணிகளே தனக்கு மனநிறைவை தருவதாகவும், வாழ்க்கையின் அர்த்தத்தை புலப்படுத்தியதாகவும் அடிக்கடி சொல்கிறார் சுஜித் குமார். அவர் ஏறும் ஒவ்வொரு மேடையிலும் பங்கேற்பாளர்களைப் பார்த்து அவர் சொல்வது ஒன்று மட்டுமே.
“நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள உதவி தேவைப்படும் நபரை சந்தித்தால், அவர்களுக்கு நிதியுதவி செய்யவேண்டும் என்ற அவசியமில்லை, அவர்களின் வாழ்க்கைக்கு ஏற்றம் தேவைப்படும் வழியைக் காட்டுங்கள். அவர்களை உங்களுக்குத் தெரிந்த உரிய நபர்கள் அல்லது ‘மாற்றம்’ போன்று இயங்கும் எத்தனையோ தன்னார்வ அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுங்கள், அதுவே அவர்களின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கும்,” என்பார் சுஜித்.
ஆம் நாம் தினம் தினம் சந்திக்கும் நபர்களின் பிரச்சனையை காதுகொடுத்து கேட்டு, அவர்களுக்கு உரிய பாதையை காட்டிவிட்டாலே, பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களின் வாழ்வின் ஏற்றத்தில் பங்கு எடுக்கும் வாய்ப்பாய் அமையும்!