'பொன்னியின் செல்வன்' - சோழ தேசத்தை சுற்றிப் பார்க்க ஒரு வாய்ப்பு...
திரையுலகில ரசிகர்களிடையே பரவியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ காய்ச்சலைப் பயன்படுத்தி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அசத்தலான சுற்றுலா பேக்கேஜ் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
திரையுலகில ரசிகர்களிடையே பரவியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ காய்ச்சலைப் பயன்படுத்தி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அசத்தலான சுற்றுலா பேக்கேஜ் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரயில்வேயில் ஐஆர்சிடிசி அவ்வப்போது ஆன்மீக சுற்றுலா, தென்னிந்திய சுற்றுலா, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி போன்ற பல்வேறு சுற்றுலா திட்டங்களை அறிவித்து வருகின்றன. தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழக மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ள சூப்பரான ஒரு டூர் பேக்கேஜ் பற்றி அறிந்து கொள்ளலாம்.
பொன்னியின் செல்வன் திரைப்படம்:
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் தயாராகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன் - PS-1' மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான இது, செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகிறது.
விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர் சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் மற்றும் ஆர் பார்த்திபன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டை ஆண்ட சோழர்கள் குறித்த கதையை அடிப்படையாக கொண்டு பொன்னியின் செல்வன் நாவல் அமைந்திருக்கும். தஞ்சாவூர், திருச்சி, திருவரங்கம், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, கும்பகோணம், ஆலங்குடி, திருவாரூர், மன்னார்குடி, கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம், சீர்காழி, பட்டீஸ்வரம், திருக்கருக்காவூர், தேரழந்தூர், திருவிடைமருதூர் ஆகியவை சோழர்கள் ஆட்சி செய்த பகுதிகளாகக் கருதப்படுகிறது.
தற்போது மக்கள் பொன்னியின் செல்வன் படத்தைக் காண ஆவலுடன் இருப்பதால், சோழர்களின் வரலாறு மற்றும் அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளனர். இதனை பயன்படுத்திக் கொண்ட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பொன்னியின் செல்வன் கதையில் வரும் இடங்களுக்கு மக்களை சுற்றுலா அழைத்துச் செல்வதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் சுற்றுலா:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC), மணிரத்னத்தின் பிரம்மாண்டமான படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு முன்னதாக, ‘பொன்னியின் செல்வன் ட்ரெயில்’ (Ponniyin Selvan Trail) என்ற 3 நாள் டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. சோழர்களின் தேசத்தில் பொன்னியின் செல்வன் நிகழ்வுகள் நடந்த இடங்களை ஆராய்வதே இந்தச் சுற்றுலாவின் நோக்கமாகும்.
முதல் நாள் சுற்றுலாவில் வீராணம் ஏரி, மேல்கடம்பூர், கொள்ளிடம் ஆறு, பழுவூர் மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளை சுற்றிப்பார்க்கலாம். இரண்டாம் நாள் கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூருக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். மூன்றாம் நாள் கொடிக்கரை மற்றும் நாகப்பட்டினம் வரையிலான இடங்களை சுற்றிப்பார்க்க முடியும்.
சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் கூறுகையில்,
“பொன்னியின் செல்வன் ட்ரெயில் நாவலில் வரக்கூடிய முக்கிய இடங்களை மக்கள் கண்டு களிப்பதற்காக சுற்றுலாவாக ஏற்பாடு செய்துள்ளோம். ஒவ்வொரு இடத்தின் வரலாறு மற்றும் சிறப்பம்சம் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கப்படும். பூம்புகார் மறுகட்டமைப்பு பணிகள் விரைவில் அறிவிக்கப்படும். மிகப்பெரிய அளவில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.
ஒரு நபருக்கு ₹11,000 பேக்கேஜ் விலையில் செப்டம்பர் 15 அன்று சென்னையில் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. ஒவ்வொரு இடத்தின் வரலாறு மற்றும் சிறம்புகளை சுற்றுலா பயணிகளுக்கு கைடு மூலமாக எடுத்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.