இலங்கைத் தமிழ் குழந்தைகள் நலனுக்காக பூங்கோதை - திவ்யா சத்யராஜின் முன்முயற்சி!
ஊட்டச்சத்து தேவைப்படும் இலங்கைத் தமிழ் குழந்தைகளின் நலனுக்காக, இயற்கை உணவும் சுயசார்பும் சார்ந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் இருவரின் உன்னத முயற்சி.
பல ஆண்டுகள் இந்திய அகதிகள் முகாமில் வசித்த நிலையில், சொந்த நாடான இலங்கைக்குத் திரும்பியவர்களும், நெடுந்தீவு போரில் கணவரை இழந்தப் பெண்களும் கடந்த ஆண்டு சுயசார்புக்கான முதல் விதையை விதைத்ததுடன், தங்கள் குழந்தைகளும் அந்த வழியைப் பின்பற்ற வழிவகுத்துள்ளனர்.
இலங்கையில் வடகிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள நெடுந்தீவு என்பது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த 2022-ம் ஆண்டு 23 லட்சம் குழந்தைகள் மனிதநேய உதவி தேவைப்படும் நிலையில் இருந்ததாக ஐ.நா தெரிவித்திருந்தது. இவர்களில் 53,000 குழந்தைகள் ஊட்டச்சத்து இன்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். 70 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவை குறைத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில்தான், நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த மண்டல அதிகாரியான வசந்தகுமார், இலங்கையின் செரெண்டிப் நிறுவனர் பூங்கோதை சந்திரசேகரை மழலையர்களுக்கான உணவு உதவி கோரி தொடர்பு கொண்டார்.
“அரசு திவாலாகிவிட்டது. உணவுப் பொருட்களை மட்டும் அனுப்புவது, மீண்டு வர பல ஆண்டுகள் ஆகக் கூடிய பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அது நீடித்த தீர்வாகாது” என்று இலங்கையின் மறைந்த தமிழர் அரசியல் தலைவர் செல்வநாயகத்தின் பேத்தியான பூங்கோதை சொல்கிறார்.
இன்று அவரும், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து வல்லுனரான திவ்யா சத்யராஜும் (நடிகர் சத்யராஜ் மகள்) இணைந்து பசுமைப் பள்ளி - பசுமைப் புரட்சி திட்டத்தின் கீழ் ஆறு அரசு பள்ளிகளில் இயற்கைத் தோட்டங்களை அமைத்துள்ளனர்.
இயற்கை உணவும் சுயசார்பும்
“குழந்தைகளின் உணவு ஊட்டச்சத்து மிக்கதாக அமைய, அவர்கள் தங்களுக்கான உணவை தாங்களே வளர்த்துக்கொள்ள வழிகாட்டுவதுதான் சிறந்த வழி” என்கிறார் பூங்கோதை. மேலும், பரந்த நோக்கில், இது இயற்கையுடன் இணைந்து வாழ்வது மற்றும் சுயசார்பிற்கான பாடமும் என்கிறார்.
தோட்டத்தில் விளையும் உணவுப் பொருட்கள் பள்ளி சமையலறையில் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு அமைக்கப்படும் மழலையர் பள்ளி தோட்டங்கள் அம்மாக்களால் பராமரிக்கப்படுகின்றன. பள்ளி சமையலறைக்கும் பங்களிகின்றனர். 1000 சதுர அடி வரையான இந்தத் தோட்டங்களில், தக்காளி, பீன்ஸ், கீரைகள் பயிரடப்படுகின்றன.
“கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவு சாப்பிட்டால் இந்த குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்” என்கிறார் திவ்யா சத்யராஜ்.
மாணவர்கள் வழிநடத்தும் கூட்டுறவு மூலம் உபரி பொருட்களை விற்பனை செய்து, அந்தப் பணத்தை தோட்ட பராமரிப்புக்கு பயன்படுத்துவதும் திட்டம்.
நெருக்கடியால் குழந்தைகள் பாதிப்பு
கிராமப்புற இந்தியாவில் திவ்யா மேற்கொண்ட ஆய்வுகள், 10 முதல் 13 வயதான பிள்ளைகள் வைட்டமின் சி குறைபாடு கொண்டிருப்பதை உணர்த்துகின்றன. “நமக்கு ஜலதோஷம் ஏற்பட்டால் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று வாரம் இருக்கும். ஆனால், இந்தப் பகுதியில் உள்ள சில குழந்தைகள் ஓராண்டாக தொடர்ந்து இருமல், ஜலதோஷத்தால் அவதிப்படுகின்றனர்” என்கிறார் திவ்யா.
நினைவு தெரிந்த நாள் முதல் தனக்கு இருமல் இருப்பதாகக் கூறிய பத்து வயது சிறுவன் பற்றி அவர் குறிப்பிடும்போது, “முக்கிய வைட்டமின்கள் இல்லாமல் குழந்தைகள் வளரும்போது, தொற்று, ஜலதோஷம், காய்ச்சல், களைப்பு, இரும்புச்சத்து குறைபாடு, அனிமீயா உள்ளிட்டவற்றுக்கு உள்ளாகின்றனர். வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
நான்கு வயது குழந்தைகள் போல இருக்கும் பத்து வயது குழந்தைகளை பார்த்திருக்கிறேன். இலங்கையில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் அனீமியா, வைட்டமின் சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், பெற்றோர் அல்லது பள்ளி இரண்டு தரப்பினராலும், நெருக்கடிக்கு மத்தியில் அவர்களுக்கு சமச்சீர் உணவு அளிக்க முடியவில்லை” என்கிறார் திவ்யா.
அரசின் உறுதுணையும் அடுத்தக்கட்டமும்
இலங்கை வடகிழக்கு மாகாண விவசாயம் மற்றும் கல்வித் துறை, இந்த முயற்சியில் பூங்கோதைக்கும் திவ்யாவுக்கும் உதவி வருகிறது. இதன் மூலம் 15 பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைத்துள்ளனர். பள்ளிப் பகுதிகளில் உள்ள அரசு விவசாய அதிகாரிகள் மண் வளம், அங்கு வளரக்கூடிய காய்கறிகள் குறித்து ஆலோசனை அளித்துள்ளனர். மாணவர்களுக்கு வாரந்திர ஆர்கானிக் விவசாயம் பயிற்சியும் அளிக்கின்றனர்.
இனிவரும் காலங்களில் திவ்யாவும் பூங்கோதையும் பசுமைப் பள்ளி - பசுமைப் புரட்சி திட்டத்தை விரிவாக்கும் வகையில் பலவிதமான நிதி திரட்டல் நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டுள்ளனர். இணைய நிதி திரட்டல், சென்னையில் இசை நிகழ்ச்சி, இலங்கை தமிழ்ப் பெண்கள் உருவாக்கிய பசுமைப் பொருட்கள் கண்காட்சி ஆகியவை இதில் அடங்கும்.
“இலங்கையில் ஒரு மருத்துவ அதிகாரி, பொது சுகாதார அதிகாரி கீழ் 30 பள்ளிகள் வருகின்றன. குழந்தைகள் தொடர்பான மருத்துவத் தரவுகளை இவர்களிடம் பெற உள்ளோம். இதன் மூலம் விரிவான அலசலை மேற்கொண்டு, ஊட்டச்சத்து குறைபாடுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப காய்கறிகளை வளர்ப்போம்” என்கிறார் திவ்யா.
மேலும், “இந்தத் தேவைகளை புரிந்துகொள்ளும் வகையில் விவசாய பயிற்றுநர்களுக்கு பயிலரங்குகளும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் அவர்கள் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பு கிடைக்கும்” என்கிறார் அவ.
- சரண்யா சக்ரபாணி
Edited by Induja Raghunathan