யூடியூப் லைவ் திருமணம்; ரிட்டர்ன் கிஃப்ட் ஆக ஓடிடி மெம்பர்ஷிப்; 'நியூநார்மல்’ திருமணங்கள்!

விருந்தினர்களுக்கு தடுப்பூசி, யூ டியூப் ப்ரீமியம், ஓடிடி மெம்பர்ஷிப்... நியூ நார்மல் திருமணங்கள் எவ்வாறு நடக்கின்றன?
4 CLAPS
0

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதைக் காட்டிலும், லாக்டவுன் நாட்களிலே அதிகம் நிச்சயிக்கப்பட்டன. ஆனால் என்ன, திருமணத் தேதி தான் இப்பவோ, அப்பவோ, எப்பவோ என கோவிட்டின் முதல் அலையின்போது தள்ளிப் போய்க் கொண்டே போனது. பொறுத்து பொறுத்து பார்த்த மணமக்களும், அவர்களது குடும்பதாரும் திருமணத்தை நடத்தி முடிக்க ரூம் போட்டு யோசித்து 'பிபிஇ உடையில் திருமணம்', 'மாநிலப் பார்டரில் திருமணம்', 'நடுவானில் விமானத்தில் திருமணம்' என வித்தியாசத்தின் உச்சத்தில் நடத்தி முடித்தனர்.

பின், 'அதுவே பழகிரும்' என்பது போல், கொரனோவுடன் வாழப்பழகி வரும் மக்கள் நியூ நார்மல் திருமணங்களில் பின்பற்ற வேண்டியவற்றை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதில் வேகமாக பரவிவரும் பழக்கம் திருமணத்தினை லைவ்வில் கண்டு ரசிப்பது.

கொ.மு காலத்திலே சுற்றாத்தாரை பிரிந்து அயல்நாடுகளில் வசிப்போர் யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களின் லைவ் ஆப்ஷன் வழியே திருமணத்தில் பங்கேற்று வந்ததால், இப்பழக்கம் லாக்டவுன் திருமணங்களில் பிரபலமான ஒன்றாகியது. ஆனால், யூடியூப் லைவ்வில் வீடியோவை காணுகையில், அடிக்கடி விளம்பரங்கள் ஒளிப்பரப்பாகி கடுப்பை அளிக்கும். அந்த சிரமத்தை நீக்க எண்ணிய ஒருவர் திருமணத்தை விருந்தினர்கள் இடையூறு இல்லாமல் பார்ப்பதற்காக யூடியூப் ப்ரீமியம் பாஸ்வேர்ட் வழங்கியுள்ளார்.

Representative image. (iStock photo)

நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவிலிருந்தும் உறவினரது திருமணத்தில் ஒரு அங்கமாய் இருக்கும் உணர்வை ஏற்படுத்தி, திருமணத்திற்கு வரமுடியாதவர்களையும் முழு திருமணத்தையும் காண வழிச்செய்கிறது லைவ் ஒளிப்பரப்பு. தற்போதைய சூழலில் இதைவிட சிறந்த வழியும் இல்லை தான்.

"என்னுடைய திருமணம் யூடியூப்பில் ஒளிப்பரப்பி, யூடியூப் ப்ரீமியத்தின் பாஸ்வேர்ட் பயன்படுத்தி விருந்தினர்கள் இடையூறு இன்றி பார்க்க வழிவகை செய்யப்படும். தொற்றுநோய் இல்லையெனில் விருந்தினர்கள் திருமணத்தில் கலந்து கொள்வார்கள்," என்று திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மணமகன் சாய் குமார் கூறினார்.

திருமணம் என்பது இருமனம் கூடும் நிகழ்வாக மட்டுமே இங்கு நின்றிடுவதில்லை. மேக்கப், மேட்ரிமோனியல் இணையதளங்கள், மேளதாளங்கள், மலர் அலங்காரம், பத்திரிக்கை, போட்டோ மற்றும் வீடியோ, கேட்டரிங் சர்வீஸ், ஆடை மற்றும் நகைகள் என ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மிகப்பெரிய துறையாகவும் விளங்குகிறது.

ஆனால், கொரோனா சூழலில் பல தொழில்கள் சரிவடைந்தது போலவே, திருமணம் சார்ந்தத் தொழில்களுக்கும் பெரும் பாதிப்புக்குள்ளாகியது. அந்த சமயங்களிலும் சூழலுக்கு ஏற்றாற் போன்று தங்களை அப்கிரேட் செய்து கொண்டு, நியூ நார்மல் திருமணங்களை திறம்பட நடத்தி முடித்து வைத்தன வெட்டிங் பிளானர்ஸ் நிறுவனங்கள்.

நாடு முழுவதும் கொரோனாவின் 2ம் அலையின் வேகம் குறைந்து வருவதால், லாக்டவுனில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. திருமண நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளும் சூடுபடுத்தப்பட்டுவரும் நிலையில், தெலுங்கானா 3 லட்சம் திருமணங்களுக்காக தயாராகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 10-12 லட்சம் திருமணங்கள் தெலுங்கானாவிலும், ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நடைபெறுகின்றன.

"கட்டுப்பாடுகள் காரணமாக திருமணத்தில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு வழங்க புதுமையான பரிசுகளை மக்கள் விரும்புவதால், தனித்துவமான ரிட்டர்ன் கிஃப்ட்களுக்கு டிமான்ட் ஆகியுள்ளது. பல குடும்பத்தாரும் அவர்களது விருந்தினர்களுக்கு ஓடிடி மெம்பர்ஷிப்பை ரிட்டர்ன் கிஃப்ட்டாக வழங்கத் தொடங்கியுள்ளனர்.

கோவிட் -19ன் முதல் அலையின் போதே இந்த முயற்சித் பரவிவிட்டது. இப்போது, இந்த ஐடியா பிக்-அப் ஆகியுள்ளது, என்றார் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் உரிமையாளரும் வெட்டிங் பிளானருமான அசோக் பட்நாயக்.

இதுபோன்ற தனித்துவமான யோசனைகள் சமூகவலைதளங்களிலும் வைரலாக்கப்பட்டு ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், இவை வெறும் கவன ஈர்ப்புக்காக மட்டுமே என்று எண்ணிட இயலாது. பல பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டனர். அது பற்றி சிக்காட்பள்ளியைச் சேர்ந்த கே.வி.ஆர் சர்மா கூறுகையில்,

"திருமணச்சடங்குகளை மேற்கொள்ள என் உதவியை நாடும் சில குடும்பங்கள் திருமணத்திற்கு முன்னர் தடுப்பூசி போடுமாறு என்னிடம் கேட்டு கொண்டனர். சிலர் தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள். மக்கள் முகமாஸ்க் அணிந்து கொள்கின்றனர். அதே நேரத்தில் திருமணங்களின் போது விருந்தினர்களின் உடல்வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. சானிடைசர் வழங்குகின்றனர்,” என்றார்.

ஐதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸில் உள்ள ஒரு குடும்பம் திருமணம் நடைபெறுவதற்கு முன்பு அவர்களது முழு விருந்தினர்களையும் தடுப்பூசி போட வைத்துள்ளது.

"முதலில், எங்கள் பாதிரியாரை தடுப்பூசி போடச் சொன்னோம். அடுத்து, எங்கள் விருந்தினர் பட்டியலில் உள்ளவர்களை தடுப்பூசி போட வைத்தோம். எங்களது வெட்டிங் பிளானரிடம் இது பற்றிகூறினோம். அவரும் உதவியதில் அனைத்து விருந்தினர்களையும் தடுப்பூசி போட வைக்க முடிந்தது,"

என்று கூறினார் சில நாட்களுக்கு முன்பு தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்த சந்திரசேகர் ரெட்டி.

தகவல் உதவி : தி டைம்ஸ் ஆப் இந்தியா | தொகுப்பு: ஜெயஸ்ரீ

Latest

Updates from around the world