இனி 'தமிழ் தலைவாஸ்’ கபடி அணி எடுக்கும் தீர்மானங்களில் நீங்களும் பங்களிக்கலாம் - எப்படினு படிங்க!
விளையாட்டு ரசிகர்கள் தொடர்பில் இருக்க உதவும் Sportzchain தளம் கிரிப்டோ டோக்கன்கள் மூலம் ரசிகர்கள் வாக்களிக்கவும் வெகுமதி பெறவும் உதவுகிறது.
உங்களுக்கு கபடி பிடிக்குமா? உங்களுக்கு பிடித்த அணி விளையாடும்போது அணியில் இருப்பவர்களை உற்சாகப்படுத்துகிறீர்களா? இனி அத்துடன் நிறுத்துக் கொள்ளவேண்டாம். உங்களுக்குப் பிடித்த அணியில் எடுக்கப்படும் தீர்மானங்களில் உங்களால் பங்களிக்கமுடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், உண்மைதான்.
உங்கள் பங்களிப்பை சாத்தியமாக்குகிறது . கபடி ரசிகர்கள் ஒன்றாக இணைந்துகொள்ள ஒரு தளத்தை இந்நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்த ஸ்டார்ட் அப் சமீபத்தில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. தபாங் டெல்லி கபடி அணி ரசிகர்கள் அந்த அணியின் ட்ரெயினிங் கிட் ஜெர்சி வடிவமைப்பை தேர்வு செய்வதற்காக இந்த வாய்ப்பளிப்பு நடத்தப்பட்டது.

ட்விட்டரில் நடத்தப்படும் வாக்கெடுப்பிற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? ட்விட்டரில் நடத்தப்படும் வாக்கெடுப்பு எந்த வகையிலும் அணியின் தீர்மானத்தை பாதிக்காது.
Sportzchain வெப் ஆப்’பில் கபடி ரசிகர்கள் டோக்கன்களுடன் (கிரிப்டோ சொத்துக்கள்) வாக்கெடுப்பில் பங்கேற்கலாம். இந்த வாக்கெடுப்பு முடிவுகள் அணியின் குறிப்பிட்ட தீர்மானங்களில் பங்களிக்கும் என்கிறார் Sportzchain இணை நிறுவனர் சித்தார்த் ஜெய்ஸ்வால்.
“அணியைச் சேர்ந்தவர்கள் வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்றுக் கொள்ளவேண்டும். ரசிகர்களின் பரிந்துரைகளை செயல்படுத்தவேண்டும். இதன் மூலம் நம்பகமான ரசிகர் வட்டம் உருவாகும்,” என்கிறார்.
உதாரணத்திற்கு பெரும்பாலான ரசிகர்கள் வாக்கெடுப்பில் தேர்வு செய்த ட்ரெயினிங் கிட் ஜெர்சியைத்தான் தபாங் டெல்லி வரவிருக்கும் புரோ கபடி லீக் போட்டியில் பயன்படுத்தும்.
வரும் நாட்களில் விளையாட்டு அட்டவணைகளையும் பயிற்சி நேரங்களையும் முடிவு செய்வதிலும் ரசிகர்களின் பங்களிப்பு இருக்கும் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.
இருவழி தகவல் தொடர்பு
சித்தார்த் ஜெய்ஸ்வால், வினாயக் யன்னம், சங்கர் எஸ்.கே ஆகிய மூவரும் தீவிர விளையாட்டு ரசிகர்கள். இவர்கள் மூவரும் Sportzchain ஸ்டார்ட் அப்பின் இணை நிறுவனர்கள்.
விளையாட்டில் ஆர்வமிருக்கும் ரசிகர்கள் தங்களது கருத்துகளை மட்டுமே பதிவு செய்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருவதை இவர்கள் கவனித்தார்கள். கபடி போன்ற உள்நாட்டு விளையாட்டுகளை ஆதரிக்கும் அதேசமயம் ரசிகர்கள் அணியுடன் சிறப்பாக இணைந்திருக்கும் வகையில் தொடர்பை ஏற்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
எனவே, இவர்கள் மூவரும் சேர்ந்து 2022ம் ஆண்டு Sportzchain தொடங்கினார்கள். ரசிகர்கள் தொடர்ந்து இணைந்திருந்து வருமானமும் ஈட்டும் வகையில் இந்த Web3 தளத்தை இவர்கள் அமைத்திருக்கின்றனர்.
கபடி ஆர்வம்
இந்தியாவில் கிரிக்கெட் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் மற்ற விளையாட்டுகளும் கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்திய காமன்வெல்த் போட்டிகள், செஸ் ஒலிம்பியாட், ஒலிம்பிக்ஸ் போன்றவற்றில் இந்தியா சிறப்பாக பங்களித்திருந்ததே இதற்கு அத்தாட்சி. பேட்மிட்டன், செஸ், ஹாக்கி போன்றவற்றுடன் உள்நாட்டு விளையாட்டான கபடியும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருக்கிறது.

சித்தார்த் ஜெய்ஸ்வால் - இணை நிறுவனர், Sportzchain
2014ம் ஆனின் புரோ கபடி லீக் முதல் எடிஷன் நாட்டில் அதிகளவில் பார்வையாளர்களைக் கவர்ந்தது. ஐபிஎல் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு இதற்கான ரசிகர்கள் எண்ணிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்டார்ட் அப் ப்ரோ கபடி லீக் போட்டியின் தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய நான்கு அணிகளுடன் கைகோர்த்திருக்கிறது.
”ரசிகர்களுக்கான மெம்பர்ஷிப் டோகனைசேஷன் பற்றி பேசும்போது நாங்கள் கபடி விளையாட்டு பற்றியே யோசித்தோம். ஏனெனில், ப்ரோ கபடி லீக் பார்வையாளர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்தவர்கள். கிரிப்டோ ஆடியன்ஸ் கண்ணோட்டத்தில் இது பொருத்தமாக இருக்கும் என்பதால் இப்படி முடிவு செய்தோம்,” என சித்தார்த் விவரித்தார்.
இருப்பினும் எந்த ஒரு விளையாட்டுடனும் இணையத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார். Iceland cricket team அணியுடன் இந்த ஸ்டார்ட் அப் இணைந்திருக்கிறது. மேலும், சில ஐபிஎல் அணிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தளத்தின் செயல்பாடுகள்
ரசிகர்கள் தொடர்பில் இருக்க உதவும் இந்தத் தளம் Polygon மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் இந்த ஸ்டார்ட் அப் ஆல்ஃபா அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியது. குறிப்பிட்ட பயனர்களுடன் சிறியளவில் பரிசோதனை செய்யப்படுகிறது.
Sportzchain இரண்டு வகையான வாக்கெடுப்புகளைக் கொண்டுள்ளது. ஒன்று Decision Polls. மற்றொன்று Opinion Polls. Decision Polls வகையின்படி, ரசிகர்களின் தீர்ப்புகளை அணியினர் செயல்படுத்துவார்கள். Opinion Polls பயன்படுத்தி ரசிகர்களின் மனதில் இருக்கும் கருத்துகள் புரிந்துகொள்ளப்படும். இந்த வாக்கெடுப்புகள் Ethereum மற்றும் Polygon பிளாக்செயின் தளங்களில் நடத்தப்படும். வாக்குகள் பிளாக்செயினில் சேமிக்கப்படும். இதனால் சார்புத்தன்மையும் மோசடிகளும் தவிர்க்கப்படும் என்கிறார் சித்தார்த்.
ட்ரெயினிங் ஜெர்சி மட்டுமல்லாது மற்ற விருப்பங்களைத் தெரிந்துகொள்ளவும் வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக இந்த ஸ்டார்ட் அப் தெரிவிக்கிறது. ஏலம் எடுக்கப்பட்ட பிறகு, அதைப்பற்றி விவரிக்கும் வீடியோக்கள், தக்கவைக்கப்பட்ட வீரர்கள் தமிழ் திரைப்பட வசனங்களை பேசி எடுக்கும் வீடியோக்கள், இவ்விரண்டில் தமிழ் தலைவாஸ் அணியின் ரசிகர்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்கள் என கேட்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பு முடிவுகள் விரிவாக விவரிக்கப்படும் வீடியோக்களுக்கு சாதகமாக இருந்தது.
விளையாடுபவர்கள் எப்படிப்பட்ட உத்திகளை வகுக்கிறார்கள், குழுவின் பலன் என்ன போன்றவற்றை அவர்கள் விவரிக்கும் வீடியோக்கள் ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருப்பது வாக்கெடுப்பு முடிவுகளில் தெரியவந்தது.
2023ம் ஆண்டில் ஐஸ்லாந்து நாட்டுக்கு எதிராக கிரிக்கெட் விளையாட ஸ்வீடன், நெதர்லாந்து, லித்துவானியா, போலாந்து ஆகிய அணிகளிலிருந்து தேர்வு செய்வதற்கு சமீபத்தில் Sportzchain வாக்கெடுப்பு நடத்தியது.
வருவாய் மாதிரி
Sportzchain 2022ம் ஆண்டு மார்ச் மாதம் Polygon மூலம் 10K டாலர் மதிப்புடைய கிராண்ட் பெற்றுள்ளது. மே மாதம் SUNiCON Ventures, MAKS Group ஆகியவற்றின் தலைமையில் 600,000 டாலர் சீட் நிதியை திரட்டியிருக்கிறது.
இந்நிறுவனம் வருவாய் ஈட்டுவதற்கு முந்தைய நிலையில் இருக்கிறது. பி2பி மாதிரியில் செயல்பட உள்ளது. இந்தத் தளம் லைவாக இயங்கும்போது ரசிகர்களுக்கு டோக்கன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த டோக்கன்கள் ஸ்போர்ட்ஸ் டீம்களுக்கு சொந்தமானவையாக இருக்கும். 80% வருவாய் அணிகளுக்கும் 20% வருவாய் Sportzchain நிறுவனத்திற்கும் கிடைக்கும். போட்டிகள் மூலம் வருவாய் ஈட்டவும் இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

வளர்ச்சித் திட்டங்கள்
இந்நிறுவனம் அதன் நேடிவ் ஸ்போர்ட்ஸ் டோக்கனை ($SPN) இந்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது. இவை பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் கிடைக்கும். ரசிகர்கள் Sportzchain தளத்தில் சைன் அப் செய்துகொண்டு டோக்கன்களை வாங்கிக்கொள்ளலாம்.
இதன் மூலம் டீம் பிராண்டட் மெர்சன்டைஸ்களை அணுகவும், பல்வேறு நடவடிக்கைகளில் பங்களிக்கவும் ரிவார்ட் பெறவும் முடியும். டோக்கன்களின் மதிப்பு அதிகரிக்கும் என்பதால் அவற்றை வர்த்தகம் செய்யலாம் என்று இந்நிறுவனம் தெரிவிக்கிறது. Sportzchain தளம் அல்லது எந்த ஒரு பிளாக்செயின் சார்ந்த சிஸ்டத்திலும் இவற்றை பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.
“இதில் கிடைக்கும் வெகுமதிகள் ரசிகர்களை அணியுடன் சிறப்பாக இணைப்பதுடன் பெருமை உணர்வையும் வழங்குகிறது,” என்கிறார் சித்தார்த்.
Sportzchain தளம் தற்போது அதன் ஆல்ஃபா அப்ளிகேஷனுக்கு பயனர்களிடமிருந்து 1,200 சைன் அப்களைப் பெற்றுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இதை 10,000-ஆக அதிகரிக்கச் செய்வதை இலக்காகக் கொண்டிருக்கிறது. கேம்ஸ் மூலம் பயனர்கள் வெகுமதி பெறும் வகையில் ஏற்பாடு செய்யவும் இந்த ஸ்டார்ட் அப் திட்டமிட்டிருக்கிறது.
ஆங்கில கட்டுரையாளர்: பிரதிக்ஷா | தமிழில்: ஸ்ரீவித்யா

