வேலை நேரத்தில் தூங்குவதற்கு சம்பளம்; Right to nap அறிமுகப்படுத்திய பெங்களூரு நிறுவனம்!
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்கள் அலுவலகத்தில் 30 நிமிடம் வரை உறங்கிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்கள் அலுவலகத்தில் 30 நிமிடம் வரை உறங்கிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
‘உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’ என்ற பழமொழிக்கு ஏற்றார் போல், மதியம் சாப்பிட்டு முடித்த உடனே அப்படியே கண்ண கட்டும் பாருங்க. ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் என எங்க இருந்தாலும் இந்த மதிய தூக்கத்தை மட்டும் கட்டுப்படுத்த முடியாது. குறிப்பாக அலுவலகங்களில் சொல்லவே வேண்டாம். லைட்டா கண்ண மூடினாலே போதும், ’இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் வடிவேல் சொல்வது போல் ‘வேலை நேரத்தில் உறக்கமா உனக்கு’ என சிடுசிடுக்கும் நிறுவனங்களை தான் பார்த்திருப்போம். ஆனால், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Wakefit தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் right to nap என அறிவித்துள்ளது.
அது என்ன ‘right to nap’?
இணை நிறுவனர் சைதன்யா ராமலிங்க கெளவுடா அதன் ஊழியர்களுக்கு 30 நிமிட அதிகாரப்பூர்வ தூக்க நேரத்தை அறிவித்துள்ளார். இதுகுறித்து ராமலிங்ககெளவுடா தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் ‘right to nap’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.
வேக்ஃபிட் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில்,
“நாங்கள் தூக்கம் தொடர்பான தொழிலில் கடந்த ஆறு வருடங்களாக ஈடுபட்டு வருகிறோம், தற்போது ஒரு முக்கியமான ஓய்வு அம்சமான பிற்பகல் தூக்கத்திற்கு நியாயம் செய்யத் தவறிவிட்டோம். நாங்கள் எப்போதும் தூக்கத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால், இன்று முதல், தூக்கத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துச் செல்ல உள்ளோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது ட்விட்டர் அறிவிப்பில் நாசா மற்றும் ஹார்வர்ட் ஆய்வுகளை குறிப்பிட்டுள்ள ராமலிங்ககெளவுடா அந்த ஆய்வு முடிவுகளின் படி, 26 நிமிட உறக்கம் ஊழியர்களின் செயல்திறனை 33 சதவீதம் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
"வேலையில் பிற்பகல் தூக்கத்தை இயல்பாக்கவும், மதியம் 2 முதல் 2:30 மணி வரை எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் உத்தியோகப்பூர்வ தூக்க நேரமாக அறிவிக்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இனி, மதியம் 2 மணி முதல் 2:30 மணி வரை உறங்குவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு," என்று மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை:
Right to nap திட்டத்தை அறிவித்ததோடு, வேக்ஃபிட் நிறுவனம் தனது அலுவலக ஊழியர்கள் 30 நிமிட நன்றாக உறங்கத் தேவையான வசதியான, அமைதியான அறைகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
Wakefit-ன் நிறுவனத்தின் தலைவரான பிரதீப் மல்பானி, இது உண்மையானது. என்ன நடந்ததோ அதனைத் தான் சொல்கிறேன். நாங்கள் அதிகாரப்பூர்வ உத்தியோகப்பூர்வ தூக்க நேரத்தினை அறிவித்துள்ளோம். வேலை நேரத்தில் தூங்குவதற்கும் எனக்கு சம்பளம் கிடைக்கும் என நான் பெருமையுடன் கூறுவேன்,” எனக்கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இந்த நிறுவனம் ஒரு இன்டர்ன்ஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதில் தனது வேக்ஃபிட் மெத்தைகளை பரிசோதிப்பதற்காக பங்கேற்பாளர்கள் 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 9 மணி நேரம் தூங்க வேண்டும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.