பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க பயிற்சியளிக்கும் நிறுவனம்!
அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளைக் கொண்டு சோலார் விளக்குகள், டார்ச்கள் போன்றவற்றை உருவாக்கக் கற்றுக்கொடுப்பதுடன் நகர்புற மற்றும் கிராமப்புற சமூகத்தினரிடையே சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது ’டீச் ஃபார் க்ரீன்’ நிறுவனம்.
உலகம் முழுவதும் வளர்ச்சி என்கிற பெயரில் பசுமைப் போர்வை குறைந்து வருகிறது. இது நமது சுற்றுச்சூழலை பாதிப்பதுடன் தனிப்பட்ட அளவிலும் நம்மை பாதித்துள்ளது. மரம் நடும் முயற்சிகள் மூலம் அரசாங்கம் பசுமைப் போர்வையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் தனிநபரும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்களிக்கவேண்டியது அவசியமாகிறது.
சில அரசு சாரா நிறுவனங்களும் தனிநபர்களும் அதிகளவில் மரங்களை நட்டும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் ’டீச் ஃபார் க்ரீன்’ (Teach For Green) என்கிற லாப நோக்கமற்ற நிறுவனம். இந்நிறுவனம் பசுமை ஆற்றல், கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு போன்ற சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடைமுறைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
’டீச் ஃபார் க்ரீன்’ 2016-ம் ஆண்டு அஜய் குமார், அபிஷேக் சன்சல், பிரதீபா பவேஜா ஆகிய மூன்று நண்பர்களால் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் டெல்லியில் பத்து அரசுப் பள்ளிகளிலும் உத்தர்காண்ட் பகுதியில் உள்ள 30 அரசுப்பள்ளிகளிலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு 45 பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பட்டறைகளில் கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்தும் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பேப்பர் மற்றும் துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்தும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது.
மேலும் மாணவர்களை தங்களது வீட்டில் இருந்து பயன்படுத்தப்பட்ட ப்ளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இதர அப்புறப்படுத்தப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை எடுத்து வருமாறு இந்நிறுவனம் அறிவுறுத்தியது. இந்தப் பொருட்கள் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு தோட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களாகவும் பேனா ஸ்டாண்ட் மற்றும் வீட்டு அலங்காரப்பொருட்களாகவும் மாற்றப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு மாணவரின் வீட்டிலும் உள்ள ப்ளாஸ்டிக் பயன்பாடு குறைந்தது. ஒவ்வொரு வீட்டிலும் 450 கிராம் வரை உருவான ப்ளாஸ்டிக் கழிவுகளின் அளவு 220 கிராமாக குறைந்தது என நிறுவனத்தின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்நிறுவனத்தின் பட்டறையில் கலந்துகொண்ட 1,200 மாணவர்களின் வீட்டிலும் பட்டறையின் மூலம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் தாக்கம் தென்பட்டது.
மாணவர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளுக்கு மாற ஊக்குவித்ததுடன் இந்நிறுவனம் உத்தர்காண்டின் சம்பாவத் மாவட்டத்தில் ஊட்டச்சத்து பிரிவிலும் செயல்பட்டது. இந்தப் பகுதியில் ஃப்ரெஷ்ஷான காய்கறிகளும் கூடுதல் உணவு வகைகளும் கிடைக்காத காரணத்தால் இங்குள்ள குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தது.
இங்குள்ள அரசுப்பள்ளிகளில் தங்களது பட்டறையின் ஒரு பகுதியாக சமையலறை தோட்டம் உருவாக்கியது. இந்நிறுவனம் இதுவரை 400 சமையலறை தோட்டங்களை உருவாக்கியுள்ளது. குழந்தைகள் 50-க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் போட்டிகளில் பங்கேற்கவும் வெற்றி பெறவும் இந்நிறுவனம் உதவியுள்ளது.
’தி லாஜிக்கல் இண்டியன்’ உடனான உரையாடலில் பள்ளிக் குழந்தைகளுக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சி குறித்து அஜய் விவரிக்கையில்,
”எங்களது ’க்ரீன் ஸ்கூல் க்ரீன் கம்யூனிட்டி’ திட்டம் 35-40 வார திட்டமாகும். இதில் டிஐஒய் அணுகுமுறை மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சுற்றுச்சூழல் மாட்யூல்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது,” என்றார்.
மாணவர்களுக்கு ப்ளாஸ்டிக் பாட்டில், கார்ட்போர்ட் போன்ற அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களைக் கொண்டு சோலார் விளக்குகள், டார்ச் போன்றவற்றை தயாரிக்க கற்றுக்கொடுக்கப்படுகிறது என ’யூத் கீ ஆவாஜ்’ குறிப்பிடுகிறது.
தங்களது சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடையே சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தனித்துவமான தீர்வுகளை உருவாக்க அவர்களை இந்நிறுவனத்தின் மூலம் ஊக்குவிப்பதே அஜயின் நோக்கமாகும். எனவே குழந்தைகள் கற்றுக்கொள்வதுடன் நடைமுறை சிக்கல்களை தீர்ப்பதற்கான தீர்வுகளையும் கண்டறிவார்கள்.
கட்டுரை : THINK CHANGE INDIA