பேரிடர் மேலாண்மை குறித்து ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் உரையாற்ற உள்ள 7 வயது மணிப்பூர் சிறுமி!
இரண்டாம் வகுப்பு மாணவியான லிஸிப்ரியா இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வழிமுறைகள் குறித்து ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உரையாற்ற உள்ளார்.
மணிப்பூரைச் சேர்ந்த ஏழு வயது லிஸிப்ரியா கங்சுஜம் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பேரிடர் ஆபத்து குறைப்பிற்கான உலக தளம் 2019-ன் ஆறாவது பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். இதில் 140 நாடுகளைச் சேர்ந்த 3,000 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இவர்களுடன் லிஸிப்ரியா APAC பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் பிரதிநியாக உரையாற்ற உள்ளார். இந்தப் பொதுக்கூட்டத்தில் இயற்கை பேரிடர்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வழிமுறைகள் மற்றும் திட்டமிடல் குறித்து இவர் உரையாற்றுவார்.
பேரிடர் ஆபத்து குறைப்பிற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஸ்விட்சர்லாந்து அரசாங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யும் இந்தப் பொதுக்கூட்டம் மே மாதம் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக NewsD தெரிவிக்கிறது.
இரண்டாம் வகுப்பு மாணவியான லிஸிப்ரியா தற்போது சர்வதேச இளைஞர் குழுவில் (IYC) பேரிடர் ஆபத்து குறைப்பை ஆதரிக்கும் சிறுமியாக பணியாற்றுகிறார். பேரிடர் மேலாண்மை பிரச்சனை குறித்து அவர் கூறும்போது,
“நிலநடுக்கம், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர்களால் மக்கள் உயிரிழப்பதையும் பாதிக்கப்படுவதையும் தொலைக்காட்சியில் பார்த்து வேதனையடைந்தேன். குழந்தைகள் பெற்றோரை இழந்து நிற்பதையும் பேரிடர் காரணமாக மக்கள் வீடின்றி தவிப்பதையும் பார்க்கும்போது மனம் கலங்கிக்போகிறது. அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையாக நம் அனைவருக்குமான சிறப்பான உலகை உருவாக்கவேண்டும் என அனைவரிடமும் வலியுறுத்துகிறேன்,” என தெரிவித்ததாக ’இண்டியன் வுமன் ப்ளாக்’ குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் அரசாங்கங்களுக்கிடையேயான நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் மற்றும் இதர சர்வதேச நிறுவனங்கள் போன்றவை இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றன. ரெட் கிராஸ் தேசிய சங்கங்கள், ரெட் க்ரெசெண்ட் நிறுவனம் போன்ற குழுக்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன.
லிசிப்ரியாவிற்கு சர்வதேச நிகழ்வு ஒன்றில் பங்கேற்க அழைப்பு வந்திருப்பது இது முதல் முறையல்ல. 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மங்கோலியாவின் உளான்பாத்தரில் நடைபெற்ற பேரிடர் ஆபத்து குறைப்பிற்கான 2018 ஆசிய மாநாட்டில் கலந்துகொள்ள லிசிப்ரியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஏழு வயதே ஆகும் லிசிப்ரியா எட்டு நாடுகளுக்குச் சென்று வெவ்வேறு நிலைகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA