மாணவர்களே தொழில்முனைவர் ஆகவேண்டுமா? - இதோ சில எளிய டிப்ஸ்!
மாணவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள துறையில் இருக்கும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி என்பதை தொழில்துறை சார்ந்த வல்லுநர் ஒருவர் பகிர்ந்துள்ள எளிய டிப்ஸ்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இன்றைய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சூழ் வணிக உலகில் நல்ல ஐடியாவை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில் முயற்சிகளுக்கு சிறப்பான வரவேற்பு கிடைப்பது உண்டு. அதிலும், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள துறையில் இருக்கும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி என்பதை தொழில்துறை சார்ந்த வல்லுநர் ஒருவர் பகிர்ந்துள்ள எளிய டிப்ஸ்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
“கனவுக்கு செயல் கொடுத்தால். அந்த சூரியனில் செடி முளைக்கும்” என மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் வைர வரிகள் பலருக்கும் பல்வேறு தருணங்களில் உத்வேகம் கொடுக்கும் வரிகள். அது வாழ்க்கை தொடங்கி தொழில் வரை அனைத்துக்கும் பொருந்தும். அது போல மாணவர்கள் தங்களது தொழில்முனைவோர் கனவை பலிக்க செய்ய உதவும் வழிகளை பார்ப்போம்.

தொழில்முனைவராக விரும்பும் மாணவர்களுக்கு எளிய டிப்ஸ்
தொழில் சார்ந்த முயற்சிகளை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். அதற்கென எந்த பவுண்டரியும் கிடையாது. என்ன அதற்கான ஆர்வம் மட்டுமே இங்கு தேவை. தொழில் ஆர்வம் கொண்டவர்கள் அது சார்ந்த புதிய நுணுக்கங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் தேடல் கொண்டவராக இருப்பார்கள்.
அதோடு, சக மாணவர்கள் மற்றும் பயிற்றுனர்களுடன் இணைந்து பயணிப்பது போன்றவை தொழில் சார்ந்த செயல்பாடுகளை தெரிந்து கொள்வதிலும், அது சார்ந்த சிந்தனையை மேம்பட செய்வதிலும் உதவும். எந்தவிதமான சூழலிலும் தங்கள் திட்டங்களை செவ்வனே செயல்படுத்தும் மைண்ட் செட் இருக்க வேண்டும். க்ரியேட்டிவிட்டி, நெகிழ்வுத்தன்மை மற்றும் தொலைநோக்குப் பார்வை என இந்த மூன்றும் தொழில்முனைவோருக்கான அடிப்படை விதிகள்.
1. தங்களைச் சுற்றி உள்ள ரிசோர்ஸ்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்:
பல்கலைக்கழக அளவில் பயிலும் மாணவர்கள் அங்கு கிடைக்கும் ரிசோர்ஸ்களை பயன்படுத்தி தங்கள் தொழில் ஐடியாவை மேம்படுத்தவும், வழிகாட்டுதல்களையும் பெறலாம். சமயங்களில் அரசின் திட்டங்களும் இதற்கு உதவும். ATAL இன்னோவேஷன் மிஷன், தி வென்ச்சர் கேபிடல் அசிஸ்டன்ஸ் திட்டம் (VCA), ஆத்மநிர்பார் பாரத் ஆப் இன்னோவேஷன் சேலஞ்ச் மற்றும் ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சி போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.
2. கனெக்ஷனை உருவாக்குவது அவசியம்:
தொழில் சார்ந்த சிந்தனைகள் கொண்ட சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் இணைந்து செயல்படுவது மிகவும் அவசியம். அந்த புதிய வாய்ப்புகள் பயிற்சியாகவோ அல்லது ஆய்வு சார்ந்த பணியாகக் கூட இருக்கலாம்.
3. தெளிவான ஐடியா இருக்க வேண்டும்:
தொழில்முனைவோராக விரும்பும் மாணவர்கள் தங்கள் இலக்குகளை நிர்ணயித்து, அதனை அடைவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டும் எதிர்கால தொழில் குறித்த திட்டங்களை முன்னெடுப்பது சிறந்த வழியாக இருக்கும்.
4. வழிகாட்டுதல் இருப்பது சிறப்பு:
அனைத்து தொழிலும் சவாலானது. அதுவும் புதிதாக அந்த முயற்சிகளை மேற்கொள்வது கூடுதல் சவால் நிறைந்தது. அதனால், அனுபவமிக்க வல்லுநர்களின் வழிகாட்டுதல் இருப்பது சிறப்பானதாக இருக்கும். அது ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களாக கூட இருக்கலாம்.

5. க்ரியேட்டிவிட்டி முக்கியம்:
தொழில் முயற்சிகளில் வித்தியசமாக செயல்பட வேண்டி உள்ளது. அது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள புராடெக்ட் மற்றும் சேவைகளை மேம்படுத்துவது, மாற்று முறை வணிக மாடலை கடைபிடிப்பது போன்றவையாக இருக்கலாம்.
6. முதலீட்டை அதிகரிக்க திட்டம் இருக்க வேண்டும்:
வெவ்வேறு சோர்ஸ்களில் இருந்து முதலீட்டை அதிகரிக்க முடியும். அதனால் முன்கூட்டியே திட்டமிட்டு முதலீட்டாளர்களை அணுகலாம்.
7. பிராண்டிங்:
கேஜிஎப் படத்தில் சிறு வயதிலேயே ராக்கி பாய் தன்னை ஒரு பிராண்டாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்து அதில் வெற்றியும் கண்டிருப்பார். அது போல தொழில்களுக்கு பிராண்டிங் மிகவும் அவசியம். இது போட்டியாளர்கள் மத்தியில் தனித்துவமாக தெரியும். நுகர்வோர் அல்லது பயனர்களுக்கு எளிதில் உங்கள் தயாரிப்பை அல்லது நிறுவனத்தை நினைவுப்படுத்தும்.
8. பதிவு செய்ய வேண்டும்:
உங்கள் தொழில் முயற்சியை அவசியம் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் உங்கள் இயக்கம் இருந்தால் டொமைன் நேம் மற்றும் அதற்கான டிரேட் மார்க் வாங்குவதும் அவசியம்.
இது மட்டுமல்லாது வலுவான கம்யூனிகேஷன் திறன், தெளிவான திட்டமிடல், சீரான வணிக சிந்தனை மற்றும் எதிர்பாராத சூழலை கையாளும் திறனும் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
புதுசா பிசினஸ் தொடங்குறீங்களா? Business Proposal எழுதுவது எப்படினு தெரிந்து கொள்ளுங்கள்!
Edited by Induja Raghunathan

