புதுசா பிசினஸ் தொடங்குறீங்களா? Business Proposal எழுதுவது எப்படினு தெரிந்து கொள்ளுங்கள்!
தொழில் தொடங்குவதில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் முதலீட்டாளர்கள், பார்ட்னர்கள் போன்றோரைக் கவரும் வகையில் சிறந்த முறையில் பிசினஸ் ப்ரொபோசல் உருவாக்குவதற்கு உதவும் குறிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் தொடங்க விரும்பும் பிசினஸ் எதுவாக இருந்தாலும் நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை வணிக முன்மொழிவு, அதாவது, Business Proposal தயார் செய்வதுதான்.
தொழில் தொடங்க முதலீட்டாளர்கள், பார்ட்னர்கள் இருவரும் மிகவும் முக்கியமானவர்கள். இவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு பிசினஸ் ப்ரொபோசல் மிகவும் முக்கியமானது.
நீங்கள் உருவாக்கும் Business Proposal-லை படித்ததும் உங்கள் நோக்கத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கவேண்டும். இந்த வணிகத்தில் நாம் இணைந்துகொண்டால் வெற்றி நடை போடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அவர்கள் உணரவேண்டும். இப்படிப்பட்ட நம்பிக்கையை மனதில் விதைக்கும் பிசினஸ் ப்ரொபோசலை நாம் கவனமாகவும் சிறப்பாகவும் உருவாக்கவேண்டாமா?
இதோ சிறந்த முறையில் பிசினஸ் ப்ரொபோசல் உருவாக்குவதற்கு எந்த மாதிரியான விஷயங்களை கருத்தில் கொள்ளவேண்டும் என்று தொகுத்திருக்கிறோம்.
நிர்வாகச் சுருக்கம் (Executive Summary)
உங்கள் பிசினஸ் பிளானின் முதல் அடி இதுதான். உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் என்று யாராவது சொன்னால் நீங்கள் உங்களை எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வீர்கள்? உங்கள் பெயர், வயது, படிப்பு, வேலை பற்றிய விவரங்களை சொல்வீர்கள் இல்லையா?
அதேபோல், உங்கள் வணிகத்தைப் பற்றி சுருக்கமாக குறிப்பிடவேண்டும். என்ன மாதிரியான தொழில் செய்கிறீர்கள்? உங்கள் நோக்கம் என்ன? எப்படிப்பட்ட தயாரிப்பு/சேவையை வழங்குகிறீர்கள்? நிதி சம்பந்தப்பட்ட தகவல்கள் போன்ற விவரங்களை சுருக்கமாக குறிப்பிடவேண்டும்.
உங்கள் வணிக திட்டத்தை யாரிடம் காட்டினாலும் அவர்கள் முதலில் படிக்கப்போவது இந்த சுருக்கமான விவரத்தைத்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, இந்த விவரம் சுருக்கமாகவும் எளிமையாகவும் இருப்பதுடன் மேற்கொண்டு உங்கள் திட்டட்தைப் பற்றி படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் இருக்கவேண்டும்.
நிறுவனம் பற்றிய விளக்கம் (Company Description)
நிறுவனம் பற்றிய உண்மையான தகவல்கள் இதில் விவரிக்கப்படவேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயர்
- நிறுவனத்தின் முகவரி
- நிறுவனத்துடன் தொடர்புடைய முக்கிய நபர், அவரது சுருக்கமான அறிமுகம், அவரது முக்கிய திறன், நிறுவனத்தில் வகிக்கும் பொறுப்புகள்
இந்த விவரங்களைத் தொடர்ந்து நிறுவனத்தைப் பற்றிய கீழ்கண்ட தகவல்கள் இதே வரிசையில் இடம்பெற்றிருப்பது சிறந்தது.
- வணிகத்தை எப்போது தொடங்க திட்டமிட்டிருக்கிறீர்கள்
- நிறுவனத்திற்கான ஆரம்பகட்ட முதலீடு என்ன? இதுவரை செய்யப்பட்ட முதலீட்டின் தொகை என்ன?
- என்ன மாதிரியான வணிகத்தை தொடங்குகிறீர்கள்? இந்த வணிகம் எந்தத் துறையின்கீழ் வரும்?
- நிறுவனத்தின் நோக்கம் என்ன?
- நிறுவனத்தின் சட்டரீதியான அமைப்புகள் என்ன?
தயாரிப்பு அல்லது சேவை பற்றிய விவரங்கள்
நிறுவனத்தின் விவரங்களிலேயே இந்த விவரங்களையும் சேர்த்துவிடலாம் என்றாலும் தயாரிப்பு அல்லது சேவைதான் ஒரு நிறுவனத்தின் மையப்புள்ளி என்பதால் தனியாக எழுதினால் கூடுதல் கவனம் பெறும்.
- நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பு/சேவை என்ன?
- உங்கள் தயாரிப்பின் முக்கியத்துவம் என்ன? சந்தை அளவு என்ன?
- உங்கள் தயாரிப்பின் பயன்பாடு என்ன?
- சந்தையில் எத்தனையோ தயாரிப்புகள் இருக்கும்போது உங்கள் தயாரிப்பை வாடிக்கையாளர்கள் எதற்காக வாங்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
- சந்தையில் இருக்கும் தயாரிப்புகளுக்கு மத்தியில் உங்கள் தயாரிப்பின் தனித்துவமான அம்சங்கள் என்னென்ன?
வணிகத்தின் இலக்கு
உங்கள் வணிகத்தின் இலக்குகள் என்னென்ன என்பதை இதில் விவரிக்கவேண்டும். எந்த மாதிரியான சந்தையையும் நுகர்வோரையும் இலக்காகக் கொண்டு செயல்பட இருக்கிறீர்கள்? எவ்வளவு சந்தை அளவைக் கைப்பற்ற திட்டமிட்டிருக்கிறீர்கள்? அடுத்த இரண்டு ஆண்டுகளில் எவ்வளவு லாபம் ஈட்ட திட்டமிட்டிருக்கிறீர்கள்? இதுபோன்ற தகவல்கள் இதில் இடம்பெற்றிருக்கவேண்டும்.
சந்தை ஆய்வு
வணிக முன்மொழிவின் முக்கியப் பகுதி இது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் முதலீட்டாளர்களும் பார்ட்னர்களும் உங்களுடன் முழு நம்பிக்கையுடன் கைகோர்த்துக்கொள்ள சந்தையைப் பற்றி நீங்கள் மேற்கொள்ளும் ஆய்வும் அதுகுறித்த உங்களது புரிதலும் மிகவும் முக்கியமானது.
இந்தப் பகுதியில் கீழ்கண்டவை விவரிக்கப்படவேண்டும்:
- நீங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் தயாரிப்பின் சந்தை அளவு எவ்வளவு பெரியது?
- உங்கள் தயாரிப்பின் மார்க்கெட் ஹிஸ்டரி என்ன? இதற்கு முன்பு என்ன மாதிரியான ரிஸ்க் இதில் இருந்துள்ளது? எந்தெந்த தயாரிப்புகளும் நிறுவனங்களும் சந்தையில் வளர்ச்சியடைந்துள்ளன? எந்தெந்த தயாரிப்புகளும் நிறுவனங்களும் சந்தையிலிருந்து வெளியேறியுள்ளன, அதற்கான காரணம் என்ன?
- நீங்கள் போட்டியாளராகக் கருதும் நிறுவனங்களின் சந்தை அளவும் பங்களிப்பும் என்ன?
- நீங்கள் இலக்காகக் கொண்டுள்ள வாடிக்கையாளர் யார் யார்? அவர்களது வாங்கும் திறன் என்ன?
- சந்தையில் தினமும் எதிர்பாராத பல்வேறு மாற்றங்கள் இருந்து வரும் சூழலில் இதுபோன்ற மாற்றங்கள், அதனால் ஏற்படும் ரிஸ்க் ஆகியவற்றை எதிர்கொள்ள எந்த அளவிற்கு தயாராக இருக்கிறீர்கள்?
- உங்கள் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் உங்கள் பலமும் பலவீனமும் என்ன?
சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைக்கான திட்டங்கள்
தயாரிப்பை விவரிப்பதுபோன்றே அதை சந்தைப்படுத்தவும் விற்பனை செய்யவும் எந்த மாதிரியான திட்டங்களை வகுத்திருக்கிறீர்கள் என்பதை இந்தப் பகுதியில் விவரிக்கவேண்டும்.
- உங்கள் தயாரிப்பை எப்படி சந்தைப்படுத்தி விற்பனை செய்வீர்கள்?
- உங்கள் திட்டமிடலும் உத்திகளும் என்ன?
- உங்கள் தயாரிப்பை எப்படி புரொமோட் செய்வீர்கள்
- உங்கள் தயாரிப்பு எப்படி வாடிக்கையாளர்களை சென்றடையும்?
- விலை நிர்ணயம் தொடர்பான உங்கள் அணுகுமுறை என்ன?
- வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களை சென்றடைய எந்த மாதிரியான தனித்துவமான உத்திகளைப் பின்பற்றுவீர்கள்?
- விற்பனை தொடர்பான திட்டமிடல் என்ன? தயாரிப்பை விற்பனை செய்ய என்ன வழிமுறைகளைப் பின்பற்ற இருக்கிறீர்கள்?
நிதி தொடர்பான தகவல்கள்
வணிக முன்மொழிவின் கடைசி பகுதி இது. கீழ்கண்ட அம்சங்கள் இதில் தொகுக்கப்படவேண்டும்.
- உங்கள் வணிகத்திற்கு எவ்வளவு கடன் எடுக்க வேண்டியிருக்கும்?
- வணிக பார்ட்னர்களின் பங்கு எவ்வளவு? அந்த பங்குகளின் மதிப்பு என்ன?
- கடனை எப்படி திரும்ப செலுத்துவீர்கள்?
- வணிக பார்ட்னர்களுக்கு வணிகத்திலிருந்து எவ்வளவு லாபம் கிடைக்கும்?
- வருவாய்க்கான ஆதாரம் என்ன?
பிற்சேர்க்கை (Appendix)
மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைத் தவிர வேறு ஏதேனும் முக்கிய தகவல்களை நீங்கள் சேர்க்க விரும்பினால் இறுதியாக இந்தப் பிரிவில் இணைத்துக்கொள்ளலாம்.
தமிழில்: ஸ்ரீவித்யா