உலகை விட்டுப் பிரிந்த ‘சிம்டாங்காரன்’ - பம்பா பாக்யாவின் இசைப் பயணம்!
தமிழில் ரஜினி, விஜய், விக்ரம், கார்த்தி என முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்கள் பாடி, ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாடகர் பம்பா பாக்யா உடல்நலக் குறைவால் திடீரென உயிரிழந்திருப்பது இசை ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் குறைந்த அளவிலான பாடல்களை மட்டுமே பாடியிருந்தாலும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பாடகர் பம்பா பாக்யா. தமிழில் அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தவை.
49 வயதான பம்பா பாக்யா, ஆரம்பத்தில் வெறும் பாக்யா என்ற பெயருடன் மட்டுமே கச்சேரிகளில் பாடி வந்தார். பம்பா என்கின்ற ஆப்பிரிக்க பாடகரைப் போல் பாடுவதால், பாக்யாவின் பெயரின் முன்பு 'பம்பா' என்றப் பெயரை இணைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அதோடு, ஒரிஜினல் பாடகர் பம்பாவைப் போன்றே, பம்பா பாக்யாவும் உடை அணிய வேண்டும் என்றும் அவர் அன்புக் கட்டளை விடுத்திருந்தார்.
தனித்துவமான குரல் வளத்துடன் மனதை வருடும் வகையில் இருந்ததால் பம்பா பாக்யாவின் குரல் தமிழ் ரசிகர்களுக்கு டக்கென பிடித்துப் போனது. எனவே சினிமா வாய்ப்புகள் அவரைத் தேடி வரத் தொடங்கின.

காலத்தால் அழியாத கானங்கள்
அப்படியாக, பாக்யா தமிழில் பாடிய முதல் பாடல், 2010ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்த ராவணன் படத்தில் இடம் பெற்ற, ‘கிடா கிடா கறி அடுப்புல கிடக்கு' என்பது ஆகும். இப்பாடலை பென்னி தயால் உடன் இணைந்து பாடி இருந்தார் பம்பா பாக்யா. இப்பாடல் ஹிட் ஆனபோதும், உடனடியாக அவருக்கு அடுத்த பாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
8 ஆண்டுகள் பட வாய்ப்பின்றி இருந்த பம்பா பாக்யாவிற்கு மீண்டும் வாய்ப்பளித்தது ஏ.ஆர்.ரகுமான்தான். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த, எந்திரன் 2.0 படத்தில் இடம்பெற்ற ’புல்லினங்கால்...’ என்ற பாடலை பம்பா பாக்யாவை பாட வைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இப்பாடலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனது படங்களில் பம்பா பாக்யாவுக்கு வாய்ப்பு அளிப்பதை வழக்கமாக்கினார் ஏ.ஆர்.ரஹ்மான். பம்பா பாக்யாவும் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். அதனாலேயே அடுத்தடுத்து விஜய், ரஜினி, விக்ரம் என முன்னணி நடிகர்களின் படமாக அவருக்குக் கிடைத்தது.
பம்பா பாக்யாவை தமிழ் ரசிகர்களிடம் இன்னமும் நெருக்கமாக்கியது சர்க்கார் படப்பாடல். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான சர்க்கார் படத்தில், ‘சிம்டாங்காரன்...’ பாடலைப் பாடி இருந்தார் பாக்யா. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான இந்தப் பாடல், பம்பா பாக்யாவை மாபெரும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது என்றே கூறலாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மட்டுமின்றி, ஹிப் ஹாப் ஆதி இசையில் நல்ல பாடல்களைக் கொடுத்துள்ளார் பம்பா பாக்யா. பிகில், சர்வம் தாள மையம், அன்பறிவு, சமீபத்தில் பார்த்திபன் நடிப்பில் வெளியான இரவின் நிழல் என விரல் விட்டு எண்ணும்படியான படங்களிலேயே பாடியிருந்தாலும், பம்பா பாக்யா பாடிய பாடல்கள் அனைத்துமே ஹிட்டானவைதான்.
மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் PS-1 படத்திலும், ‘பொன்னி நதி..’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பாடியுள்ளார் பம்பா பாக்யா.
இதுதவிர, சந்தோஷ் தயாநிதி இசையில் வெளியான ராட்டி ஆல்பத்தில், “எதுக்கு உன்ன பார்த்தேன்னு புலம்ப வைக்குறியே” என்ற பாடலைப் பாடியிருந்தார் பம்பா பாக்யா. இப்போதும் இளசுகளின் மனம் கவர்ந்த பாடலாக உள்ளது இப்பாடல்.
உடல்நலக்குறைவு
இப்படியாக தமிழில் தொடர்ந்து வெற்றிப் பாடல்களாகக் கொடுத்து வந்த பம்பா பாக்யாவிற்கு, நேற்று முன்தினம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதும், தன் குரலால் அனைவரின் இதயத்துடிப்பையும் எகிற வைத்த அந்தக் கலைஞனின், இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வந்தது. சிறுநீரக செயல்பாடும் குறைந்ததால் வயிற்றில் அதிக நீர் சேர்ந்தது. எனவே, சிகிச்சைப் பலனளிக்காமல் பம்பா பாக்யா உயிரிழந்தார்.
அவரின் இந்த திடீர் மரணம் இசையமைப்பாளர்கள் மற்றும் இசை ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அவருடைய இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அவர் பாடிய பாடல்களைப் பகிர்ந்து, இசைத்துறையினர், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் தங்களது சோகத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் மிகக் குறுகிய காலமே இருந்தபோதும், காலத்தால் அழியாத பிரபலப் பாடல்களைத் தந்து, மிகப் பிரபலமான பாடகராக திகழ்ந்தவர் பம்பா பாக்யா. அவர் உடல் மறைந்தாலும், அவர் குரல் எப்போதும் காற்றில் கலந்து, இசையாக நம்மைச் சுற்றியே இருக்கும். அவர் பாடிய பாடல்களை முணுமுணுக்கும் ஒவ்வொரு இதழ்களிலும் பம்பா பாக்யா வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

