KK பாடிய 90'ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பாடல்கள்: காற்றோடு கலந்துவிட்ட பாடகர் கேகே...
தமிழில் உயிரின் உயிரே, அண்டங்காக்கா கொண்டக்காரி உள்ளிட்ட ஹிட் பாடல்களைப் பாடிய பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் திடீரென உயிரிழந்திருப்பது இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சில பாடல்கள் நம்மையும் அறியாமல் நம்மை அழ வைத்திருக்கும்... கைபிடித்து கடந்த காலங்களில் அலைய வைத்திருக்கும்... மீண்டும் மனதிற்கு இளமைச் சாயம் பூசி இருக்கும்... எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள தைரியம் கொடுத்திருக்கும்...
ஆனால், அப்பாடல்களின் வரிகளோடும், அதைப் பாடிய குரலோடும் நாம் கடந்து வந்து விடுவோம். அதைப் பாடியவர்களில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள விரும்புவதில்லை.
அப்படி நாம் அதிகம் அடையாளம் காணாமல், கொண்டாடாமல் விட்ட கலைஞர்களில் ஒருவர்தான். தற்போது காற்றோடு கலந்துவிட்ட பாடகர் கேகேவும்.
90’ஸ் கிட்ஸ்களின் பல பேவரைட் பாடல்களைத் தந்தவர் இவர். இப்போது நமக்குப் பிடித்த பல பாடல்களை எடுத்துப் பார்க்கும்போது, ‘அட இந்தப் பாடல்களைப் பாடியது கேகே-வா?’ என ஆச்சர்யம் வருகிறது.
பல அற்புதமான பாடல்களை கடந்த தலைமுறைக்கும், இந்தத் தலைமுறைக்கும் மட்டுமல்ல, எதிர்வரும் தலைமுறைகளுக்கும் சேர்த்தே கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் கேகே. தமிழ் மட்டுமின்றி 8க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் சினிமாப் பாடல்கள் பாடிய கேகே, நேற்று திடீர் மாரடைப்பால் தனது 53 வயதில் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, காற்றோடு கானம் பாடச் சென்றுவிட்டார்.
முறைப்படி இசையைக் கற்றுக் கொள்ளாமலேயே இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார் கேகே என்பது ஆச்சர்யமான உண்மை.
ரசிகர்களால் ’கேகே’ என அழைக்கப்படும் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மலையாளக் குடும்பத்தில் இருந்து வந்தபோதும், டெல்லியில்தான் பிறந்து வளர்ந்தார் கேகே.
டெல்லியில் பட்டப்படிப்பை முடித்ததும் சில மாதங்கள் விடுதி நிர்வாகியாகயும் இருந்துள்ளார் கேகே. தனது சிறுவயதுத் தோழியான ஜோதியை 1991ல் திருமணம் செய்து கொண்டார். இந்தக் காதல் தம்பதிக்கு நகுல் கிருஷ்ணா குன்னத் என்ற மகனும் தாமரா குன்னத் என்ற மகளும் உள்ளனர். மகன் பாடகராகவும் மகள் பியானோ இசைக் கலைஞராகவும் அறியப்படுகின்றனர்.
“1994 ஆண்டுதான் முதன் முறையாக இசைப் பயணத்தை தொடர மும்பை வந்தேன். அதற்கு முன்னதாக ஹோட்டல் துறையில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். என் கனவுகள் மெய்ப்பட துணையாக இருந்தவர் என் மனைவி ஜோதிதான்,” எனப் பேட்டி ஒன்றில் கேகே கூறியுள்ளார்.
சினிமாவில் பாடகராக அறிமுகமாவதற்கு முன்பே விளம்பரத்துறையில் பிரபலமானவர் கேகே. ஜிங்கிள்ஸ் எனச் சொல்லப்படும் விளம்பரப் பாடல்கள் மட்டும், 11 மொழிகளில் சுமார் 3,500க்கு மேல் பாடியுள்ளார்.
மொழிகளைக் கடந்தது கலை, கலைஞர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். கேகேவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பாடல்களை பாடியுள்ளார். பின்னணி இசைப் பாடகராக மட்டுமின்றி, பாப் மற்றும் ராக் இசைப் பாடகராகவும் கேகே அறியப்படுகிறார்.
1996ம் ஆண்டு முதன்முறையாக சினிமாவில் பாடும் வாய்ப்பைப் பெற்றார். இன்று இந்தியா முழுவதும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தாலும், சினிமாவில் அவர் பாடிய முதல் பாடல் தமிழில் தான் என நாம் பெருமையாகக் கூறிக் கொள்ளலாம்.
விளம்பரப் பாடல்கள் மூலம் கேகேவின் குரல்வளத்தை ரசித்த ஏ.ஆர்.ரஹ்மான், தமிழில் காதல் தேசம் படத்தில் இடம்பெற்ற ‘கல்லூரிச்சாலை...’ பாடல் மூலம் தமிழில் பாடகராக அறிமுகப்படுத்தினார். இதே படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு டப் மூலம் அதே ஆண்டில் இந்தியிலும், தெலுங்கிலும் கேகே-வை பாடகராக ஏ.ஆர்.ரஹ்மானே அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட பாடல்களை கேகே பாடியிருக்கிறார். அவை ஒவ்வொன்றுமே சூப்பர் ஹிட்டாக பட்டிதொட்டியெங்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை. குறிப்பாக தமிழில் 90'S கிட்ஸ்களின் மனம் கவர்ந்த பல பாடல்களுக்கு குரல் கொடுத்தவர் இந்த கே.கே தான்.
மின்சாரக் கனவு படத்தில் 'ஸ்டராபெர்ரி கண்ணே...’, உயிரோடு உயிராக திரைப்படத்தில் 'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்...’, செல்லமே படத்தில் 'காதலிக்கும் ஆசையில்லை...’, காக்க காக்க படத்தில் 'உயிரின் உயிரே...’, 7ஜி ரெயின்போ காலனியில் 'நினைத்து நினைத்து பார்த்தேன்...’, காவலன் படத்தில் 'பட்டாம்பூச்சி கூப்பிடும் போது...’, மன்மதன் படத்தில் 'காதல் வளர்த்தேன்...’ உள்ளிட்ட பல்வேறு காதல் பாடல்களுக்கு இவரின் குரலே உயிர் கொடுத்தது.
மெல்லிசைக் காதல் பாடல் மட்டுமின்றி, ரெட் படத்தில் 'ஒல்லிகுச்சி உடம்புகாரி’, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் 'வச்சிக்க வச்சிக்க வா இடுப்புல’, அந்நியன் படத்தில் 'அண்டங்காக்கா கொண்டக்காரி’, கில்லி படத்தில் ‘அப்படிப்போடு போடு’ என அதிரடியான காதல் பாடல்களையும் தந்தவர் கேகே.
தொடர்ந்து பாடும் வாய்ப்பு கிடைத்தபோதும், முன்னணி நடிகர்களின் படங்கள் என்றில்லாமல்... தனது குரலுக்கு பொருத்தமான பாடல்களாகத் தேர்வு செய்து பாடியதாலே கேகே-ன் பாடல்கள் காலத்தால் அழியாதவைகள் ஆகிவிட்டன.
1999 உலகக்கோப்பைப் போட்டியின்போது, இந்திய அணிக்காக ‘’ஜோஸ் ஆஃப் இஃதியா...’’ எனும் பாடலைப் பாடி கேகே உற்சாகமூட்டினார். அதே ஆண்டு தனது 'பால்' (Pal) ஆல்பத்திற்காக சிறந்த பாடகருக்கான விருதைப் பெற்றார் கேகே. புதியப் பாடகராக சோனி நிறுவனம் இவரைத் தேர்வு செய்தது.
தனது பாடும் முறைகளில் பாடகர் கிஷோர்குமார் மற்றும் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன், மைக்கேல் ஜாக்சன், பில்லி ஜோயல், ப்ரையன் ஆடம்ஸ் ஆகியோரின் சாயலை கேகே கொண்டிருந்ததாலேயே ரசிகர்கள் அவரைக் கொண்டாடினார்கள். இசையுலகில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உண்டாக்கிய கேகே, சிறிது காலம் மட்டுமே இசைப் பள்ளிக்கு சென்றுள்ளார்.
ஆனாலும் தனக்கு தொடக்கத்தில் இருந்தே கேள்வி ஞானம் அதிகமாக இருந்ததாகக் கூறும் கேகே,
“ஒரு பாடலை கேட்டால் போதும் அப்படியே பாடிவிடுவேன். அதற்காக நான் வெட்கப்படவில்லை. நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்,” என நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
சினிமாவில் பிஸியான பாடகராக இருந்தபோதும், ஆல்பம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டினார் கேகே. பால் ஆல்பத்திற்குப் பிறகு ஹம்சபஃர் எனும் தனது இரண்டாவது இசைத் தொகுப்பினை எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 2008ம் ஆண்டு வெளியிட்டார்.
ஜஸ்ட் மொகப்பத், சகாலகா பூம்பூம், குச் ஜுகி சி பால்கிய்ன், ஹிப் ஹிப் ஹுர்ரே, காவ்யாஞ்சலி, ஜஸ்ட் டேன்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்காகவும் பாடல்கள் பாடியுள்ளார். 2010 ஆம் ஆண்டின் ஸ்டார் பரிவார் விருதுகள் நிகழ்ச்சிக்காக ஸ்ரேயா கோஷலுடன் பாடல்கள் பாடியுள்ளார். 2015ம் ஆண்டு இளம் பாடகர்களின் திறமையினை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வளரும் பாடகர்களை ஊக்குவிப்பதற்காக பாடினார். பத்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ’தன்கா சாலா’ எனத் தொடங்கும் பாடலை ஃபரூக் அபித் இசையமைப்பில் பாடினார். 2013 ஆம் ஆண்டில் ரைஸ் அப் - கலர்ஸ் ஆப் பீஸ் (Rise Up – Colors of Peace) எனும் சர்வதேச இசைத்தொகுப்பு ஒன்றில் பாடல்களைப் பாடினார். இந்த இசைத்தொகுப்பினில் 12 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கு பெற்றிருந்தனர். இதன் பாடல்களை துருக்கி நாட்டு பாடலாசிரியர் பெட்டுலா குலன் (Fetullah Gulen) எழுதியிருந்தார்.
சுவாசம் போன்று பாடுவதையும் நேசித்ததாலோ என்னவோ, தனது இறுதி மூச்சு வரை ரசிகர்களுக்கு தன் மயக்கும் குரலால் இசை விருந்தை நடத்திக் கொடுத்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். நேற்று கொல்கத்தா மாநகரின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் கல்லூரி கலாச்சார விழாவில் கலந்து கொண்டு ரசிகர்கள் முன்னிலையில் உற்சாகமாகப் பாடல்களை பாடினார் கேகே.
கச்சேரி முடிந்து, தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பியவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு எனக் கூறப்பட்டுள்ளது.
துள்ளலும், கொண்டாட்டமுமாக ரசிகர்களைப் பாடல்களால் குஷிப்படுத்திய கேகேவின் இந்த திடீர் மரணம், அவரது ரசிகர்களை மட்டுமின்றி, இசைப் பிரியர்களையும் அதிர்ச்சியும், சோகமும் அடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அனுராக் தாக்கூர், கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் மற்றும் இந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பல உணர்ச்சிகளை பிரதிபலித்தது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல், பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது டிவிட்டர் பதிவில்,
“என் “உயிரின் உயிரே” மறைந்தது. லெஜண்ட் படத்தில் கடைசியாக அவர் பாடிய பாடலான “கொஞ்சி கொஞ்சி” பாடலை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கும் போது, இப்படியொரு அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன், அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என இரங்கல் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில்,
“சித்து மூஸ் வாலாவை தொடர்ந்து இப்போது கே.கே! நம் நாட்டின் இசை சமூகத்திற்கு இது ஒரு சோகமான வாரம். வாழ்க்கை கணிக்க முடியாதது & அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாதது. உங்களை மிஸ் செய்கிறோம் கேகே,” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது இரங்கல் பதிவில், “இளைப்பாருங்கள் நண்பரே. இது பயங்கரமான இழப்பு. கே.கே.யின் மாயாஜாலக் குரலும் இசையும் என்றென்றும் நம்மிடையே எதிரொலிக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கேகே நேற்று கடைசியாக மேடையில் பாடிய பாடல் வீடியோவையும், இந்திய திரையுலகிற்கு அவர் கொடுத்துச் சென்ற சூப்பர்ஹிட் பாடல்களையும் இணையத்தில் பகிர்ந்து, ரசிகர்கள் தங்களது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கேகே-வின் உடலுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் அறிவித்துள்ளார்.
R.I.P. KK