பொறியாளர்களுக்கு திறன் பயிற்சி: விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்ட CADD சென்டர் நிர்வாக இயக்குனர்!

இக்காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு பெற பொறியாளர்களுக்கு திறன் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி 18 நாட்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமர் வரை 8 ஆயிரம் கிமி K2K பாரத் யாத்ரா மேற்கொண்டார் CADD செண்டர் கரையாடி செல்வன்.
0 CLAPS
0

இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பொறியியல் பட்டதாரிகளுக்கு நடைமுறைப்படுத்தும் திறன் போதிய அளவு இல்லாததாலேயே வேலை வாய்ப்பு கிடைக்காமல் போவதாக பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழல் குறித்து பலர் புலம்பித் தவிக்கும் நிலையில் CADD சென்டரின் நிர்வாக இயக்குனரான கரையாடி செல்வன் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்புச் சூழலை மாற்றியமைக்கத் தீர்மானித்தார்.

செல்வன்; 2015-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் வாயிலாக இரண்டு முக்கிய விஷயங்களைக் கவனித்தார். இந்திய நிறுவனங்கள் சரியான திறனுடன்கூடிய பொறியாளர்களையே எதிர்பார்க்கின்றன. ஏனெனில் அவர்களால் பயிற்சிக்கென தனியாக நேரம் ஒதுக்கமுடிவதில்லை. அடுத்ததாக உலகளவில் பொறியாளர்களுக்கான தேவை அதிகரிப்பதற்கு சாத்தியமுள்ளது. இந்தியர்கள் தங்களது தரத்தை மேம்படுத்திக்கொண்டால் உலகின் எந்தப் பகுதியிலும் அவர்களுக்கு பணி வாய்ப்புக் கிடைக்கும்.

”பொறியாளர்களுக்கு வேலைக் கிடைக்காமல் போனால் அது நம்முடைய தவறுதான்,” என்கிறார் செல்வன்.

இந்த நோக்கத்திற்காக CADD சென்டர் ’ஒன்பதாவது செமஸ்டர்’ (Ninth Semester) என்கிற திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பொறியியல் மாணவர் ஒருவர் பொறியியல் படிப்பிற்கான எட்டு செமஸ்டர்களையும் முடித்த பிறகு கல்லூரியிலோ அல்லது கல்லூரிக்கு வெளியிலோ இருக்கும் CADD சென்டரில் அவருக்கு மேலும் ஆறு மாதங்கள் பணி வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்படும்.

இரண்டாம் நிலை கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் பணி வாய்ப்பிற்கு தங்களைத் தயார்படுத்திக்கொண்டு பணியைக் கண்டறிவதில் சிரமத்தைச் சந்திக்கின்றனர். இங்கு இந்தத் திட்டம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது என செல்வன் தெரிவிக்கிறார்.

பயிற்சிக்குப் பிறகு பணி உத்தரவாதம்

2015-ம் ஆண்டின் ஆய்விற்குப் பிறகு CADD சென்டர் பொறியாளர்களுக்கு பயிற்சியளிப்பதில் இருந்து பொறியாளர்களுக்கு பணி கிடைக்க உதவும் முயற்சியில் ஈடுபட்டது. ஜாப் செக்யூர்ட் ட்ரெயினிங் (JST) என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் மூலம் பொறியாளர் CADD சென்டரில் அளிக்கப்படும் பயிற்சிக்குப் பிறகு பணியிலமர்த்தப்படுவார். நிறுவனங்களின் தேவையை முறையாகப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு பொறியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும் என்பதற்காக CADD சென்டர், நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

வேலை வாய்ப்பினை வழங்கும் பயிற்சியான JST திட்டத்தை தொலைதூரப் பகுதிகளில் அறிமுகப்படுத்த CADD திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் பொறியியல் படிப்பு முடித்த பிறகு ’ஒன்பதாவது செமஸ்டர்’ மூலம் ஆறு மாத கால பயிற்சி அளிக்கப்படும். அல்லது கல்லூரியின் தரப்பில் இருந்து ஐந்தாவது செமஸ்டர் முதல் ஒவ்வொரு மாதமும் 40 மணி நேர பயிற்சி வழங்கப்படும். CADD சென்டர், மாணவர்களுக்கு பயிற்சியளித்து பணி வழங்குவோரின் தேவைகளுக்கு ஏற்றவாறான ப்ராஜெக்டுகளை முடிக்கவும் பணியிலமர்த்தப்படவும் உதவுகிறது.

”இந்தியாவில் 3,700 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. CADD செண்டர் குறைந்தபட்சம் 1,500 பொறியியல் கல்லூரிகளுடன் இணைந்து செயல்படும். தற்போது பொறியாளர்கள் பணியிலமர்த்தப்படுவதை அடிப்படையாகக் கொண்டே எங்களது வெற்றியை அளவிடுகிறோம். இதற்கு முன்பு பணி வாய்ப்பு கிடைப்பதற்கான பயிற்சியை அளிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தோம்,” என்றார் செல்வன்.

பாரதப் பயணம் வாயிலாக பகிரப்பட்ட தகவல்

பொறியியல் மாணவர்களுக்கு கிடைக்கப்படும் வேலை வாய்ப்பினை அதிகப்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தில் தெளிவாக இருக்கும் செல்வன், CADD சென்டர் ஊழியர்களும் இது சாத்தியம் என்பதை உணரவேண்டும் என்கிறார். இதை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே அனைத்து மையங்களிலும் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களை சந்திக்க நாடு முழுவதும் ’பாரத் யாத்ரா’ மேற்கொண்டார்.

”சென்டரில் பயிற்சியளிக்கும் அனைத்து ஆசிரியர்களையும் ஒரு இடத்திற்கு அழைத்து இந்தத் தகவலை பகிர்ந்துகொண்டிருக்கலாம். அல்லது இமெயில் வாயிலாகவோ வீடியோ மூலமாகவே தெரிவித்திருக்கலாம். ஆனால் அவர்களை ஒரு குழுவாக அவர்களது இடத்திற்கு சென்று சந்திக்க விரும்பினேன்,” என்றார் செல்வன்.

CADD சென்டர்களை மேம்படுத்தவேண்டும் என்பதற்காக மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பொறியாளர்கள் குறித்தக் கண்ணோட்டத்தை மாற்றவேண்டும் என்பதற்காகவும் செல்வன் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். அவரது பயணம் சென்னையில் துவங்கியது. பாண்டிச்சேரி, திருச்சி, மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் சிறிது நேரம் தங்கிய பிறகு கன்னியாகுமரியைச் சென்றடைந்தார். அங்கிருந்து காஷ்மீர் வரை சென்றார். இந்தப் பயணத்தில் CADD சென்டரில் பயிற்சியளிக்கும் அனைத்து ஆசிரியர்களிடமும் கலந்துரையாடினார்.

உள்ளூர் பயணம்

செல்வனின் பாரத யாத்ராவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய பகுதிகளுக்குச் சென்று நாட்டின் தலைநகரான டெல்லியைச் சென்றடைந்தார். அங்கிருந்து உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய பகுதிகளுக்குச் சென்று மீண்டும் சென்னை திரும்பினார். திருவனந்தபுரம், கோட்டயம், திருச்சி, கோயமுத்தூர், காலிகட், மங்களூர், கோல்ஹாபூர், புனே, மும்பை, அஹமதாபாத், உதய்பூர், ஜெய்ப்பூர், லூதியானா, அம்ரிஸ்டர், ஜம்மு, சண்டிகர், டெல்லி, லக்னோ, ஜபல்பூர், நாக்பூர், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை என்கிற வரிசையில் ஒரு நகரில் இருந்து அடுத்த நகருக்குப் பயணித்தார்.

சென்னை CADD செண்டர் மேலாளரான ஜிஜோ ஜேக்கப் தெரிவிக்கையில், “கே2கே யாத்ரா எங்களது மையத்தில் இருந்து துவங்கப்பட்டு இங்கேயே நிறைவு செய்யப்பட்டது. JST கே2கே பேரணி எண்ணற்ற இளம் குழு உறுப்பினர்களுக்கு உந்துதலளித்துள்ளது,” என்றார்.

செல்வன் 18 நாட்களில் 8,000 கிலோமீட்டர்கள் பயணித்தார்.

“ஒரு ஊழியர் மட்டும் என்னுடன் வந்தார். ஒன்றிரண்டு மையங்களில் என்னுடன் இருப்பதற்காக சிலர் விமானத்தில் பயணம் செய்தனர்,” என்றார் செல்வன்.

பயிற்சி அளிக்கப்பட்டால் பொறியியல் மாணவர்கள் வெற்றியடையலாம் என்பதை விவரிக்க கல்லூரி பேராசிரியர்களையும் செல்வன் இணைத்துக்கொண்டார்.

”கோயமுத்தூரில் நடைபெற்ற எங்களது திட்டத்திற்காக 200 நபர்களும் பெங்களூருவில் 280 நபர்களும் பங்கேற்றனர்,” என்றார் செல்வன்.

பெங்களூருவில் இருக்கும் சென்டரின் நிர்வாகியான தீபக்குமார் கூறுகையில்,

“கே2கே எங்களது குழு உறுப்பினர்களுக்கு அவர்களது வலிமை மீது நம்பிக்கையை ஏற்படுத்தி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்றார். 

மும்பை சென்டரைச் சேர்ந்த விவேக் பதெல்லா கூறுகையில், “பல மாணவர்களை பணியிலமர்த்தும் சவால் நிறைந்த பணியை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இது போட்டியைக் கடந்து எங்களை நிலைநிறுத்தும். இதை எங்களது மையத்திலும் செயல்படுத்தவேண்டும் என்கிற உந்துதல் பிறந்துள்ளது,” என்றார்.

”கே2கே பயணம் எனக்கு வாழ்நாள் அனுபவமாக அமைந்தது. துறைசார்ந்த தொடர்புடைய 800 ஊழியர்களை நான் சந்தித்தேன். எதிர்காலத்தில் பணிபுரிய உள்ள பொறியாளர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் தேவையான திறன்களை வழங்கும் விதம் குறித்து விரிவான விவாதம் நடத்தினேன்,” என்று யுவர்ஸ்டோரி-க்குத் தெரிவித்தார் செல்வன். இந்த விவாதங்களைத் தொடர்ந்து CADD புதிய பாடதிட்டத்தை வடிவமைக்க உள்ளது.

”பல்வேறு புத்தகங்களையும் பத்திரிக்கைகளையும் படித்து ஒருவர் அறிவுக்கூர்மை பெறலாம். மாறாக ஒருவர் பயணம் செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கானோரை சந்தித்து அறிவுக்கூர்மை பெறலாம். இது உண்மை என்பதை தெரிந்துகொண்டேன். நான் அறிவுக்கூர்மை உடையவனாக மாறிவிட்டேன்,” என்றார்.

அடுத்த சில ஆண்டுகளில் பொறியாளர்களுக்கான நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்கும் மையமாக CADD சென்டரை உருவாக்க விரும்புகிறார் செல்வன். கே2கே யாத்ரா இந்த நோக்கத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட நடவடிக்கையாகும்.

ஆங்கில கட்டுரையாளர்கள் : வெங்கடேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஹனி பெங்கனி பாலச்சந்தர் | தமிழில் : ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world