சூரியசக்தி மின் விளக்குகளை வழங்கி இந்திய கிராமப்புறங்களுக்கு வெளிச்சமூட்டும் பேராசிரியர்!
இதுவரை 400 கிராமங்களை மின்மயமாக்கிய சிராக் கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளை 2020-ம் ஆண்டில் 15,000 கிராமங்களுக்கு மின் வசதியை ஏற்படுத்தி இரண்டு லட்சம் பேரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.
மின் நுகர்வு மற்றும் உற்பத்தியில் உலகளவில் அமெரிக்கா மற்றும் சீனாவைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. இருப்பினும் மில்லியன் கணக்கானோர் இன்னமும் இருட்டிலேயே வாழ்கின்றன்றனர். அரசாங்கம் மற்றும் தனியார் ஏஜென்சிக்கள் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அரசு சாரா நிறுவனம் ஒன்று இந்திய கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை பரப்புகிறது.
சிராக் கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளை (CRDF) வெற்றிகரமாக 400-வது கிராமத்தை மின்மயமாக்கியுள்ளது. மஹாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்தின் மொக்ஹடா பகுதியில் இருக்கும் பால்டியசப்படா எனும் கிராமமே இந்நிறுவனத்தால் மின்மயமாக்கப்பட்ட 400-வது கிராமமாகும். மேலும் சிராக் திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் விளக்குகளை 16,000 வீடுகளுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
மும்பையின் ஹெச்.ஆர் வணிகம் மற்றும் பொருளாதார கல்லூரியின் பேராசிரியரான 62 வயது பிரதிபா பாய் அவர்களால் 2010-ம் ஆண்டு இந்த திட்டம் துவங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இவர் தனது மாணவர்களின் உதவியுடன் கிராமங்களுக்கு மின் வசதியை ஏற்படுத்தத் துவங்கினார். எனினும் அவரது முயற்சி மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தைக் கண்டு அவரது ஆர்வம் அதிகரித்தது.
2011-ம் ஆண்டு அவர் தனது முழு நேரப் பணியைத் துறந்தார். அவர் புதிதாக இணை நிறுவனராக இணைந்துகொண்ட அரசு சாரா நிறுவனத்தின் திட்டங்களில் கவனம் செலுத்தத் துவங்கினார். அவர் அரசு சாரா நிறுவனத்தைத் துவங்கிய காரணம் குறித்து டிஎன்ஏ-உடன் பகிர்ந்துகொள்கையில்,
”இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் மின்சாரம் இல்லை. இந்திய கிராமப்புறங்களில் நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினோம்,” என்றார்.
பாய் துவங்கிய அரசு சாரா நிறுவனம் ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திகந்த ஸ்வராஜ் அறக்கட்டளை என்கிற உள்ளூர் அரசு சாரா நிறுவனத்தின் உதவியுடன் இந்தியாவின் 400-வது கிராமத்தில் இவரது நிறுவனம் மின் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பாய் மேற்கொண்ட இந்த முயற்சியுடன் சேர்த்து இதுவரை இந்தியாவின் கிராமப்புறங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் பலனடைந்துள்ளனர்.
’தி லாஜிக்கல் இண்டியன்’ உடனான உரையாடலில் அவர் தெரிவிக்கையில்,
“கிராமப்புறங்களில் மின்சார தேவை இருப்பதைக் கண்டறிந்து அந்தப் பகுதியைப் பார்வையிட்டு அதற்கேற்றவாறு திட்டமிடுகிறோம். நாங்கள் பின்பற்றும் இந்த முழுமையான மாதிரியின் மூலம் மின்சார வசதி மட்டுமின்றி கல்வி, வாழ்வாதாரம், சுகாதாரம், சுற்றுச்சூழல் போன்ற சிக்கல்களுக்கும் தீர்வு கண்டு தாக்கத்தை ஏற்படுத்துகிறோம்,” என்றார்.
ஒரே ஒரு திட்டத்துடன் மின்மயமாக்க துவங்கப்பட்ட இந்த முயற்சி பெரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தகைய பெரியளவிலான செயல்பாடுகளுக்கு இந்த அரசு சாரா நிறுவனம் கார்ப்பரேட்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி சேகரிக்கிறது. கிராமவாசிகள் உடைமையாளர்களாக உணரவேண்டும் என்பதற்காக இந்நிறுவனம் சூரிய சக்தி உபகரணங்களுக்கு மிகக்குறைந்த கட்டணம் வசூலிக்கிறது. மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் கிராமங்களில் இந்தக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதுமட்டுமல்லாது கிராமத்தினர் சூரிய சக்தி ஆற்றலைப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் மண்ணெண்ணெய் விளக்குகளின் பயன்பாட்டைத் தவிர்ப்பதன் அவசியத்தையும் புரிந்துகொள்ள உதவும் வகையில் இந்த அரசு சாரா நிறுவனம் கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்கிறது.
சூரியசக்தி மின் தகடுகளை அமைப்பதுடன் அதன் மூலம் தொடர்ந்து விளக்குகள் எரிவதை உறுதிசெய்ய இந்த அரசு சாரா நிறுவனம் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்கிறது. இது குறித்து பாய் விவரிக்கையில்,
”சூரியசக்தி தகடுகளில் அழுக்கு படியும்போது துடைக்கப்படவேண்டும். இரண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பேட்டரியை மாற்றவேண்டும்,” என்றார்.
வீடுகளுக்கு மட்டுமின்றி, சாலை விளக்குகள், நிலங்களுக்கான நீர்பாசன அமைப்பிற்குத் தேவையான சூரிய சக்தி மின்சாரத்தை வழங்குவது குறித்தும் இந்நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. சோலார் பேட்டரியின் விலை 300 முதல் 500 ரூபாய் வரை ஆகும். இதற்காக பணத்தை சேமிக்கும் வழிமுறைகள் குறித்தும் இந்நிறுவனம் மக்களிடம் விவரித்து வருகிறது.
இந்த அரசு சாரா நிறுவனம் தற்போது மேகாலயா, அசாம், உத்திரான்ச்சல், கர்நாடகா, உத்திரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 15,000 கிராமங்களுக்கு மின்சார வசதியை வழங்கி 2020-ம் ஆண்டில் இரண்டு லட்சம் பேரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
கட்டுரை : THINK CHANGE INDIA