ரூ.205 கோடிக்கு ஏலத்தில் டிக்கெட் எடுத்து ஜெஃப் பெசாஸுடன் விண்வெளிக்கு பயணம் செல்ல இருப்பவர்!
ஜூலை 20ஆம் தேதி பயணம்!
அமேசான் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலக இருக்கும் உலகின் பெரும் பணக்காரர் ஜெஃப் பெசோஸ் விரைவில் விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். வரும் ஜூலை 20ஆம் தேதி அன்று முதல் விண்வெளி பயணத்தை ஜெஃப் பெசோஸ் மேற்கொள்ள இருக்கிறார். அவரின் ‘Blue Origin’ நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளது. இந்த நிறுவனத்தின் மனிதர்களை அனுப்பும் முதல் பயணத்தில்தான் பெசோஸ் பயணிக்க இருக்கிறார்.
கடந்த வாரம் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது. அப்போது ஜெஃப் பெசோஸ் உடன் அவரின் சகோதரர் மார்க் பெசோஸ் மற்றும் பயணிப்பதற்கான ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒருவரும் விண்வெளிக்கு பயணிக்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, விண்வெளி பயணத்துக்கான ஏலம் நேற்று விடப்பட்டது.
பயண டிக்கெட்டுக்கான ஏலம் 4.8 மில்லியன் அமெரிக்க டாலர்களில் ஆரம்பமான நிலையில் சுமார் 159 நாடுகளைச் சேர்ந்த 7000க்கும் அதிகமானோர் விண்வெளி பயண ஆர்வத்தில் ஏலத்தில் பங்கேற்றனர்.
இறுதியல் 28 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு பயண டிக்கெட் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்தத் தொகையின் இந்திய மதிப்பு 205 கோடி ரூபாய் ஆகும். என்றாலும், இந்த டிக்கெட்டை ஏலம் எடுத்தவர் யார் என்பது தொடர்பான விவரங்களை ‘Blue Origin’ நிறுவனம் வெளியிடவில்லை. டிக்கெட்டை ஏலம் எடுத்த நபர் வரும் ஜூலை 20ஆம் தேதி ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரின் சகோதரர் மார்க் பெசோஸ் உடன் விண்வெளி பயணமாவார்.
முன்னதாக, ‘Blue Origin’ நிறுவனத்தின் New Shepard ராக்கெட்டில் பயணிக்க இருக்கும் முதல் இருக்கைக்கான ஏலம் 28 மில்லியன் டாலர் மதிப்பில் வெற்றிகரமாக முடிந்தது. வென்ற ஏலத் தொகை ப்ளூ ஆரிஜினின் அறக்கட்டளையான கிளப்ஃபியூச்சருக்கு நன்கொடையாக வழங்கப்படும்," என்று Blue Origin நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
மேலேச் சொன்ன New Shepard ராக்கெட் தான் ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட மூவரை சுமந்து செல்ல உள்ளது. New Shepard ராக்கெட்டில் அவர்கள் மேற்கொள்ள இருக்கும் பயணம் வெறும் 11 நிமிடங்கள் தான் எனக் கூறப்படுகிறது.