ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்; விவசாயி; சமூக அக்கறையாளர்: மேக் இன் இந்தியா MAK நிறுவனர் மாணிக்கம்!

சாதரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்ஜினியர் ஆகி, 70’களில் சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றித் தொழில்முனைவரான மாணிக்கம் ஒரு விவசாயி மற்றும் சமூக ஆர்வலரும் கூட.
332 CLAPS
0

1970’களில் இன்ஜினீயரிங் படிப்பு அவ்வளவு பிரபலமாகாத காலத்திலேயே, பி.இ. முடித்துவிட்டு, கைநிறைய சம்பளத்துடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பன்னாட்டு நிறுவன வேலை கிடைத்தும், அவற்றையெல்லாம் வேண்டாமென முடிவெடுத்து, இந்திய நாட்டுக்கு பயனுள்ள ஒரு நிறுவனத்தைத் தொடங்க முடிவெடுத்தவர் தான் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபாளையம் கிராமம்தான் இவரின் சொந்த ஊர். பெற்றோர்கள் அத்தப்பகவுண்டர்-தங்கம்மாள். பாரம்பரிய விவசாயக் குடும்பத்தில் மூன்று குழந்தைகளின் கடைக்குட்டி தான் மாணிக்கம்.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த மாணிக்கத்தின் தந்தை, தங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இல்லாததால், தனது 5 வயது மாணிக்கத்தை படிக்கவைக்க முடியவில்லை என, தலைவர் காமராஜரின் காரை வழிமறைத்து ஸ்கூல் கட்டித்தரச் சொல்லிக் கேட்டவர். அவரின் கோரிக்கையை ஏற்று உடனே கலெக்டரைக் கூப்பிட்டு பள்ளிக்கூடம் கட்ட ஏற்பாடு செய்த பெருந்தலைவர் காமராஜர், மாணிக்கத்தை பார்த்து, ‘நல்லா படிக்கணும், பெரிய இன்ஜினீயர் ஆகி, ஊருக்குப் பாலம் கட்டணும்...’ என்று சொல்லி வாழ்த்தியுள்ளார்.

இப்படியாக தொடங்கிய மாணிக்கத்தின் கல்விப் பயணம் முடிந்த போது, வெளிநாடுகளில் பணிபுரிவதைவிட, பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்க, ’இந்தியாவுல யாரும் பண்ணாததை தான் செய்யணுமுன்னு நினைத்து, இப்போது, உலகத்துலயே யாரும் செய்யாததை, தனது மேக் இன் இந்தியா ‘MAK’ எனும் நிறுவனம் தொடங்கி சாதித்துள்ளார். ஒரு விவசாயியாகவும் இவர் வெற்றிப்பெற்று பலருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்.

இத்தகைய நீண்ட பின்புலத்தைக் கொண்ட மாணிக்கம் அவர்கள் பகிர்ந்து கொண்ட மேலும் பல சிறப்பான விஷயங்கள் இதோ:

யுவர்ஸ்டோரி: உங்களைப் பற்றி சொல்லுங்க? உங்கள் குடும்பம் பற்றியும்?

மாணிக்கம்: என் முழுப் பெயர் ஏ.மாணிக்கம். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. காலேஜ்ல பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் படிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த காலேஜ்ல செமஸ்டர் அறிமுகமான 1968-ல் சேர்ந்த முதல் பேட்ச் நாங்கதான். அப்ப பிரின்ஸிபல் ஜி.ஆர்.தாமோதரன். 1976-ல் திருமணமாச்சு. மனைவி, மல்லிகா. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் சரவணன், ’மேக்’ நிறுவனத்தை நிர்வகிக்கிறார், மகள், நித்யா ஃபேஸ்புக் நிறுவனத்தில் நிதி ஆலோசகராக வேலை செய்யறாங்க.

யுவர்ஸ்டோரி: விவசாயக் குடும்பத்தில் வந்த உங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது யார்? கல்வியின் மூலம் உங்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?

மாணிக்கம்: எனக்கு 5 வயசு இருக்கும். ஒரு ஆய்வுக்காக காமராஜர் எங்க ஊருக்கு வந்திருந்தாரு. அப்பா என்னைய தோள்மேல தூக்கி வெச்சிக்கிட்டு, காமராஜரை பாக்கப் போனாரு. அதிகாரிங்க அவர கிட்டயே விடலை. திடீர்னு, காமராஜர் வந்த கார் முன்னோடிபோய் நின்னுட்டாரு அப்பா. அதிகாரிங்க அவரைத் தள்ளினாங்க. அதுக்குள்ள காமராஜர் காருல இருந்து இறங்கி வந்துட்டாரு. என்னப்பா, என்ன வேணும்னு கேட்டார்.

‘ஐயா, இது என்ற பையன். படிக்க வைக்கணும். ஆனா, இந்த ஊர்ல ஸ்கூலே கிடையாது. ஏற்கெனவே இருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில சில பசங்க படிச்சாங்க. ஒண்ணும் உருப்படல. அதனால, எங்க கிராமத்துக்கு ஸ்கூல் வேணுங்க'ன்னாரு.
உடனே காமராஜர் பக்கத்துல இருந்த கலெக்டர் கிட்ட, ‘இவங்க பள்ளிக்கூடமே இல்லைன்னு சொல்லறாங்களேப்பா’ பணம் இல்லையானு கேட்டதற்கு, அப்பா குறுக்கிட்டு, ‘பணம் வேண்டாங்க. எங்க ஷெட்ட சுத்தம் செஞ்சி, போர்டு, பலகையெல்லாம் போட்டுத்தர்றோம். வாத்தியார் மட்டும் போடுங்க. அவரு சம்பளத்தக்கூட வசூல் பண்ணிக் கொடுக்கறோம்'னு சொன்னாரு. காமராஜருக்கு ரொம்ப சந்தோஷம்.

அப்பா தோள்மேல ரெண்டு காலையும் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்த என்னைய பாத்து, ’என்னப்பா, படிக்கிறியா?'ன்னு கேட்டாரு. நான் ‘சரிங்க’னு சொன்னேன். ‘நல்லா படிச்சி இன்ஜினீயராயி, ஊருக்குப் பாலம் கட்டணும்’னு சொன்னாரு. அப்புறம், கலெக்டரை கூப்பிட்டு, வாத்தியாரை நியமிக்கச் சொன்னாரு. இப்படித்தான் என்னோட படிப்பு ஆரம்பிச்சது.

ஐந்தாவது வரைக்கும் ஊர்ல படிச்ச நான், 6-வதுல இருந்து எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் தண்ணீர்பந்தல்பாளையம் ஸ்கூல்ல படிச்சேன். தினமும் 5.5 கிலோமீட்டர் தூரத்துக்கு நடந்தே போவேன். வழியில தோட்டத்துல கடலை போட்டிருப்பாங்க. ஆறு வருஷத்துல 2 வருஷம்தான் கடலை நல்லா வெளஞ்சிருக்கும். மீதி 4 வருஷம் மழை இல்லாம, முழுசா காஞ்சியிருக்கும். இல்லைனா பாதி வெள்ளாமை தான் இருக்கும். ‘நல்லா படிச்சி, ஊருக்கு மழையைக் கொண்டு வருவேம்பா’னு அப்பாகிட்ட சொல்லுவேன்.

யுவர்ஸ்டோரி: கல்லூரி முடித்த பின் உங்களுக்குக் கிடைத்த வேலை வாய்ப்புகள்? வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்ததா?

மாணிக்கம்: காலேஜ்ல இருந்து வெளிவரும்போது முழுமையான இன்ஜினீயரா வந்தேன். 4-வது வருஷம் படிக்கும்போதே இந்திய கப்பல்படையில வேலைக்குத் தேர்வானேன். ஆனா, அப்பா ஒத்துக்கல. கடைசி வருஷம் பி.இ. ஹானர்ஸ் படிச்சேன். அதுல, கம்ப்யூட்டர் படிச்சதால, பெங்களூரு இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ்ல வேலைக்குத் தேர்வு செஞ்சாங்க. சம்பளம் ரூ.2000. இந்த வேலையில சேரலாம்னு அப்பா சொன்னாரு.

ஆனா, வேலைக்குப்போக எனக்குப் பிடிக்கல. அதுக்கும் முன்னாடியே, அமெரிக்காவுல படிக்கவும், வேலைக்கும் வாய்ப்புக் கெடச்சது. ஆனா, வெளிநாட்டுக்குப் போகக் கூடாதுனு அப்பா சொல்லிட்டாரு.

யுவர்ஸ்டோரி: வெளிநாட்டு வேலைக்கு போகாமல் தொழில் தொடங்கும் எண்ணம் ஏன் வந்தது? குடும்பம் மற்றும் மற்றவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்களா?

மாணிக்கம்: காமராஜர்தான உன்னையப் படிக்க வெச்சாரு. இந்த நாட்டுக்காக உழைக்கணுமுன்னு சொன்னாருல்ல. அதனால, நீ இங்கதான் வேலை செய்யணும்'னு சொன்னாரு தேசப்பற்று மிகுந்த அப்பா. ’நான் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போகல, ஆனா நான் தொழில் தொடங்க அப்பா தொடக்கத்துல விருப்பம் தெரிவிக்கவில்லை. 

யுவர்ஸ்டோரி: ‘மேக்’ தொடங்கிய கதை? முதலீடு, அதன் சேவைகள் குறித்து விரிவாக சொல்லவும்? முதல் ஆண்டில் கிடைத்த வருவாய் என்ன?

மாணிக்கம்: ‘சொந்தமா தொழில் செய்யப்போறேன்’னு அப்பா கிட்ட சொன்னேன். என்னைய, ஜி.ஆர்.தாமோதரன்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனாரு. ‘மாணிக்கம் என்ன நெனைக்கிறானோ, அத செய்யட்டும்’னு ஜி.ஆர்.டி. சொல்லிட்டாரு. ’என்னமோ செய்யப்பா, ஆனா, ’எங்கிட்ட காசு கேக்காத. ஏற்கெனவே ரூ.3 லட்சம் கடனிருக்கு’ னு அப்பா சொல்லிட்டாரு.

ஸ்காலர்ஷிப்ல படிச்சதால, நான் ரூ.15 ஆயிரம் சேமிச்சி வெச்சிருந்தேன். அதுதான் என்னோட முதலீடு. மாணிக்கம் அத்தப்ப கவுண்டர்னு என்னோட முழுப் பெயர ’மேக்’னு (MAC) ஸ்கூல்ல இருந்தே கூப்பிடுவாங்க மாத்திக்கிட்டேன். அதனால, ’மேக் கன்ட்ரோல்ஸ் அண்டு சிஸ்டம்ஸ்’ என்ற பேர்ல 1973-ல் கோவை ராமநாதபுரம் பகுதியில ரூ.500 வாடகை இடத்தில் சின்ன கம்பெனிய தொடங்கினேன். முதல் ஆண்டில் நஷ்டம் தான்.

யுவர்ஸ்டோரி: ஏரோஸ்பேஸ் தொடர்பான நிறுவனம் தொடங்க எண்ணம் ஏன் ஏற்பட்டது?

மாணிக்கம்: இப்ப, ‘மேக் இன் இந்தியா’னு சொல்றாங்க இல்ல. நாங்க அப்பவே அதை செயல்படுத்திட்டோம். இந்தியாவுல யாரும் செய்யாததைத்தான் நான் பண்ணுவேன். அதுதான் என்னோட கொள்கை. இப்ப உலகத்துலேயே யாரும் செய்யாததை ஏரோஸ்பேஸ் துறையில் ‘மேக்’ கம்பெனி செஞ்சிக்கிட்டிருக்கு.

யுவர்ஸ்டோரி: 1973 தொடங்கிய மேக் நிறுவன வளர்ச்சியை பற்றி விரிவாகக் கூறுங்கள்? நிறுவன டர்ன் ஓவர் மற்றும் வருவாய் வளர்ச்சி விகிதம் பற்றி சொல்லுங்கள்?

மாணிக்கம்: MAK CONTROLS & SYSTEMS Pvt Ltd பாதுகாப்புத்துறை மற்றும் விமானங்களுக்கு சில ஆதரவு பாகங்களை இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கும் நிறுவனம்.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தப்ப, பிரான்ஸ் நாட்டு கம்பெனிகிட்ட ‘ஏ3-20’ பயணிகள் விமானங்கள் 13 வாங்கினாங்க. 6 மாசத்துக்கப்புறம் ஒரு விமானம் பெங்களூர்ல ஏரில விழுந்து விபத்துக்குள்ளாச்சி. நிறைய பேர் இறந்தாங்க. ஆய்வு செஞ்சதுல, தொழில்நுட்பக் கோளாறு இருந்தது தெரிஞ்சது.

இந்த விமானத்துக்கு கிரவுண்டுல சர்வீஸ் செய்ய எக்யூப்மென்ட் இல்லை. அமெரிக்கா, லண்டன்ல இருந்து எக்யூப்மென்ட் வாங்கி சர்வீஸ் செய்ய முயற்சி செஞ்சும், பலனில்லை. பிரான்ஸ் கம்பெனிக்காரனும் கையை விரிச்சிட்டான். எல்லா விமானத்தையும் நிறுத்தி வெச்சிட்டாங்க. இதுக்கு நடுவுல ராஜீவ்காந்தியை கொன்னுட்டாங்க. நரசிம்மராவ் பிரதமர் பதவிக்கு வந்தாரு. பாராளுமன்றத்துல பிரான்ஸ் விமான விபத்து பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிக்காரங்க ஆயத்தமா இருந்தாங்க. அப்ப விமானத்துறை அமைச்சரா இருந்த மாதவராவ் சிந்தியா, விமானத்துக்குத் தேவையான எக்யூப்மென்ட் பத்தி விசாரிச்சிருக்காரு.

சுகாய், மிக், மிராஜ் போர் விமானங்களுக்கு நாங்க கிரவுண்ட் சப்போர்ட் எக்யூப்மென்ட் சப்ளை செஞ்சிக்கிட்டிருந்ததை, அவர்கிட்ட சொல்லியிருக்காங்க. உடனே, என்னையத் தேடி கோயம்புத்தூருக்கே வந்துட்டாரு. அந்த எக்யூப்மென்டை நான் செஞ்சிக் கொடுக்கணுமுன்னு கேட்டாரு. ‘உடனே எப்படி தயாரிக்க முடியும். டைம் வேணும்’னு கேட்டேன். அவரு, பிரதமர் நரசிம்மராவ்கிட்ட போன்ல பேசினாரு. ’மாணிக்கத்த கூட்டிக்கிட்டு, டெல்லி வந்துடு. அங்க பேசிக்கலாம்’னு நரசிம்மராவ் சொல்லிட்டாரு. இதனால, என்னை டெல்லிக்கு கூட்டிக்கிட்டுப் போனாரு.

பிரதமரின் வேண்டுகோள்!

பிரதமர் வீட்டுல, நரசிம்ம ராவ், மன்மோகன்சிங் கிட்ட, ’அந்த எக்யூப்மென்ட் தயாரிக்க குறைஞ்சது 6 மாசமாகுமுன்னு சொன்னேன்’. ஆனா, ஒரு மாசத்துல செஞ்சிக் கொடுக்கச் சொன்னாரு நரசிம்ம ராவ். இதற்குத் தேவையான பாகங்கள், லைசென்ஸ் வாங்க லேட் ஆகும்னு சொன்னதுக்கும், உடனடியாக எல்லா ஏற்பாடும் செய்து கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டார்.

சென்ட்ரல் போர்டு ஆஃப் எக்ஸைஸ் அண்ட் கஸ்டம்ஸ் தலைவர்கிட்ட பேசி, உடனே எனக்கு லைசென்ஸ் லெட்டர் கொடுத்துட்டாரு மன்மோகன்சிங். நாங்களும் எக்யூப்மென்ட் செஞ்சிக் கொடுத்தோம். இது எனக்கு பெரிய திருப்பமா அமைஞ்சது.

யுவர்ஸ்டோரி: தற்போது மேக் நிறுவன சேவைகள் யாருக்கலாம் வழங்கப்படுகிறது? உலக அளவில் மேக்  ஏற்படுத்திய தாக்கம் என்ன?

மாணிக்கம்: ஆகாய விமானத்துறையில் தொழில் நுட்பத்தை அமெரிக்கா எடுத்துச்சென்று 1997ல் அங்கு தொழில் ஆரம்பித்தேன். இன்று 37 நாடுகளில் எனது நிறுவனத்தின் உபகரணங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன.

இப்ப பயணிகள் விமானம், போர் விமானம், கப்பல்படை விமானங்கள்-னு ஏர்கிராப்ட் பவர் சம்பந்தப்பட்ட கிரவுண்ட் சப்போர்ட் எக்யூப்மென்ட்ஸ் சப்ளை செய்யறோம். 37 நாடுகள்ல ’மேக்’ எக்யூப்மென்ட்ஸ் சப்ளையாகுது. அமெரிக்கா மெம்ஃபிஸ்-ல உற்பத்திப் பிரிவு செயல்படுது. 14 நாடுகள்ல சர்வீஸ் சென்டர் இருக்கு.

யுவர்ஸ்டோரி: அப்துல் கலாம் ஐயாவுடன் உங்களுக்கான நட்பு, உறவு, அவர் உங்களுக்கு கூறிய அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் பற்றி கூறுங்கள்?

ஒருமுறை அப்துல்கலாம் ஐயா என கூப்பிட்டு, ‘பனிப் பிரதேசத்துல பாதுகாப்புப் பணியில ஈடுபட்டிருக்கற ராணுவ வீரர்களுக்கு கழிப்பறை பிரச்சினை இருக்குது. அங்கு மனிதக்கழிவு எளிதில் மக்காததால பல பிரச்சினைங்க இருக்கு. இதுக்கு ஏதாவது தீர்வுகண்டுபிடி’னு கேட்டுக்கிட்டாரு.

இது தொடர்பாக, பல ஆராய்ச்சிகள் நடத்தினோம். மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தோட இணைந்து (டிஆர்டிஓ), பயோ-டைஜஸ்டர் முறையிலான செப்டிக் டேங்க் கண்டுபிடிச்சோம்.

வழக்கமான முறையில, செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்குதலால் தொழிலாளர்கள் உயிருக்கும் ஆபத்து வருது. பயோ-டைஜஸ்டர் முறையில, பயோடேங்கில் நிரப்பப்பட்டுள்ள பாக்டீரியா நுண்ணுயிரிகள் 99.9 சதவீத கழிவுகளை மக்கச் செய்து, அவற்றை மறு உபயோகத்துக்காக தூய்மையான நீராகவும், மீத்தேன் வாயுவாகவும் மாற்றி வெளியேற்றும். இதனால, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். பயோ-டைஜஸ்டர் செப்டிக்டேங்கை இயக்க மின்சக்தியோ, எரிபொருளோ தேவைப்படாது.

இன்னொரு பெரிய விஷயம், மனிதக்கழிவை மனிதர்களே அகற்றும் முறை இதனால ஒழிக்கப்படும். இந்த டேங்க்கோட விலையும் குறைவு. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநில ரயில்களில், பயோ-டைஜஸ்டர் செப்டிக் டேங்குகளை நிறுவியுள்ளோம்.

யுவர்ஸ்டோரி: விவசாயக் குடும்பத்தில் வந்த உங்களுக்கு தொழில் அனுபவம் இல்லாததால் சந்தித்த சவால்கள் என்ன? நஷ்டம் ஏற்பட்டுள்ளதா? இவற்றை எப்படி சமாளித்தீர்கள்?

மாணிக்கம்: இந்தியாவுல இருக்கற இன்ஜினீயர்களுக்கு அடிப்படை பயிற்சி கொடுத்து, அமெரிக்காவுக்கு வேலைக்கு கூட்டிக்கிட்டுப் போனாங்க. இந்த ரெக்ரூட்மென்ட் ஆஃபர் எனக்கு வந்தது. ஆனா, அது எனக்குப் பிடிக்கல. நாமளே சொந்தமாக கம்பெனி ஆரம்பிக்கலாமுன்னு ’மேக் சாப்ட்வேர் சிஸ்ட்ம்ஸ்’ கம்பெனிய, சிலரோட சேர்ந்து ஆரம்பிச்சேன். ஆனா, சில பிரச்சினைகளால இந்த ப்ராஜெக்ட் ஃபெயிலியர் ஆயிடுச்சு.

எங்க கம்பெனிகூட வெச்சிக்கிட்ட ஒப்பந்தத்தை, பில்கேட்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பார்ட்னருங்க கேன்சல் செஞ்சிட்டாங்க. இதுல எனக்கு ரூ.4 கோடி நஷ்டம்.

யுவர்ஸ்டோரி: தொழிலுடன் சமூகப்பணிகள் செய்யறீங்க? அதைப்பற்றி சொல்லுங்க?

மாணிக்கம்: எங்க ஊர்கள சுற்றி இருக்கும் சாயப்பட்டறையால சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுச்சு. ஆனா அவற்றை மூடினா, நிறைய தொழிலாளர்களும் பாதிக்கப்படுவாங்க. என்ன செய்யறதுனு தெரியல. உடனே, அப்துல்கலாம் ஐயாகிட்ட பேசினேன். அவரு, பகவத்கீதையில இருந்து சில கருத்துகளை எடுத்துச் சொல்லி, ’உனக்கு தகுதி இருந்தும், தப்புகளை கண்டிக்கலைன்னா, நீயும் தப்பு செஞ்சவனாதான் கருதப்படுவ’னு சொன்னாரு.

உடனே, சாயப்பட்டறை உரிமையாளர்கள்கிட்ட பேசினேன். மொத்தம் 36 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், பயனில்லை. அதனால, நீதிமன்றத்தை அணுகி, சட்டப்போராட்டம் நடத்தினேன். பல வீடியோ ஆதாரங்களை திரட்டி, நீதிமன்றத்துல ஒப்படைச்சேன். 2010-ல திருப்பூர் சாயப்பட்டறைங்கள மூடும்படி நீதிமன்றம் உத்தரவு போட்டுச்சு.

அதுக்கப்புறம், 742 சாய கம்பெனிங்க, சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுநீரை ஆத்துல கலக்கறத நிறுத்திட்டாங்க. பாதிக்கப்பட்ட விவசாயிங்களுக்கு நஷ்டஈடு கேட்டு அப்ப முதல்வரா இருந்த கருணாநிதியை சந்திச்சேன். ரூ.75 கோடி இழப்பீடு வேணுமுன்னு கேட்டோம். சரின்னாரு. மந்திரி சபையைக் கூட்டி ஒப்புதலும் கொடுத்தாரு. ஆனா, அதுக்குள்ள ஆட்சி மாறிடுச்சி.

அதுக்கப்புறம் முதல்வரா பொறுப்பேற்ற ஜெயலலிதாவையும் போய் பார்த்தேன். பிர்ச்சனைகள சொன்னப்பறம் ரூ.75 கோடி கொடுத்தாங்க. அதை விவசாயிங்களுக்குப் பிரிச்சிக் கொடுத்தோம். இது என்னோட வாழ்க்கையில பெரிய சாதனையா கருதறேன்.

யுவர்ஸ்டோரி: தற்போது நீங்கள் மேக் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றப்பின் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? விவசாயம் மேற்கொள்கிறீர்களா?

மாணிக்கம்: 2011-வது வருஷம் திருச்செங்கோட்டுல இருந்து கார்ல போய்க்கிட்டிருந்தோம். மகன் சரவணன் கூட இருந்தாரு. நான் படிச்ச ஸ்கூலுக்கு நடந்துபோன பாதையில, நிலக்கடலை சாகுபடி செஞ்சிருந்தாங்க. வண்டிய நிறுத்தி, கடலையை எடுத்துப் பாத்தேன். அப்படியே நொறுங்கிப் போச்சு. போதுமான தண்ணி இல்லாம, பயிர் சரியா விளையில. வண்டியில ஏறி மகன்கிட்ட,

’தம்பி, இப்பத்துல இருந்து கம்பெனி பொறுப்பு முழுக்க நீதான் பாத்துக்கனும். நான் தலையிட மாட்டேன். விவசாயிங்களுக்கு ஏதாவது நல்லது செய்யப்போறேன்'னு சொல்லி அன்னிக்கு அந்த முடுவு எடுத்தேன்.

ராஜாவுக்கே சோறு போட்டவங்க விவசாயிங்க. ஆனா, இப்ப அரசாங்கத்துக்கிட்ட கையேந்தற நிலைமைதான் இருக்குது. இது நாட்டுக்கு நல்லதா? இதை மாத்தணும். அதே மாதிரி, நமக்குப் படியளக்குற பூமாதேவியை முக்கால் பங்கு மாசுபடுத்திட்டோம். நிலத்துல இருந்து கெடைக்கற தண்ணி, கால்நடைங்ககூட குடிக்க முடியாத நிலையில் இருக்கு. இந்த நிலையை மாத்தணுமுன்னு முயற்சி செஞ்சிக்கிட்டு வர்றேன்.

ஏறத்தாழ 8 வருஷமா ரூ.25 கோடி செலவுல நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

யுவர்ஸ்டோரி: தற்போது பல இளைஞர்கள் முதல் தலைமுறை தொழில்முனைவர்கள் ஆக சொந்த முதலீட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்குகிறார்கள்? அவர்களுக்கு உங்களின் அறிவுரை என்னவாக இருக்கும்?

மாணிக்கம்; சொந்த முதலீடு மூலம் தொழில் தொடங்குபவர்களின் வெற்றி விகிதம் 50 சதவீதத்திற்கு மேலே தான். மேலும், சொந்த முதலீடு என்பதால் வட்டி போன்ற பண விரயம் தவிர்க்கப்படும்.

இலக்கு என்ன என்பதை நன்றாக அறிந்து அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். எப்பொழுதுமே இலக்கை அடைய இரண்டு அல்லது மூன்று வழிகளை ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும் . ஒன்று தோல்வி அடைந்தாலும் மற்றொரு திட்ட முறையை கையாண்டு இலக்கை அடைந்தே ஆக  வேண்டும். இதில் 100 சதவீதம் வெற்றி உறுதி. 

யுவர்ஸ்டோரி: தோல்விகள் வந்தாலும் தொழிலில் முடங்காமல் முந்திச் செல்ல தொழில் முனைவோர்களுக்கு நீங்கள் தரும் ஊக்கம் என்ன? குறிப்பாக கொரோனா வந்ததால் பல சிறு தொழில்கள் முடங்கியுள்ளன, அவர்கள் மீண்டெழ என்ன சொல்வீர்கள்?

 

மாணிக்கம்: தொழில்முனைவோர்களும் மற்ற நிறுவன நிறுவனர்களும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது; தங்களின் நிறுவன சேவை எவ்வளவு காலத்திற்கு தேவைப்பாடு இருக்கும் என்ற மதிப்பீடு. 

ஒரு தொழிலை அமைக்கும் போது அந்த தொழிலானது  மற்றவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்குக் காரணமாக இருக்குமே ஆனால் எக்காலத்திலும் அந்த தொழில்கள் முடங்காது, கொரோனா போன்ற பெருந்தொற்றுகள் தொழிலை பாதிக்காது. இதில் எந்த மாதிரியான  பொருட்கள் உற்பத்தி / சேவை அதில் எந்த மாதிரியான யுக்தியை கையாளுகின்றோம் என்பதனை பொறுத்து உள்ளது. எனவே தொலைநோக்கு பார்வை மற்றும் புதுமை போன்றவற்றை அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும்.

யுவர்ஸ்டோரி: உங்கள் முன்மாதிர்கள் யார்? பின்பற்றும் பொன்மொழிகள், அல்லது புத்தகங்கள்?

எனக்கு முன்மாதிரி யாரும் இல்லை, நான் புத்தகங்கள் படிப்பது இல்லை, பின்பற்றும் பொன்மொழிகள் என்று ஏதும் இல்லை. கடின உழைப்பு மட்டுமே என் தாரக மந்திரம்.  

யுவர்ஸ்டோரி: உங்கள் வருங்காலத் திட்டங்கள் என்ன? தொழில், விவசாயம், சமூகம் சார்ந்து நீங்கள் செயல்பட விரும்பும் விஷயங்களை விவரியுங்கள்? 

மாணிக்கம்: விவசாயி தன் காலால் நின்று, அரசனுக்கே உணவளிப்பவன் என்ற பெருமிதத்தோடு வாழ வைப்போம். Let's Join Together To Install Good Governance in Tamil Nadu - தமிழகத்தில் நல்லாட்சி அமைய ஒன்றாய் சேர்வோம், இப்படி பல முன்னெடுப்புகள் உள்ளது.

“புதுசா யோசிங்க; தடைகளைப் பத்திக் கவலைப்படாம செயல்படுங்க. வெற்றி உங்களைத் தேடி வரும்."

இன்ஜினீயரிங் துறையில் சாதித்து, தற்போது விவசாயிகளின் நண்பனாய்த் திகழும் 70 வயதாகும் ‘மேக்’ மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், வெளிநாடுகளில் இருந்து இன்ஜினீயரிங் தொழில்நுட்பம் பெற்ற சூழலில், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுசென்ற பெருமைக்குரியவர்.

Latest

Updates from around the world