குடும்ப பிசினசில் இணைந்து, ரூ.2000 கோடி மதிப்பு நிறுவனங்களை உருவாக்கிய Dr.மாணிக்கம் மகாலிங்கம்!

By Induja Raghunathan|18th Sep 2020
1931 கோவையில் நாச்சிமுத்து கவுண்டரால் தொடங்கப்பட்ட ‘சக்தி க்ரூப்’ கீழ் இயங்கும் ‘சக்தி சுகர்ஸ்’, ‘ஏபிடி’ உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவராக பல நாடுகளில் விரிவாக்கம் செய்துள்ளார் மூன்றாம் தலைமுறை தொழிலதிபர் Dr.மாணிக்கம்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

பரம்பரையாக மாட்டுவண்டி வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டிருந்த குடும்பத்தில் வந்த நாச்சிமுத்து கவுண்டர், தன் குடும்பத்தொழிலில் இருந்து வேறுபட்டு புதிய முயற்சியை செய்ய முடிவு எடுத்தார். 1921ல் கோவையில் இருந்து சுமார் 44 கிமி தூரத்தில் அமைந்திருந்த அப்போது சிறிய கிராமமாக இருந்த பொள்ளாச்சியில், ’அண்ணாமலை பஸ் ட்ரான்ஸ்போர்ட்’ என்ற பொதுமக்கள் போக்குவரத்து சேவை நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.


அன்று தொடங்கிய சக்தி குழுமத்தின் தொழில் பயணம், இன்று சர்க்கரை, கெமிக்கல், போக்குவரத்து, ஆடை, ஆட்டோமொபைல் பாகங்கள், கல்வி, ஐடி, நிதி, விவசாயம், சேவை என பன்முகம் கொண்ட குழுமமாகி, 2.0 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு நிறுவனமாக தென்னிந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது.


‘சக்தி க்ரூப்’ உருவாவதற்கு முன்பு ‘அண்ணாமலை பஸ் ட்ரான்ஸ்போர்ட்’ (ABT) 1931ல் பி நாச்சிமுத்து கவுண்டரால் தொடங்கப்பட்டது. இது தென்னிந்திய ஊர்களை இணைக்கும் 21 தனியார் பேருந்துகள் சேவையை நடத்தி வந்தது. 1946ல் இந்தத் தொழிலில் இணைந்த நாச்சிமுத்துவின் மகன் மகாலிங்கம், தனது பொறியியல் படிப்பின் அனுபவத்தையும், புதுமையான ஐடியாக்களையும் புகுத்தி அதை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் காரணமாக அமைந்தார்.


பத்ம பூஷன் விருது பெற்ற பிரபல தொழிலதிபர் மற்றும் பரோபகாரியாக அறியப்பட்ட டாக்டர். என் மகாலிங்கத்தின் மகனான டாக்டர். எம் மாணிக்கம், சக்தி குழுமத்தில் மூன்றாம் தலைமுறை தொழில்முனைவராக 1983ல் இணைந்தார். இவர் சக்தி குழுமத்தின் பிரிவான ‘ஏபிடி’ மற்றும் ‘சக்தி சுகர்ஸ்’-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்து வருகிறார். தனது குடும்பத் தொழிலான ‘சக்தி க்ரூப்ஸ்’-ஐ வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்யவும், விற்றுமுதல் அதிகரிக்கவும், தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் காரணியாய் இருந்துள்ளார் மாணிக்கம் மகாலிங்கம்.


அதுமட்டுமின்றி அவரின் தீவிர அறிவியல் சார்ந்த அறிவும், புற்றுநோய் குறித்த அவரது ஆராய்ச்சிகளின் விளைவாக, ‘Mirakle Wellness Clinic’ என்ற மையத்தை தனது சொந்த ஊரான பொள்ளாச்சியில் நிறுவியுள்ளார். இம்மையம் ஊர் ஏழை மக்களுக்கு பல நோய்களுக்கு குறைந்த விலையில் சிகிச்சை அளித்து வருகிறது. 15 ஆண்டு கால ஆய்வுக்கு பின்னர் லிபோசோமல் வைட்டமின் சி பானம் ‘Mirakle’ என்ற ஒன்றை உருவாக்கி சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளார். இது கேன்சர் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கபடுவதாகவும், அதன் பலன்கள் நம்பிக்கை வாய்ந்ததாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.


குடும்பத்தொழிலை மூன்றாம் தலைமுறையாக வெற்றிகரமாக நடத்துவது, பொதுவாழ்வில் சமூக அக்கறையுடன் பல பணிகள் செய்து வருவது மற்றும் உடல் ஆரோக்கியம் மீதான அறிவியல் சார்ந்த தனது ஆர்வத்தைப் பற்றியும் விரிவாக யுவர்ஸ்டோரி தமிழ் உடன் உரையாடினார் டாக்டர் என் மகாலிங்கம்.


யுவர்ஸ்டோரி தமிழ்: ‘சக்தி க்ரூப்ஸ்’ என்ற மிகப்பெரிய குழுமத்தின் பல முக்கிய நிறுவனங்களின் தலைவராக உள்ளீர், உங்கள் பின்னணி என்ன?


Dr.மாணிக்கம் மகாலிங்கம்: 1956ல் பிறந்த நான், சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்சி முடித்துவிட்டு, புள்ளியியலில் முதுகலைப்பட்டம் பெற்றேன். பின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தேன். அதன் பின் நேரடியாக குடும்ப பிசினஸான சக்தி குழுமத்தின் கீழ் இயங்கும் ஏபிடி மற்றும் சக்தி சுகர்ஸ்-ல் 1983ம் ஆண்டு இணைந்தேன். 2014 முதல் சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளேன்.


யுவர்ஸ்டோரி தமிழ்: நீங்கள் மூன்று தலைமுறை கொண்ட குடும்பத் தொழிலில் இணைந்தபோது உங்கள் திட்டம் மற்றும் இலக்கு என்னவாக இருந்தது?


Dr.மாணிக்கம்: நான் தொடக்கத்தில் வாகன பாகங்கள் பிரிவில் செயல்படத் தொடங்கினேன். அதை இன்று பலவகைகளில் விரிவடையச் செய்து, பல புதிய விஷயங்களைக் கொண்டுவததன் மூலம் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றேன். இன்று அதன் விற்றுமுதல் 1500 கோடி அளவில் உள்ளது.

Manikam

சக்தி சுகர்ஸ் பொறுத்தவரை சிவகங்கை மற்றும் மொடக்குறிச்சி, மற்றும் ஒடிஷாவில் தென்கனல் ஆகிய இடங்களில் புதிய யூனிட்களை திறந்தோம். சர்க்கரை உற்பத்தியை பொறுத்தவரை படிப்படையான வளர்ச்சியை திட்டமிட்டோம். 'சக்தி சுகர்ஸ்’ சுமார் 600 கோடி விற்றுமுதல் காண்கிறது.

”மற்றொரு மைல்கல்லாக, பொள்ளாச்சியில் சத்துள்ள புரதம் தரக்கூடிய சோயா பீன் செயலாக்க ஆலை ஒன்றை நிறுவியுள்ளோம். இது மாநிலத்தில் இருக்கும் ஒரே சோயா ஆலை ஆகும்.”

யுவர்ஸ்டோரி தமிழ்: உங்களின் பங்கு மற்றும் இலக்கை அடைய எந்த மாதிரியான புத்தாக்க நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்பத்தை நிறுவனத்தில் அறிமுகம் செய்தீர்கள்?


Dr.மாணிக்கம்: சர்க்கரை ஆலையில் பல புதுமைகளைச் செய்தோம். குறிப்பாக, சர்க்கரை உற்பத்தி பெருகத் தேவையான வளர்ச்சி செயல்பாடுகளை செய்துள்ளோம்.

“5 அடி இடைவெளியில் கரும்பு பயிரிடுதலை இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியது சக்தி சுகர்ஸ். அதே போல் கரும்பு விவசாயத்தை இயந்திரமயமாக்கியதும் நாட்டிலே முதலில் நாங்கள் தான்.

ஆட்டோ யூனிட்டை பொறுத்தவரை நாங்கள் எங்கள் சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி, ஸ்டியரிங் நக்கிள் என்று சொல்லக்கூடிய பாகத்தை உற்பத்தி செய்யும் உலகில் 6 நிறுவனங்களில் ஒன்றாக நாங்களும் இருக்கிறோம்.


யுவர்ஸ்டோரி தமிழ்: நீங்கள் நிர்வகித்த பிரிவுகளின் வெளிநாட்டு விரிவாக்கத்தில் உங்கள் பங்கு என்ன?


Dr.மாணிக்கம்: சக்தி குழுமத்தைச் சேர்ந்த பல பிரிவுகள் ஜெர்மனி, போர்துகல் மற்றும் ஸ்வீடன் நாடுகளில் 2007ல் யூனிட்களை நிறுவியது. பின்னர் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு விரிவாக்கம் செய்தோம். ஆனால் தற்போதுள்ள பொருளாதாரச் சூழலால் அங்கே செயல்பாடுகளை நிறுத்தியுள்ளோம். வெற்றி, தோல்வி இரண்டும் இருந்துள்ளது.


யுவர்ஸ்டோரி தமிழ்: நீங்கள் ஏதாவது சவால்களை சந்தித்திருக்கிறாரா? அதை எப்படி கையாண்டீர்கள்?


Dr.மாணிக்கம்: மூன்றாம் தலைமுறையாக நான் பிசினசில் நுழைந்தாலும் இதில் சவால்கள் இல்லாமல் இல்லை.

தொழில் என்றாலே எதிர்ப்பார்க்காதவை வருவதுதான். அது தினமும் வரலாம், திடீரென வரலாம். தொழில்முனைவராக இருந்தால் ஒருவர் எப்போதும் மாற்றத்துக்குத் தயாராக இருக்கவேண்டும், அதேபோல் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுபிடிப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.

நானும் என் சகோதரர்களும் எங்கள் முன்பிருந்த சவால்களை ஒன்றாக இணைந்து எதிர்கொண்டுள்ளோம்.


யுவர்ஸ்டோரி தமிழ்: பிசியான தொழில்முனைவராக இருந்துகொண்டு அறிவியல் ஆராய்ச்சி, வெல்னஸ் கிளினிக் தொடங்க ஆர்வம் எப்படி வந்தது?


Dr.மாணிக்கம்: எனக்கு எப்போதும் சுகாதாரத்துறையில் ஈடுபாடு அதிகம். குறிப்பாக மேற்கத்திய மருத்துவமுறை, மருந்துகளுடன் ஒப்பிடுகையில் நம் பாரம்பரிய மருத்துவ முறை மற்றும் மருந்துகளில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்து கொள்வேன்.


என் உறவினர் ஒருவருக்கு புற்றுநோய் வந்தது, அவருக்கு ஆங்கில மருத்துவத்தில், நோய் குணம் ஆகவில்லை. அப்போது தான் பாரம்பரிய மருந்துகள் பற்றிய எனது தேடல் தீவிரமாகியது.

“மாற்று மருந்துகள் பற்றி படிக்கத்தொடங்கினேன். அதில் பல தீர்வுகளைக் கண்டேன். தேசிய புற்றுநோய் மையம் மற்றும் உலக அளவில் பல பிரபல புற்றுநோய் ஆராய்ச்சி மையங்களுடன் தொடர்பில் இருந்தேன். அதன் அடிப்படையில் சில தீர்வுகளுடன் ஒரு புதிய முயற்சியை இந்தியாவில் தொடங்க முடிவெடுத்தேன்.”
Manickam

யுவர்ஸ்டோரி தமிழ்: நீங்கள் தொடங்கியுள்ள Mirakle Wellness Clinic பற்றி சொல்லுங்கள்?


Dr.மாணிக்கம்: பல மருத்துவர்கள் அடங்கிய குழுவுடன் இந்த வெல்னெஸ் கிளினிக் தொடங்கியுள்ளேன். இதன் தலைவராகவும் இருக்கிறேன். இதை இந்தியா முழுதும் எடுத்துச் செல்ல திட்டமிட்டிருக்கிறேன். பொள்ளாச்சி என் சொந்த ஊர் என்பதால் அங்கே தொடங்கியுள்ளேன். எங்கள் ஊர் மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

யுவர்ஸ்டோரி தமிழ்: இந்த முயற்சியில் ஈடுபட உங்களுக்கு ஊக்கமளிப்பது எது?


Dr.மாணிக்கம்: மக்களுக்கும், வருங்கால சமுதாயத்துக்கு நல்ல ஒரு சூழலை வழங்கவே நான் இந்த ஆராய்ச்சியிலும், ஆரோக்கிய மையம் நடத்துவதிலும் ஈடுபட்டுள்ளேன். அதோடு சுகாதாரம் மற்றும் மருத்துவம் எனக்கு பிடித்த துறைகளில் ஒன்றாக இருப்பதால் இதை செய்வதில் மகிழ்ச்சி.

கேன்சர், பார்கின்சன்ஸ் நோய், இதயன் மற்றும் கல்லீரல் நோய் பிரச்சனைகள் தொடர்ந்து மனித வாழ்க்கையை பாதித்து வருகிறது, அதனால் அதில் இயற்கை முறையில், அதிக செலவில்லாமல் தீர்வு காண்பதில் தீவிரமாக இருக்கிறேன்.
Mirakle

யுவர்ஸ்டோரி தமிழ்: ஒரு தொழிலதிபராக தற்போதுள்ள பாண்டமிக் சூழலை எப்படி பார்க்கிறீர்கள்?


Dr.மாணிக்கம்: மனிதகுலம் இதுவரை சந்தித்திராத மோசமான சூழல்களில் இது ஒன்று. இது மக்கள் உடல்நலத்தை மட்டுமின்றி வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. பொருளாதாரம் அடைந்துள்ள பாதிப்பு அதைவிட முகவும் முக்கியமானது, அதன் தாக்கம் இன்னும் நீண்ட காலத்துக்கு இருக்கப்போகிறது.


பாரம்பரிய மருத்துவத்திலும் இதற்குத் தீர்வு இல்லை, அதனால் உலகளவில் உள்ள பலவகையான கலாச்சாரத்தின் அடிப்படையில் இந்த தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கவேண்டியது அவசியம். இதன்படி தற்போதுள்ள நிலையில் வைட்டமின் சி சத்து உடலுக்கு தேவை என தெரியவந்துள்ளது. இது எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கவும் உதவும் என்று தெரிகிறது.


யுவர்ஸ்டோரி தமிழ்: சக்தி குழுமத்தின் வருங்காலத் திட்டங்கள் என்ன?


Dr.மாணிக்கம்: தற்போதுள்ள நிலையில், கடன்களை குறைத்து, தொழிலில் உள்ள நிச்சயமற்ற சூழலைக் குறைக்க முற்படுகிறோம். உடல் ஆரோக்கியம் பிரிவில் நுழைய யோசித்துக் கொண்டிருக்கிறோம்.


யுவர்ஸ்டோரி தமிழ்: தற்போதுள்ள இளம் தொழில்முனைவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?


Dr.மாணிக்கம்: எல்லாம் சுலபமாக கிடைத்துவிடாது என்று இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது, அதனால் விடாமுயற்சி மட்டுமே வெற்றியை தரும்.

”மனிதநேயத்துடன், நல்லொழுக்கத்துடன், பெரியவர்களை மதித்து, ஆசிரியர்களிடம் மரியாதையுடன் இளைஞர்கள் நடந்து கொள்ளவேண்டும். ஒரு நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகளாவது பணியாற்றிவிட்ட பிறகே சொந்த நிறுவனம் தொடங்குவது சிறந்தது. அனுபவத்துக்கு ஈடாக எதுவும் இல்லை, அதே போல் உங்களைப் போன்று அதே சூழலில் இருக்கும் மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்டறிவது நல்லது.”

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Join now! #TechSparksFromHome

Latest

Updates from around the world