தாய்மொழி வழியில் பள்ளிக்கல்வி முடித்து ஐஏஎஸ் ஆன அதிகாரியின் வெற்றிப் பயணம்!
சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற மனீஷ் குர்வானியின் உயர் நோக்கமே 2017 யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 18-வது ரேங்க் எடுக்க உந்துதலாக இருந்துள்ளது.
மனீஷ் குர்வானி ராஜஸ்தானின் ஹனுமான்கர் மாவட்டத்தில் உள்ள நோஹார் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். இவர் சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 27 வயதான மனீஷ், பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் மற்ற மாணவர்களைப் போன்றே ஆர்வமும் உற்சாகமும் நிறைந்த சாதாரண மாணவராகவே காணப்பட்டார். இருப்பினும் சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்கிற அவரது மன உறுதியே மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது.
எத்தகைய இன்னலாக இருப்பினும் மன உறுதியால் எதிர்கொள்ளவேண்டும் என்பார்கள். இதைத்தான் மனீஷும் பின்பற்றியுள்ளார். நோஹார் பகுதியில் ஆங்கில வழியில் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகள் ஏதும் இல்லை. எனவே அவர் வேறு வழியின்றி பத்தாம் வகுப்பு வரை இந்தி பேசும் பள்ளியில் படித்துள்ளார். மக்கள் பேசுவதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருந்துள்ளது. தொடர் முயற்சியுடன் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அவர் சந்தித்த சவால்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை.
மனீஷின் குழந்தைப் பருவத்தில் அவரது அம்மாவிற்கு அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்பட்டு வந்தது. இருப்பினும் மனீஷ் தொடர்ந்து படித்து வந்தார்.
”2003ம் ஆண்டு என்னுடைய வாழ்க்கையின் மிக மோசமான காலகட்டமாக இருந்தது. என்னுடைய அம்மாவிற்கு முதுகில் இரண்டு கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்கு என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போனது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்தக் கட்டிகளை அகற்ற இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது,” என்றார் மனீஷ்.
2017-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 18-வது இடம் பிடித்துள்ளார். தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற மனீஷின் நோக்கமே சூழ்நிலை மோசமாக இருப்பினும் வெற்றியடைய உதவியது.
”ஐஏஎஸ் ஆக விரும்பும் மற்றவர்களைப் போலவே நானும் கடினமாக உழைத்தேன். தினமும் ஆறு மணி நேரம் படிப்பேன். படிப்படியாக 10 மணி நேரம் படிக்கத் தொடங்கினேன். எனது தன்னம்பிக்கையே மோசமான சூழல்களிலும் என்னைத் தொடர்ந்து செயல்படவைத்தது,” என்று மனீஷ் குர்வானி தெரிவித்தார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து முசோரி மற்றும் ஜாம்நகரில் பயிற்சி பெற்றார். பிறகு இந்திய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சகத்தில் உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் தற்போது குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் புஜ் நகராட்சியில் உதவி ஆட்சியர் மற்றும் சப் டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட் ஆக உள்ளார்.
வெற்றிப் பயணம்
மனீஷ் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா பீதாம்பர் லால் ஒரு ஆயுர்வேத மருத்துவர். அரசாங்கப் பணியில் இருந்தார். இவரது அம்மா கோபி சாந்தனி அரசுப் பள்ளி ஆசிரியை. மனீஷ் நோஹார் பகுதியில் உள்ள கேடிபி மேல்நிலைப் பள்ளியில் இந்தி வழி கல்வி பயின்றார்.
பின்னர் வீட்டுப்பள்ளி முறையில் சிகாரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் பதினோறாம் வகுப்பும் பன்னிரண்டாம் வகுப்பும் படித்தார். 2008-ம் ஆண்டு ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிப்பதற்கு பிட்ஸ் பிலானியில் சேர அனுமதி கிடைத்தது. இது இவரது வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
”பிட்ஸ் பிலானியில் எம்எஸ்சி கணிதம், பிஈ எலக்ட்ரானிக்ஸ் இரண்டும் படித்தேன். சிறுவயதில் இருந்தே ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. கல்லூரியில் மூன்றாம் ஆண்டும் நான்காம் ஆண்டும் படித்தபோது இந்த ஆர்வம் மேலும் வலுவடைந்தது.
சமூகத்திலும் என்னைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இதற்கு சிவில் சர்வீஸ் துறையில் இணைவதைவிட சிறந்த வழி வேறு என்னவாக இருக்கமுடியும்? அத்துடன் என்னுடைய பெற்றோர் இருவருமே அரசு ஊழியர்கள் என்பதால் அரசின் செயல்பாடுகள் குறித்த புரிதல் எனக்கு இருந்தது,” என்று மனீஷ் நினைவுகூர்ந்தார்.
இந்திய அரசாங்கத்தின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறையால் ஏற்பாடு செய்யப்படும் என்எஸ்எஸ் என்கிற நாட்டு நலப்பணி திட்டத்தில் இணைந்திருந்தது மனீஷின் எண்ணத்திற்கு மேலும் வலு சேர்த்தது. இத்திட்டத்தின்கீழ் தன்னார்வலர்களாக இணைந்துகொள்ள பிட்ஸ் மாணவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்தது. மனீஷ் இதில் பங்களிப்பதில் மகிழ்ச்சியடைந்தார்.
ராஜஸ்தானின் கிராமப்புறங்களில் துணிகளை நன்கொடையாக வழங்கும் முயற்சிகள், சுகாதாரம் மற்றும் ரத்த தான முகாம்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்தார். அதுமட்டுமின்றி கல்லூரி உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு வகுப்பு நேரம் முடிந்த பிறகு கணிதம், ஆங்கிலம், அறிவியல் போன்ற பாடங்களைக் கற்றுக்கொடுத்தார்.
"நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும்போதுதான் நமது கல்வி அமைப்பில் இருக்கும் இடைவெளியை உணர்ந்தேன். இதற்கு தீர்வுகாணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கல்வியின் தரம் என்பது ஆசிரியர்களின் அறிவுத்திறன் மற்றும் மாணவர்களிடம் அவற்றைக் கொண்டு சேர்க்கும் திறன் ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையது. எனவே ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதில் கவனம் செலுத்தத் திட்டமிட்டேன்,” என்றார் மனீஷ்.
இவர் ஐஏஎஸ் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு இந்திய பொறியியல் பணி (ஐஇஎஸ்) மற்றும் கேட் தேர்வு எழுதினார். முதல் முறை யுபிஎஸ்சி தேர்வு எழுதியபோது 322வது ரேங்க் எடுத்தார். இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) வாய்ப்பு கிடைத்தது. எனினும் வருவாய் துறையில் பணியாற்றியவாறே தேர்விற்கு மீண்டும் மும்முரமாக ஆயத்தமானார். மனீஷின் முயற்சிகள் பலனளித்தது. 2016-ம் ஆண்டு இந்திய அளவில் 18-வது ரேங்க் எடுத்தார்.
”என்னுடைய தேர்வு முடிகளைத் தெரிந்துகொண்டபோது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. என்னுடைய பயணம் எளிதாக இருக்கவில்லை. நான் இந்தி வழியில் படித்ததால் கல்லூரியில் விரிவுரைகளை என்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடுவது மிகவும் கடினமாக இருந்தது. பின்னர் படிப்படியாக மொழியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்,” என்றார் மனீஷ்.
தேர்ச்சி பெறுவதற்கான உத்திகள்
மனீஷ் ஆரம்பத்தில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற சில உத்திகளைப் பின்பற்றினார். இந்தியாவில் உள்ள போட்டித் தேர்வுகளில் சிவில் சர்வீஸ் தேர்வுகளே மிகவும் கடினமானதாகும். வெறும் 25 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.
”தேர்வு எழுதுபவர்கள் தேர்விற்கு தயாராகும்போது குறிப்பு எடுத்துக்கொள்ள பல்வேறு பாடக்குறிப்புகள் உள்ளன. இதனால் பலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதைத் தவிர்த்து குறிப்பிட்ட புத்தகங்களை மட்டுமே தேர்வு செய்து படிக்கலாம். அத்துடன் தினமும் செய்தித்தாள் படிக்கவேண்டும். நானும் இதையே பின்பற்றினேன். அதேபோல் தேர்விற்கு முன்பு அனைத்தையும் நினைவுபடுத்திப் பார்ப்பேன். கடந்த ஆண்டு வினாத்தாள்களுக்கு பதில் எழுதிப் பார்ப்பேன். இவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டாலும் சில நேரங்களில் தேர்ச்சியடைய முடியாமல் போகலாம். அத்தகைய சூழலில் மனம் தளர்ந்து போய்விடக்கூடாது. சிவில் சர்வீஸ் அல்லாத நூற்றுக்கணக்கான வழிகளில் சமூக நலனில் பங்களிக்க முடியும்,” என்கிறார் மனீஷ்.
மனீஷ் அவருக்கு முன்மாதிரியாக இருப்பவர் குறித்து பகிர்ந்துகொண்டபோது,
“எனக்கு என்னுடைய அம்மாதான் முன்மாதிரி. அவரிடமிருந்துதான் எனக்கு பலம் கிடைக்கிறது. எத்தனையோ உடல் உபாதைகள் இருப்பினும் கிட்டத்தட்ட 20 அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகும் அவர் மனம் தளராமல் தொடர்ந்து உறுதியாக இருக்கிறார். இவ்வாறு அவர் மீண்டெழும் திறனைக் கண்டு நான் எப்போதும் வியந்து போவேன். இதையே நானும் பின்பற்ற விரும்புகிறேன்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா