தமிழ்நாடு பட்ஜெட் 2024 - இளைஞர்கள், மகளிர் நலனிற்கு பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள்?
இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் பெண்களின் நலன் மற்றும் முன்னேற்றம் மற்றும் கல்வி சார்ந்த பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டசபையில் இன்று தாக்கல் செய்துள்ளார்.
இந்த பட்ஜெட்டில் கல்வி சார்ந்த முக்கிய அறிவிப்புகளோடு, மாணவ, மாணவியர் நலன், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
இதோ அந்த அறிவிப்புகளின் தொகுப்பை இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்...
கல்வி
- அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவ, மாணவியருக்கு மாதம்தோறும் 1,,000 ரூபாய் உதவித்தொகை
- முதல் அமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஊரகப்பகுதிகளில் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
- 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 ஆயிரம் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும்
- இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
- உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட நடப்பு பட்ஜெட்டில் கூடுதலாக 1,245 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ( கடந்த பட்ஜெட்டில் ( 2023-24) உயர்கல்வித்துறைக்கு 6 ஆயிரத்து 967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பு பட்ஜெட்டில் (2024-25) உயர்கல்வித்துறைக்கு 8 ஆயிரத்து 212 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது)
- பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக 3 ஆயிரத்து 743 கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (கடந்த பட்ஜெட்டில் (2023-2024) பள்ளிக்கல்விக்கு 40 ஆயிரத்து 299 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பு பட்ஜெட்டில் (2024-2025) பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு 44 ஆயிரத்து 42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது)
- தொழில்துறை 4.0 தரத்திற்கு 45 பாலிடெக்னிக்குகள் உயர்த்தப்படும்
தமிழ்ப்புதல்வன் திட்டம் அறிமுகம்
- ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
- நான் முதல்வன் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
- தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
புதுமைப்பெண் திட்டம் விரிவு
- அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்திற்கு 370 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதல் அமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்திற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
மகளிர் நலன்
- மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் மலைப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
- பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 13 ஆயிரத்து 720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
- மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் 3 ஆயிரத்து 50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- 10 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
- ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்
ஊதிய மானியம்
- 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும்.
- உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்
இளைஞர் திருவிழாக்கள்
- அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். ஜூன் மாதத்துக்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60,567 இளைஞர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- முதலமைச்சரின் இளைஞர் திருவிழாக்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். இதில் இளைஞர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணர பேச்சு, பாட்டு, இசை, நடனப்போட்டிகள் நடத்தப்படும்.
தமிழ்நாடு பட்ஜெட் 2024-25: தொழில், மருத்துவம், சிங்காரச் சென்னை 2.0 - முக்கிய ஒதுக்கீடுகள் - ஓர் தொகுப்பு!