கபேயுடன் இலவச அதிநவீன கழிப்பறை வசதி: தமிழகத்தின் முதல் 'LooCafe' சென்னையில்!
மக்களின் கழிப்பறைப் பிரச்சினையைத் தீர்க்கும் புதிய முயற்சியாக, தெலுங்கானா நிறுவனத்துடன், மதுரையைச் சேர்ந்த தூயா ஸ்டார்ட் அப் நிறுவனம் லூகபே தூயா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் கன்டெய்னரில் கபே உடன் கூடிய இலவச சொகுசு பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக இருப்பது கழிப்பறைகள் தான். அதிலும் குறிப்பாக பெரிய நகரங்களில் கழிப்பறை வசதி இன்னமும் குறைவாக இருப்பதாகவே புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதனாலேயே மக்கள் சிரமத்துடன், உடல்உபாதைகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது.
சில இடங்களில் சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களை மக்கள் இயற்கை உபாதைகள் கழிக்க பயன்படுத்துவதால், சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசும், தனியார் நிறுவனங்கள் பலவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக ’லூகஃபே' (LooCafe) என்ற பெயரில் சென்னையில் தனியார் நிறுவனம் தூயா ’இன்னோவேஷன்ஸ்’ சார்பில் புதிய வகை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லூ கஃபே
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவசக் கழிப்பறைகள் தொடங்கப்பட்டாலும், அவற்றைப் பராமரிப்பது என்பது கேள்விக்குறியாகி விடுகிறது. அதற்கென தனி பணியாளரை நியமித்தாலும்கூட, அங்கு சுத்தம் என்பது பெரும்பாலும் திருப்திகரமானதாக இருப்பதில்லை. தற்போது இந்தப் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வாகத்தான் லூகஃபேவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த இக்சோரா எப்.எம்., (Ixora FM) நிறுவனமும், மதுரையைச் சேர்ந்த ’தூயா இன்னோவேஷன்ஸ்’ என்ற நிறுவனமும் இணைந்து இந்த 'Loo Cafe’ துவக்கி உள்ளது.
காபி ஷாப்புடன் இணைந்த அதிநவீன கழிப்பறைகள் கொண்ட அமைப்புதான் இந்த ’லூஃகபே.’ இந்தக் கழிப்பறையை பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம். தமிழத்தில் முதல்கட்டமாக சென்னை அடையாறு, இந்திராநகர், எம்.ஆர்.டி.எஸ்., ரயில் நிலையம் அருகே, ராஜிவ்காந்தி சாலையில் லூகபே அமைக்கப்பட்டுள்ளது. உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகளின் ஓய்வறைகளுக்கு இணையாக இது காணப்படுகிறது.

நவீன முறையில் செயல்படும் வண்ணம் இந்த லூகஃபே கண்டெய்னரில் அமைக்கப்பட்டுள்ளது. இலவச கழிப்பறை என்றாலும் அதன் தூய்மையை பராமரிக்கும் வகையில், துர்நாற்றத்தை கணக்கீடும் மீட்டர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.
“துர்நாற்றம் அதிகரித்தால் அந்த மீட்டர் எச்சரிக்கை செய்யும். உடனடியாக அதன் பராமரிப்பவர்கள் மீண்டும் அதனை தூய்மைப்படுத்தி வைப்பார்கள். இலவசக் கழிப்பறைகள் என்பதால், அதன் பராமரிப்பு செலவை, அதன் அருகில் இயங்கும் காபி ஷாப்பின் வாடகையில் இருந்து எடுத்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.”
ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் பல கழிப்பறைகள் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது. அதற்கும் தீர்வு காணும் வகையில் இந்த லூகஃபேக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் கழிப்பறைக்கு சென்று வர ஏதுவாக சரிவுத்தளமும், பக்கவாட்டில் பிடித்து கொள்வதற்காக கம்பி வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வயதினருக்கும் இது பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து எக்ஸோரா எப் எம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அபிஷேக் நாத் கூறுகையில்,
“இந்தப் புதுக் கழிப்பறை வசதியை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரையை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் ’தூயா இன்னோவேஷன்’ஸுடன் இணைந்து லூகஃபே செயல்படும். எங்களிடம் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி உள்ளது. பிரெய்லிக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் பார்வையற்றவர்களும் பயன்படுத்த முடியும்,” எனத் தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தில் சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், அப்போதும் மக்கள் இந்த கழிப்பறையை தடையின்றி பயன்படுத்துவதற்காக அதிநவீன தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, ஈரப்பதத்தை தண்ணீராக மாற்றுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் கழிவறைகளுக்கு தண்ணீர் வழங்கப்படும். இதற்கான தொழில்நுட்பம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என லூகஃபே குழு கூறியுள்ளது.
“இன்னும் ஓராண்டுக்குள் சென்னையில் 50 லூகஃபேக்கள் இருக்கும். இதற்கான பணிகள் துவங்கி விட்டது. விரைவில் வேளச்சேரி, பெசன்ட் நகர் மற்றும் தி.நகரில் இந்த வகை கழிப்பறைகள் இருக்கும். 2024 ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் 100 கழிப்பறைகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த கழிப்பறைகளை கோவை, திருச்சி, மதுரை, கொடைக்கானல் ஆகிய நகரங்களில் அமைப்பது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது,” என தூயா இன்னோவேஷன்ஸ் நிறுவனத் தலைவர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த கழிப்பறைகளின் மற்றொரு சிறப்பம்சம், இதில் பெண்களுக்கான, 'நாப்கின்' வழங்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பது தான். அதில், 5 ரூபாய் போட்டால், 'நாப்கின்' வரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த லூகஃபே கழிப்பறைகளைப் பராமரிப்பிற்கான செலவு, அதனுடன் இணைந்து செயல்படும் காபி ஷாப்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வாடகையில் ஒதுக்கப்படுகிறது. இந்திரா நகரில் அமைக்கப்பட்டுள்ள, 'லூகஃபே' மெட்ராஸ் காபி ஹவுசுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதே போல், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து, பல இடங்களில் இவற்றை நிறுவ திட்டமிட்டுள்ளனர். இதற்காக பிரபல காபி மற்றும் உணவகங்களுடன் லூகஃபே குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

