‘இந்தியாவின் பூகம்பம்’ - கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு குவியும் பாராட்டுகள்!
’இந்தியாவின் பூகம்பம்’ என தனது 40 ஆண்டுகால சாதனையைத் தகர்த்த, 17 வயதான தமிழக செஸ்வீரர் குகேஷை பாராட்டியுள்ளார் ரஷ்ய செஸ் சாம்பியன் காஸ்பரோவ்.
கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் 14 சுற்று முடிவில் இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார். இந்த வெற்றி மூலம் ரஷ்ய செஸ் வீரர் காஸ்பரோவ் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரின் முந்தைய சாதனைகளை குகேஷ் முறியடித்துள்ளார்.
மேலும், 12 வயதில் செஸ் வரலாற்றில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற மூன்றாவது இளைய வீரர் என்ற பெருமையும் குகேஷின் வெற்றி மகுடத்தில் சேர்ந்துள்ளது. குகேஷுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் பலரும், செஸ் ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த இளம் வயதில் இத்தகைய சாதனையை குகேஷ் படைத்ததன் பின்னணியில் அவரது அசாத்தியமான திறமையும், அதனை அவர் உருவாக்கி, மெருகேற்றிக் கொண்ட பலமான பின்கதைச் சுருக்கமும் உள்ளது.
யார் இந்த குகேஷ்?
குகேஷ் கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி சென்னையில் பிறந்தவர் ஆவார். தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்த அவரின் தந்தை ரஜினிகாந்த் ஒரு காது மூக்கு தொண்டை மருத்துவர், தாயார் பத்மா மைக்ரோபயாலாஜிஸ்ட்.
7 வயது முதல் செஸ் விளையாடத் தொடங்கினார் குகேஷ். வழக்கமாக செஸ் வீரர்கள் தங்களது விளையாட்டை மேம்படுத்திக்கொள்ள, செஸ் இன்ஜின் உடன் விளையாடி திறமையை ஊக்குவித்துக் கொள்வார்கள். ஆனால், குகேஷ் 2500 புள்ளிகளை பெறும் வரையில், செஸ் இன்ஜின் அதரவுடன் கூடிய பயிற்சிகளையே மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பயிற்சியாளரின் ஆலோசனைப்படியே நேரடி போட்டிகள் மூலமே அதிக பயிற்சிகளை எடுத்துக் கொண்ட குகேஷ், கடந்த 2015ம் ஆண்டு 9 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான, ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை குகேஷ் வென்றார்.
தொடர்ந்து, 2018ம் ஆண்டு 12 வயதுக்குட்பட்ட உலக இளம் விரர்களுக்கான செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தனதாக்கினார். பல்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை குவித்த அவர், மார்ச் 2018ல் 34வது Cappelle-la-Grande Open இல் சர்வதேச மாஸ்டர் பட்டத்திற்கான புள்ளிகளை பெற்றார்.
கிராண்ட் மாஸ்டர்
தனது 12 வயது ஏழு மாதங்கள் 17 நாட்களில் இந்தியாவின் இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார் குகேஷ். ஆனால், உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனை, வெறும் 17 நாட்கள் வித்தியாசத்தில் அவரிடம் இருந்து நழுவியது. ஆனாலும் மனம் தளராமல் தனது வெற்றிப் பயணத்தை அவர் தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாடில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2700-க்கும் அதிகமான புள்ளிகளை பெற்றதன் மூலம், செஸ் உலகில் இளம் வயதில் 2700 புள்ளிகளை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். அதோடு, உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையையும் 2022ல் அவர் படைத்தார்.
செப்டம்பர் 2023 தரவரிசைப் பட்டியலில், குகேஷ், அதிகாரப்பூர்வமாக விசுவநாதன் ஆனந்தை முந்தி முதலிடத்தில் உள்ள இந்திய வீரராக இருந்தார்.
புதிய சாதனை
அதன் தொடர்ச்சியாக, தற்போது கனடாவில் நடைபெற்ற, FIDE கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டி விளையாடி வெற்றி பெற்று, சாம்பியனாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, கேண்டிடேட்ஸ் போட்டியை வென்ற 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் குகேஷ்.
ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் வகித்து வந்த நாட்டின் முதல் நிலை வீரர் என்ற பட்டத்தை, 36 ஆண்டுகளுக்குப் பிறகு பறித்து குகேஷ் சரித்திரம் படைத்துள்ளார். அதேபோல், ரஷிய செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் தனது 20 வயதில் 1984-ம் ஆண்டில் கேன்டிடேட் செஸ் போட்டியில் பட்டம் வென்றதே முந்தைய இளம் வயது வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது. அவரது 40 ஆண்டு கால அச்சாதனையையும் தற்போது குகேஷ் தகர்த்துள்ளார்.
இந்தியாவின் பூகம்பம்
தங்களின் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ள, குகேஷின் இந்த வெற்றியைப் பாராட்டி, விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் காஸ்பரோவ் சமூகவலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில், குகேசை பூகம்பத்துடன் ஒப்பிட்டுள்ளார் காஸ்பரோவ்.
'குகேசுக்கு வாழ்த்துகள். செஸ் உலகில், புவியின் மேல்தட்டுகளை மாற்றி அமைத்து டொரோன்டோவில் உச்சத்தை தொட்டு இருக்கிறார், இந்த இந்தியாவின் பூகம்பம். உயரிய பட்டத்துக்காக சீன சாம்பியன் டிங் லிரனுடன் விளையாட உள்ளார். இந்த போட்டியை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்,' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக உலக செஸ் சாம்பியன்ஷிப் விளையாடுவதற்கு தகுதியும் பெற்றுள்ளார் குகேஷ். இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் அவர் மோத உள்ளார். இந்தப் போட்டியில் விளையாடும் இளைய வீரர் குஷேஷ் என்பதால், இதிலும் அவர் வெற்றி பெற்று புதிய வரலாற்றுச் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.