தோசையின் சுவைக்கு வெள்ளையரை அடிமையாக்கிய தமிழர்: நியூயார்க்கில் கொடிகட்டிப் பறக்கும் ’தோசாமேன்’
வேலை தேடி நியூயார்க் சென்ற இலங்கைத் தமிழரான திருக்குமார், தனது தோசையின் சுவைக்கு அந்நகர மக்களையே அடிமையாக்கி வைத்துள்ளார் என்பது ஆச்சரியத்துக்குரியது.
பண்டைக்காலம் முதலே தமிழன் தடம்பதித்து, கொடி நடாத நாடே இல்லை எனும் அளவுக்கு தமிழரின் கலாச்சாரமும், பண்பாடும், வாழ்வியல் நெறிகளும் உலகறிந்தது.
இன்றளவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பெரும்பாலான கணிப்பொறி நிறுவனங்களில் இந்தியர்கள், அதிலும் குறிப்பாக தமிழர்கள்தான் பணிபுரிந்து கோலோச்சி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தளவுக்கு அறிவுத் திறனும், பணியின் மீதுள்ள ஈடுபாடும், கொடுத்த பணியை சிறப்பாக செய்யும் திறனுமே தமிழரின் இந்தப் பெருமைக்குக் காரணம். இப்படி ஓவ்வொருவரும் ஓவ்வொரு விதமாக தங்களின் திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கும்போது, வேலை தேடி நியூயார்க் வந்த இலங்கை தமிழரான திருக்குமார், தனது தோசையின் சுவைக்கு அந்நகர மக்களையே அடிமையாக்கி வைத்துள்ளார் என்பது ஆச்சரியத்துக்குரியது.
நகரின் முக்கியப் பகுதியில் உள்ள ஓர் தெருவில் சிறிய தோசைக் கடை வைத்துக் கொண்டு, அங்குள்ள மக்களை தனது விதவிதமான தோசையின் சுவைக்கு அடிமையாக்கி வைத்துள்ள இவரை அப்பகுதி மக்கள் ’தோசைமேன்’ என்றே செல்லமாக அழைக்கின்றனர்.
நியூயார்க் நகரம், நமது மும்பையைப் போல எப்போதும் பரபரப்பாக இயங்கக் கூடியது. அனைவரும் அவரவர் பணிநிமித்தமாக ஓடிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், அவ்வளவு பிஸி ஓட்டத்திலும், எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், தேசைமேனின் தோசைக்கடையில் வரிசையில் நின்றேனும் தோசையை ருசி பார்த்து விட்டுத்தான் பணிக்குச் செல்லவேண்டும் என காத்திருந்து சாப்பிடும் அளவுக்கு விதவிதமான ருசியாக தோசைகளை வழங்குகிறார் திருக்குமார்.
நியூயார்க்கில் உள்ள பென் ரயில் நிலையம் அருகேயுள்ள கிறிஸ்டோபர் தெருவில் தான் உள்ளது 'NewYork Dosa' எனும் திருக்குமாரின் தோசைக் கடை. இவரின் கடையில் சாதாரண தோசையில் தொடங்கி, மசாலா தோசை, கீரை தோசை என சுமார் 40 வகை தோசைகளை சட்னி, சாம்பார், இட்லி பொடி என பல்வேறு சுவை மிகுந்த அயிட்டங்களுடன் தருவதால் கூட்டம் அலைமோதுகிறது.
இவர் தனது தயாரிப்புகளுக்கான பொருளட்கள் அனைத்தையும் வீட்டிலேயே தயாரித்து வழங்குவதால், தரமாகவும், மிகவும் ருசியாக உள்ளன என அப்பகுதி மக்கள் அவருக்குச் சான்றிதழ் வழங்குகின்றனர்.
தோசை மேனுக்கு கலிபோர்னியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள உணவுப் பிரியர்கள் ரசிகர்களாக உள்ளனர். அமெரிக்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இவரது கடை குறித்த அறிந்து கொள்ள வசதியாக இவரது கடை குறித்த விவரங்கள் 42 புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருக்குமார்; சீனா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளிலும் தனது தோசைக் கடையின் கிளைகளைத் திறந்துள்ளார். இவரது கடை திங்கள் முதல் சனிக்கிழமை வரை நண்பகல் 12 மணி வரை பிற்பகல் 3 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
உலகின் பல்வேறு நாட்டு மக்கள் வசிக்கும் நியூயார்க்கில் அமெரிக்கன், மெக்ஸிகன், ஐரோப்பியன், ஆப்கன் உணவகங்களுக்கு மத்தியில் தமிழனின் தோசையையும் போட்டி போட்டு வெற்றி பெற வைத்துள்ளார் தோசை மேன் திருக்குமார்.
அங்கு விற்கப்படும் பர்கரின் விலையை விட குறைவானது தோசைமேனின் தோசை விலை. வெறும் 7 டாலருக்கு தரமான ருசியான தோசைகளை வழங்குவதும் இவரது வெற்றிக்கு முக்கியக் காரணமாகும்.
நியூயார்க்கில் தோசைக் கடை தொடங்கி 18 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள திருக்குமாரின் கடைக்கு வெள்ளையர்களே போட்டிப் போட்டுக் கொண்டு அதிகம் வருகின்றனராம்.
தனது தரமான சுவையான உணவு வகைகளை கடல் கடந்து கொண்டுபோய், தமிழரின் உணவு, பாரம்பரியத்தை உலகறியச் செய்து தமிழனத்துக்கு பெருமை ஏற்படுத்தித் தந்த திருக்குமரன் பெரிதும் பாராட்டுக்குரியவராவார்.
தகவல் உதவி: The New Indian Express