Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

’சொந்த ஊரில் தான் சுயதொழில் செய்வேன்’: சாதித்து காட்டிய கிராமத்து இளைஞன்!

’சொந்த ஊரில் தான் சுயதொழில் செய்வேன்’: சாதித்து காட்டிய கிராமத்து இளைஞன்!

Saturday October 20, 2018 , 5 min Read

சிறு ஊர்களில் பிறந்து, நகரத்தில் படித்த பலரும் கைநிறைய சம்பளத்துடன் நல்ல பணியில் சேர பெங்களூர், மும்பை அல்லது அமெரிக்கா என பரந்துவிடவே நினைப்பதுண்டு. அல்லது சுயதொழில் தொடங்க விரும்புவர்களும், மெட்ரோ நகரங்களில் இருந்தால் மட்டும்மே வளர்ச்சி அடையமுடியும் என்ற நோக்கில் பயணிப்பது வழக்கம். ஆனால் இவர்களுக்கு நடுவில் தான் பிறந்த மண்ணில் சுயதொழில் தொடங்கி அங்குள்ள மேலும் பலருக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் முனைப்புடன் சாதித்து காட்டியுள்ளார் இந்த பொறியாளர்.


சரியான மழை, போதிய வருமானம் வேளாண் தொழிலில் இல்லாத காரணத்தால், சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்த முதல் பட்டதாரியான சரண் குமார், பொறியியல் முடித்தவுடன் சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதே அவரின் பெற்றோரின் கனவாக இருந்தது. ஆனால் சொந்த ஊரில் தான் சுயதொழில் செய்யவேண்டும் என்ற தீர்கமான முடிவில் இருந்த சரண், பிரிண்டிங் நிறுவனம் தொடங்கி இன்று அத்தொழிலில் சிறப்பித்தும் வருகிறார்.

Printarzan நிறுவனர் சரண் குமார்
Printarzan நிறுவனர் சரண் குமார்

சரண் குமார் பின்னணி

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை கஸ்பாபேட்டை அசோகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏ.எம்.சரண் குமார். பிறந்தது வளர்ந்தது எல்லாம் பூந்துறை அசோகபுரம் கிராமத்தில் தான். விவசாயக் குடும்பத்தில் பிறந்த சரண், நவரசம் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், டிப்ளமோ படிப்பை கொங்கு கல்லூரியிலும், பொறியியல் படிப்பை கே.எஸ்.ஆர் கல்லூரியிலும் படித்து முடித்தார். 


தனது பெற்றோரின் விருப்பதிற்காக பொறியியல் படிப்பில் சேர்ந்தார். படிக்கும் போதே தனக்கு பிடித்த டிசைனிங் துறைக்கான போட்டோஷாப், கோரல் ட்ரா, இல்லஸ்ட்ரேடர் போன்ற டிசைனிங் மென்பொருட்களை கற்று, கல்லூரி கருத்தரங்குக்குத் தேவையான சான்றிதழ் போஸ்டர் போன்றவற்றையும், சிறு தொழில் செய்வோருக்கு தேவையான லோகோ, விசிட்டிங் கார்டு ஆகியவைகளையும் டிசைன் செய்தும் கொடுத்து வந்துள்ளார்.

”கல்லூரி காலங்களில் வீட்டில் இருந்து போக்குவரத்து, உணவு போன்ற செலவுக்கு கிடைக்கும் பாக்கெட் மணி, பிறந்தநாள் தீபாவளி பொங்கல் போன்ற விசேஷங்களில் கிடைக்கும் அன்பளிப்பு தொகை போன்றவற்றை மிச்சப் படுத்தி சேமித்து, டிசைனிங் கோர்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் வாங்கிக் கொண்டேன்,” என்கிறார்.

2017 ஆம் ஆண்டு டிகிரி முடித்தவுடன், ஈரோட்டில் சிறு பிரிண்டிங் கடையில் சில மாதங்கள் வேலைக்குச் சென்று தொழிலின் நுணுக்கங்களை கற்று தேர்ந்த சரண் குமார், சொந்தமாக ’பிரிண்டார்சன்’ (PrinTarzan) என்ற ஸ்டார்ட்- அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அச்சுத் தொழில் நலிவடைந்து உள்ளதாகவும், இதில் எந்த வளர்ச்சியும் இருக்காது என்றும் பலரும் ஆரம்பத்தில் இவரிடம் கூறியுள்ளனர். 

இருப்பினும் தனது துறையில் இருக்கும் சவால்களை புரிந்து கொண்ட சரண், காலத்திற்கு தகுந்தாற்போல தொழிலை சாமர்த்தியமாக தொடங்கியுள்ளார். 

தனக்கான தனி வழி

கடன் வாங்கி லட்சக்கணக்கில் செலவு செய்து பிரிண்டிங் மெஷின் வாங்கிப் போடாமல், நெட்வொர்க்கிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் தனது பகுதி மக்களிடம் இருந்து பல டிசைனிங் பிரிண்டிங் ஆர்டர்களை பெற்று தானே டிசைன் செய்து, சிறிய அளவில் அச்சு தொழில் செய்வோர்களுக்கு பிரிண்டிங் வாய்ப்பை ஏற்படுத்தி நலிவடைந்த தொழிலை தொடர்ந்து நடத்தியுள்ளார். 

”இங்கு எந்த தொழிலும் நலிவடைந்த தொழில் அல்ல, காலத்திற்கு தகுந்தாற்போல் தொழிலை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே என் நம்பிக்கை. அச்சுத் தொழில் மட்டும் அல்ல, இது எங்கள் கொங்கு பகுதியின் வேளாண் தொழிலுக்கும் பொருந்தும்,” என்றார் சரண்.

மழை பொய்த்து போன எங்கள் பகுதியில் குறைந்த நீரில் செயற்கை உரமில்லாமல் எங்களின் வீட்டிற்கு தேவையான பயிர் காய்கறிகளை நாங்களே உற்பத்தி செய்து சிறிய இடத்தில் கால்நடைகளை வளர்த்தி பண்ணை தோட்ட முறையை அமைத்து, பண்டம் மாற்றி வேளாண் தொழிலுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, தற்சார்பு வாழ்க்கையை நோக்கி நகர்கிறோம். எங்கள் பகுதியில் என்னை போல, பலரும் வேளாண் தொழிலுடன் மாற்று தொழிலும் செய்து வருகின்றனர் என்று விரிவாக விளக்கினார்.

“இன்று பலர் சுய தொழில் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எங்கள் கொங்கு மண்டலத்தில் ஸ்டார்ட் அப் குழுவை நாங்களே உருவாக்கி, ஒருவருக்கு ஒருவர் சிறுதொழிலில் மேம்பட உதவிக் கொள்கிறோம்.”

இது போன்ற படைக்கும் திறனுள்ள துறையில் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தினால் தொடர்ந்து ஆர்டர்களை பெற முடியும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.


சொந்த ஊரில் தான் தொழில் புரியவேண்டும் என்ற எண்ணத்தின் அடித்தளம் என்ன? 


எங்கள் கிராமத்து இளைஞர்கள் பலரும் வேளாண்மையில் உள்ள சவால்கள், படித்த படிப்பிற்கு உரிய வேலையின்மை, வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதி நெருக்கடி போன்ற காரணத்தால் தான் தொலைவில் பெருநகரங்களிலுள்ள கார்பரேட் நிறுவனங்களை நாடி வேலைக்குச் செல்கின்றனர். பெரும்பாலானோர் வேலையில் திருப்தில்லாமல் மன அழுத்ததுடன் நிர்பந்தத்தின் அடிப்படையில் மாத சம்பளத்திற்கு பெரு நகரத்தில் வேலைக்கு போகிறார்கள், என்று விளக்குகிறார் சரண்.


நகரங்களில் நமது தேவைகள் பெருகி, ஆடம்பர செலவுகள் அதிகரித்து அதற்காக வாழ்நாள் முழுவதும் சிரமப்படும் சூழல் ஏற்படுகிறது. எங்க கிராம மக்களுக்கு மால், மல்டிப்ளெக்ஸ், ஷாப்பிங், கிரெடிட் கார்டு போன்றவை எதுவும் தெரியாது, இருந்த போதும் வேளாண்மை மற்றும் சிறுதொழில் செய்து சிறப்பாக வாழ்ந்து காட்டியவர்கள், என்று பெருமையுடன் சொல்கிறார். 

”பள்ளி, கல்லூரிக் காலங்களில், சுயதொழில் செய்வதற்கான திறன்களை வளர்த்திக் கொண்டால், நாம் பிறந்து வளர்ந்த ஊரை விட்டுச் சென்று, பொருளாதார தேவைக்காக வாழ்க்கையை தொலைக்க வேண்டிய அவசியம் வராது. சொந்த ஊரில் சொந்த தொழில் செய்வதால், எனக்கு குடும்பம், பெற்றோர், நண்பர்களுடன் செலவிட கிவாலிட்டி டைம் கிடைக்கிறது.” 

ஓய்வு நேரத்தில் வீட்டிற்குத் தேவையான பால், காய்கறிகளை ரசாயனம் இல்லாமல் எங்கள் தோட்டத்தில் உற்பத்தி செய்து கொள்கிறேன். பொருளாதார தேவைக்கு எனது சிறு தொழிலில் போதிய வருமானம் கிடைக்கிறது, கிராமம் சார்ந்த வாழ்க்கை மன நிம்மதியை தருகிறது, என்று தன் மனதிருப்தியை பகிர்கிறார் சரண்.

PrinTarzan வளர்ச்சி மற்றும் வருவாய்

ப்ரிண்டிங் தொழில் வளர்ச்சி பற்றி கேட்டதற்கு, நகரங்களில் தன் உறவினர்கள், நண்பர்கள் ஐடி துறையில் ஒரு வருடத்தில் வாங்கும் சம்பளத்தை, தன்னால் தன் சுயதொழில் மூலம் சொந்த ஊரிலேயே மன நிறைவுடன் சம்பாதித்து விடமுடிகிறது என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சரண் குமார்.

image
image
”தற்போது வருமானமாக மாதம் சுமார் 30 ஆயிரம் வரை பெற முடிகிறது. ஈரோடு பகுதியில் சிறுதொழில் செய்வோர்கள் டிசைனிங் பிரின்டிங் தேவைக்கு பிரிண்டார்சன் தான் என்பது போல் பிராண்டை உருவாக்கி வருகிறோம். குறைந்த லாபத்துடன், சிறந்த டிசைனிங் பிரின்டிங் சர்வீஸ் செய்வதால், புது புது வாடிக்கையாளர்கள் நிறைய பெற்று வருகிறேன்.” 

தொழிலின் முதல் படியில் இருக்கும் இந்த காலகட்டத்தில் , தனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பதே மிகப் பெரிய வருமானம் என்கிறார். வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக தொழிலை விரிவுப் படுத்தி, தொழிலின் மூலம் சொந்த ஊரில் மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பும் வாழ்வாதாரமும் உருவாக்கித் தர திட்டமிட்டுள்ளார்.  

முதலீடு இருந்தால்தானே சுயதொழில் தொடங்கமுடியும்...?

தன்னம்பிக்கை மற்றும் துறைக்குத் தேவையான திறன் தான் எங்களின் பெரும் முதலீடு. 

சிறுதொழில் என்பது ஆழம் பார்த்து படிப்படியாக முன்னேறுவது. எந்த தொழிலிலும் உடனடியாக பெருந்தொகையை முதலீடு செய்வது, கடன், பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும். அதனால் நாங்கள் வரும் வருமானத்தில் பகுதி பகுதியாக சிறு முதலீடு செய்து தொழிலை வளர்த்தி வருகிறோம், என்றார் தெளிவாக.

தோல்வி இல்லாத சுயதொழிலா?

எல்லாத்தொழிலுக்கும் அதற்கான சவால்களும், தோல்விகளும் எழத்தான் செய்யும். அதனால்,

”சிறுதொழிலில், ஆர்வம் அனுபவம் உள்ளவர்களை வழிகாட்டியாக வைத்து அவர்களின் ஆலோசனை அறிவுரைகளைக் கேட்டு கற்று முன்னேறி வருகிறேன். ஒருவருடைய அனுபவம் பல புத்தகங்கள் படிப்பதற்கு சமம்,” என்றார் சரண்.

ஒரே வருடத்தில் சுமார் 100 சிறுதொழில் முனைவோருக்கு தேவையான விசிட்டிங் கார்ட், புக்லெட், அலுவலக கவர்கள், போஸ்டர்கள், பேனர்கள், டி-சர்ட், பைகள் என்று பலவகைகளில் ப்ரிண்ட் சேவைகளை செய்து குவிக்கின்றனர் ப்ர்ண்டார்சான் குழுவினர். 

அனைத்து வகையான டிஜிட்டல் டிசைனிங், பிரிண்டிங், ப்ராண்டிங், மார்கட்டிங் என எல்லா சேவைகளையும் ஒரே இடத்தில செய்து தருகிறார்கள். டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் இவர்களுக்கு ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளது. இத்தொழிலை ஆன்லைன் மூலம் மேலும் சில இடங்களில் படிப்படியாக விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளார் சரண் குமார்.


நெஞ்சில் உறுதியும், மனதில் திடமும் இருந்தால் சுயதொழிலில் எங்கும் வெற்றி பெறலாம் என்பதற்கு இந்த மண்ணில் மைந்தன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.