கோடிங்கில் திறனை வளர்த்து பி.டெக் முடித்து டெக்கி ஆன தஞ்சை காய்கறிக் கடைக்காரரின் மகள் குணசுந்தரி!
தஞ்சாவூரைச் சேர்ந்த குணசுந்தரி புதிய தொழில்நுட்பங்கள் மீதிருந்த ஆர்வம் காரணமாக பயிற்சி எடுத்துக்கொண்டு Ernst & Young, Capgemini போன்ற பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்.
குணசுந்தரி தஞ்சாவூரைச் சேர்ந்தவர். பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி படிப்பில் சுட்டி. எல்லாவற்றுலும் முதலிடம் பிடித்துவிடுவார். கோடிங் படிக்கவேண்டும் என்பது இவரது ஆசை. மற்ற புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டினார். புத்தம் புதிதாக அவ்வப்போது அறிமுகமாகும் தொழில்நுட்பங்களைத் தேடித்தேடி கற்றுக்கொள்ள விரும்பினார்.
குணசுந்தரியின் சகோதரனுடன் சேர்ந்து அவரது அப்பா காய்கறி கடை நடத்தி வருகிறார். குணசுந்தரிக்கு படிப்பில் இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து அவர் என்ஜினியரிங் படிக்க குடும்பத்தினர் உதவினார்கள்.
“நான் சாஃப்வேர் டெவலப்பர் ஆகணும்னு எங்கப்பா ஆசைப்பட்டார்,” என்கிறார் குணசுந்தரி.
ஆரம்ப நாட்கள்
தஞ்சாவூர் தமிழகத்தின் மிகப்பெரிய நகரம். இருந்தபோதும் குணசுந்தரி எதிர்பார்த்த அளவிற்கு தொழில்நுட்பத் திறன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமில்லை.
குடும்பத்தில் முதல் தலைமுறையாக இவர் பி.டெக் படித்தார். தஞ்சாவூர் அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் என்ஜினியரிங் தேர்வு செய்தார்.
கல்லூரியில் புரோக்கிராமிங் லேங்குவேஜ் பைத்தான் பற்றிய அறிமுக வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுபோல் பல்வேறு பிரிவுகளையும் அறிமுகப்படுத்தலாமே என்று யோசித்தார். புதிய தொழில்நுட்பங்களில் எத்தனை மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகள் ஏன் அதிகம் கிடைக்கவில்லை? இந்தக் கேள்வி அவரது மனதில் எப்போதும் இருந்து வந்தது.
கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது Tech Saksham என்கிற திட்டத்தில் சேர்ந்தார். தொழில்நுட்பப் பிரிவில் பெண்கள் திறன் பயிற்சி பெறவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதில் சேர்ந்து புரோக்கிராமை முடிக்கும் மாணவர்களுக்கு பாடத்தை நிறைவு செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். இண்டர்ன்ஷ்ப் உதவியும் கிடைக்கும்.
“ஒரு புரோக்கிரம் கோட் பிழையில்லாம எக்சிக்யூட் பண்ணும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்,” என்கிறார்.
Tech Saksham முதல் வகுப்பிலேயே முதல் கோட் மிகச்சரியாக கிராக் செய்தார் குணசுந்தரி. இப்படித்தான் தொழில்நுட்பப் பிரிவில் இவரது பயணம் தொடங்கியது. வெப் டிசைனிங் பிரிவிலும் நிபுணத்துவம் பெற்றார்.
Tech Saksham ஆலோசகர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் வழிகாட்டலுடன் ஆறு மாதங்களிலேயே வெப் டிசைனிங் கற்றுக்கொண்டார்.
கோடிங்
புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்து ஏற்பாடு செய்யப்படும் பயிற்சி பட்டறைகளில் பயிற்சி எடுத்துக்கொண்டார். மென் திறன்கள், வேலை வாய்ப்பு பெற உதவும் பயிற்சி போன்றவற்றில் கலந்து கொண்டார். திறன்களை மேலும் மெருகேற்றிக்கொள்ளும் வகையில் செயல்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
அடுத்தபடியாக வேலை வாய்ப்புகளை ஆராயத் தொடங்கினார். அதற்கேற்றவாறு தன்னைத் தயார்படுத்திக்கொண்டார். நேர்காணலில் எப்படிப் பேசவேண்டும், எப்படி தன்னை சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பன போன்ற பயிற்சியும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
அவரது கடினமான உழைப்பிற்குப் பலன் கிடைத்தது. Ernst & Young, Capgemini போன்ற பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்தது.
குணசுந்தரியின் கனவு நிறைவேறியது. முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரியாக இருந்துகொண்டு இந்த அளவிற்கு உலகளாவிய நிறுவனங்களில் இவர் வேலையில் சேர்ந்திருப்பது கூடுதல் சிறப்பு.
”எனக்கு முதல் வேலை கிடைச்சதை என் வீட்ல சொன்னப்போ அவங்களால நம்பவே முடியலை. ரெண்டாவது ஆஃபர் லெட்டர் கிடைச்சதுக்கப்புறம்தான் அவங்க நம்பினாங்க,” என்கிறார் மகிழ்ச்சியுடன்.
அவர் மேலும் கூறும்போது,
“என் திறமை மேல அவங்களுக்கு நம்பிக்கை வந்துது. இப்ப டெக் புரொஃபஷனலா இருக்கேன். அதுமட்டுமில்ல, டயர் 1 சிட்டிக்கு மாற்றலாகி போகவும் அவங்களை சம்மதிக்க வெச்சிட்டேன்,” என்று உற்சாகம் பொங்க தெரிவிக்கிறார்.
குணசுந்தரி மைக்ரோசாஃப்ட், SAP போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தொடர்ந்து திறன்களை மெருகேற்றி வருகிறார்.
குடும்பத்தில் மூத்தவரான குணசுந்தரி தன் உடன்பிறந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் முன்மாதிரியாக விளங்குகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா